Tamil News
Home செய்திகள் எந்த அரசியல் தீர்வும் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் –...

எந்த அரசியல் தீர்வும் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் – உருத்திரகுமாரன்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை கருத்தில் கொண்டு, அரசியல் தீர்வானது ஈடுசெய்நீதியின் அடிப்படையிலும், ஈழத்தமிழர் தெரிவு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

நடைமுறைச் சாத்தியம் என கூறி சிங்களத்தின் அரசியல் சூழ்ச்சிக்குள் தமிழர் தலைவர்கள் சிக்கிக் கொள்வார்களேயானால், மாவீர்களை தம் நெஞ்சக்கூட்டில் ஏற்றி வைத்திருக்கும் நமது மக்களால் நிராகரிக்கப்படுவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத்தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு எற்பாடுகளுடன் இறுகப் பிணைக்கப்பட வேண்டும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை கருத்தில் கொண்டு அரசியல் தீர்வானது ஈடுசெய்நீதியின் அடிப்படையிலும், ஈழத்தமிழர் தெரிவு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அமையாத ஏற்பாடு எதுவும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதிக்கிடையில் தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பு சிறிலங்கா அரச தலைவரால் வெளியிடப்பட்டமை சில மட்டங்களில் ஆரவாரங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளமையினை அவதானிக்க முடிவதோடு, இது கேலிக்கும் நகைப்புக்கும் உரியதோர் அறிவிப்பு என்பதனை அரசியல் புரிந்தோர் அனைவரும் அறிவர் எனக் தனதறிக்கையில் குறிப்பிட்டு பிரதமர் வி.உருத்திரகுமாரன், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையினை எவ்வளவு தரம் தாழ்த்தி; வெளிப்படுத்தவே சிறிலங்கா அரசுத் தiலைவர் விரும்புகிறார் என்பதனை இவ் அறிவித்தல் ஊடாக நாம் புரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் புத்தாண்டு அறிக்கையின் முழுவடிவம் :

ஈழத் தாயக, தமிழக, உலகத் தமிழ் உறவுகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வதில் நான் பேருவகையடைகிறேன்.

புத்தாண்டின் மலர்வு எப்போதும் மக்களுக்கு மகிழ்ச்சிiயும் உற்சாகத்தையும் தரக் கூடியது. இன்று பிறந்துள்ள ஆங்கிலப் புத்தாண்டைத் தொடர்ந்து, தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் மலரும் தமிழர் புத்தாண்டை தமிழ்மக்கள் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற நம்பிக்கையுடன் வரவேற்று தமது வாழ்வை புதிய உற்சாகத்துடன் ஆரம்பிப்பார்கள். மீண்டும் தொடங்கும் மிடுக்குடன், சவால்கள் எதனையும் எதிர்கொள்ளும் துணிச்சலுடன் புத்தாண்டை எதிர்கொள்ளும் பண்பாட்டு மரபு தமிழ் மக்களுக்கு உள்ளது. இந்தப் பண்பாட்டுத்தளத்தில் நின்று புத்தாண்டில் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் வாழ்வு மேலும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்து சென்ற 2022ம் ஆண்டு உலகம் தழுவியரீதியிலும் இலங்கைத்தீவிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஆண்டாக அமைந்தது. ரஸ்ய – உக்ரேனியப் போர் உலகலாவியரீதியில் மக்களின் வாழ்விலும், உலக அரசியல் ஒழுங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒன்றாக அமைந்துள்ளது. இலங்கைத்தீவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பெரும் மக்கள் போராட்டத்துக்கு வித்திட்ட போதும் சிங்கள ஆளும் வர்க்கம் ஆள்மாற்றத்தின் ஊடாகத் தனது நலன்களை நிலைநிறுத்திக் கொண்டது.

நான் எனது கடந்த மாவீரர் நாள் அறிக்கையில் சுட்டிக் காட்டியபடி உலக அரசியல், ஒற்றைமைய ஒழுங்கில் இருந்து விடுபட்டு இரட்டை மைய அரசியல் ஒழுங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இரட்டை மைய அரசியல் ஒழுங்கு எமக்கு வாய்ப்பான சந்தர்ப்பங்களைத் தரக்கூடியது. இதே வேளை நாம் இன்னொரு விடயத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும். உலக அரசியல் ஒழுங்கு அரசுகளை மையப்படுத்தியே சுழல்கிறது. அரசுகள் தமது நலன்களை அடைந்து கொள்வதற்காக அம்மணமாக உலவக் கூடியவை என்றொரு கூற்றும் உண்டு. இச் சூழலில் அரசற்ற தேசமாகவுள்ள ஈழத்தமிழர் தேசம் தனது தன்னாட்சி உரிமையினை நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு சவால்களை எதிர் கொள்ள வேண்டி வரும் என்பதனை நாம் மறந்து போதல் ஆகாது.

சிங்கள அரசு இன்று உள்நாட்டுரீதியாகவும் அனைத்துலகரீதியாகவும் பலவீனமான அரசாக மாறியுள்ளது. இருந்தும் இதனை முற்றிலும் தோல்வியடைந்த ஓர் அரசாக மாறி விடாது பாதுகாக்கும் அக்கறை சில பலம் வாய்ந்த அனைத்துலக அரசுகளிடம் உள்ளது என்பதனையும் அவதானிக்க முடிகிறது. இதன் காரணமாக ஆட்சியாளர்களின் முகங்களை மாற்றி அரசை பாதுகாக்கும் முயற்சி இப்போது நடைபெறுகிறது. இருந்த போதும் இலங்கைத்தீவின் நெருக்கடி ஆழப்புரையோடியிருப்பதால் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் பல்வேறு நெருக்கடியினை எதிர்கொள்ளும் நிலை இன்னும் நீண்ட காலத்துக்குத் தொடரும் என்ற கணிப்பு நிபுணர்கள் மட்டத்தில் உண்டு.

இலங்கைத்தீவின் தேசிய அரசியற் பிரச்சினைக்கு 2023ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதிக்கிடையில் தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பு சிறிலங்கா அரச தலைவரால் வெளியிடப்பட்டமை சில மட்டங்களில் ஆரவாரங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளமையினை அவதானிக்க முடிகிறது. இது கேலிக்கும் நகைப்புக்கும் உரியதோர் அறிவிப்பு என்பதனை அரசியல் புரிந்தோர் அனைவரும் அறிவர். சிறிலங்கா அரச தலைவருக்கும் இது நன்கு தெரியும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையினை எவ்வளவு தரம் தாழ்த்தி; வெளிப்படுத்த அவர் விரும்புகிறார் என்பதனை இவ் அறிவித்தல் ஊடாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை அடிப்டையில் சிங்கள தேசத்தின் இனவழிப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஈழத்தமிழர் தேசம் ஆரம்பித்த போராட்டத்தின் விளைவாகத் தோற்றம் பெற்றதாகும். இதனால் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத்தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு எற்பாடுகளுடன் இறுகப் பிணைக்கப்பட வேண்டும். முள்ளிவாய்;க்கால் இனப்படுகொலையினை கருத்தில் கொண்டு அரசியல் தீர்வானது ஈடுசெய்நீதியின் அடிப்படையில் அடிப்படையிலும், ஈழத்தமிழர் தெரிவு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அமையாத ஏற்பாடு எதுவும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை.

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதற்கு ஈழத்தமிழர் தேசத்தின் இருப்பும், தாயகப் பிரதேசமும், சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வின் முதற்கட்டமாக போரினால் சீரழிக்கப்பட்ட தமிழர் தாயகத்தை தமிழ் மக்களே மீளக் கட்டியெழுப்பும் அதிகாரம் கொண்ட இடைக்கால முன்னேற்பாடு செய்யப்படுதலும் அவசியம். திம்பு பேச்சுவார்த்தைக் காலம் தொட்டு விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட 2002 -2006 ஆம் ஆண்டு காலப் பேச்சுக்கள் வரை இவற்றை அடையாளப்படுத்தக்கூடிய பல முன்னுதாரணங்களைக் கொண்டவை. இவை தமிழர் தரப்பின் எப் பேச்சுவார்த்தை முயற்சிகளையும் வழிநடாத்தக்கூடிய வரலாற்று வழிகாட்டிகளாக உள்ளன.

இதனால், தமிழர் தலைவர்கள் எவரும் இந்த அடிப்படைகளைக் கைவிட்டு தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என நம்புவதோ அல்லது கிடைக்கக் கூடியவற்றைப் பெறுவோம் எனச் சிந்திப்பதோ எம்மை நாமே பலவீனப்படுத்தவதாக அமைந்து விடும். எமது அடிப்படைக் கோட்பாடுகளை சிங்கள தேசம் ஏற்றுக் கொள்ள மறுப்பின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதற்கான சூழல் நாடடில் இல்லை என்பதனை வெளிப்படுத்தி சாத்தியமான வழியிலெல்லாம் நமது போராட்டத்தை நாம் தொடர வேண்டும். இதை விடுத்து நடைமுறைச் சாத்தியம் எனக் கூறி சிங்களத்தின் அரசியல் சூழ்ச்சிக்குள் தமிழர் தலைவர் எவரும் சிக்கிக் கொள்வார்களேயானால் அவர்கள், மாவீர்களைத் தம் நெஞ்சக்கூட்டில் ஏற்றி வைத்திருக்கும் நமது மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்பதனையும் இவ் வருட புத்தாண்டுச் செய்தியாக வெளிப்படுத்த விரும்புகிறேன்.

2023ம் ஆண்டு ஈழத்தமிழர் தேசம், தமிழ்நாடு, புலம்பெயர் மற்றும் உலகத் தமிழர்கள் இணைந்த வகையில் செயற்பட்டு தமிழீழ மக்களின் விடுதலைப் பயணம் மேலும் வலுவுடன் முன்னேற உழைப்போம் என உறுதி பூணுவோமாக.

தமிழரின் தலைவிதி தமிழர் கையில்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

இவ்வாறு தனது புத்தாண்டுச் செய்தியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version