இலங்கையில் எந்தவொரு நகர்வு நடந்தாலும் அதன் விளைவு இந்தியாவிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நிச்சயமாக இருக்கும் – மேஜர் மதன் குமார்

இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள் இந்திய தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று இந்திய  பத்திரினையான இந்து ஆங்கில  பதிப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இச் செய்தி பல விவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில், இந்தியாவின் முன்னாள் புலனாய்வுத் துறை அதிகாரி மேஜர் மதன் குமார் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி….

கேள்வி  :-

இலங்கையின் கடல் பகுதியூடாக சீன நாட்டவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவுவதாக இந்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ள கருத்தின் பின்னனி என்ன?

இந்திய புலனாய்வுத்துறை என்பதை விட, இவ்வாறான ஒரு தகவலை இந்திய நாளேடான ஹிந்து   வெளியிட்டிருக்கின்றது.  அதன் பிறகு  இந்த தகவல் குறித்து சில ஊடகங்களில்   விவாதம் நடந்தது. அடிப்படை என்னவென்றால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறிப்பாக  ஈழத் தமிழர்கள் வாழக்கூடிய  வடக்கு பகுதியிலிருந்து இந்தியா மிக மிக அருகாமையில் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஒரு வார காலம் முன்பு இலங்கையிலிருந்து இந்தியாவரை, அதாவது  தமிழகம் வரை நீந்தியே ஒரு சிறுவன்   வந்து சேர முடிந்தது. அப்படிப்பட்ட மிகவும் அருகில் இருக்கக்கூடிய இடத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று சீனாவின் ஆதிக்கம் முன்பு இருந்ததைவிட கொஞ்சம் அதிகமாக இருப்பது என்பது கவலைக்குரிய விடயம் இந்தியாவிற்கு.

கடல் பாசி வளர்ப்பு அதற்கு உண்டான வர்த்தகம் என்ற போர்வையில் அவர்கள் இருந்தாலும் அங்கு இருக்கக்கூடிய தமிழர்களும் அதை இரசிக்கவில்லை.  அதற்குண்டான வரவேற்பையும் கொடுக்கவில்லை. ஏனென்றால் சீனாவின் வெளிவுறவுக்கொள்கை  குறிப்பாக கடல் வளத்தை அவர்களுடைய அண்டைய நாடுகளான பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் எந்தளவிற்கு  சீனா சூறையாடிருக்கிது  என்பதை இலங்கையில் இருக்கக்கூடிய மீனவ சமூகத்திற்கும் இந்தியாவில் இருக்கக்கூடிய மீனவ சமூகத்திற்கும் நன்றாகவே தெரியும்.

அப்பொழுது அங்கு இருக்கும் பூர்வ குடி மக்களான இலங்கையின் ஈழத்தமிழர்கள் 2009 ற்கு பிறகு அங்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை, இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த பல இடங்களில் இருந்து சுதந்திரமாக தகவல்கள் இன்னும் வெளியுலகிற்கு தெரிவதற்கு வாய்ப்புக்கள் 2009 லிருந்து இன்றுவரை மிகவும் குறைவாக இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அது ஒரு இராணுவ பகுதியாக இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் போது பத்திரிகை சுதந்திரமோ ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய அடிப்படை சுதந்திரம் ஓரளவிற்கு மட்டுப்படுத்தப்படும் என்பது நிதர்சனமான உண்மை.  இப்பொழுது சீனர்கள் அங்கு இருப்பது, சீனர்களை சீனாவிலிருந்து வேலைக்கு வருபவராக இருந்தாலும் சரி வர்த்தகம் செய்பவராக இருந்தாலும் சரி சீனாவின் அடிப்படை கோட்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் .

சீனாவின்   கம்னியூசியம் சித்தாந்தம் என்ன சொல்கிறதென்றால் அவர்களுடைய மக்கள் அங்கு இருக்கக்கூடிய நிறுவனங்கள் அனைத்துமே கம்னியூசிய சித்தாந்தத்திற்கும் கம்னியூசிய  அரசாங்கத்திற்கும் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் முழு அங்கீகாரத்தையும் கொடுக்க வேண்டும்  என்பது அவர்களுடைய ஒரு அடிப்படை சட்டம்.

இதை யாரும் மீற முடியாது. அதன் பொருள் என்னவென்றால் சீன நிறுவனங்கள்,  அங்கிருக்கக்கூடிய மக்கள்,சீன குடியுரிமை பெற்றவர்கள் உலகத்தில் எங்கு சென்று வேலை செய்தாலும் ஒரு நிறுவனத்தை நடத்தினாலும் சீன அரசிற்கு அதாவது சீன அரசு  என்பதை விட சீன கம்னிஸ் பாட்டியிற்கு (“லோயல்“ என்று சொல்லப்படுகின்ற அவர்களுக்கு)  ஒரு அடிப்படை   கட்டுப்பாடு   இருக்கிறது. அந்த கட்டுப்பாடு என்னவென்றால், அவர்கள் சீன நிறுவனங்களை வேறெங்கும் நடத்தும் பொழுது சீன கம்னியூசிய அரசாங்கத்திற்கு தேவையான சில காரியங்களை அவர்கள் மறுக்க இயலாது. அந்த காரியங்கள் என்னவென்றால் உளவு பார்ப்பது, கம்னியூசிய சித்தாந்தத்தைக் கொண்டு போய் சேர்ப்பது, கம்னியூசியத்தை வளர்ப்பது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். எப்படி ஒரு உத்தரவு வந்தாலும் அந்த நிறுவனத்தை இயக்க கூடியவர்கள், வெளிநாட்டில் இருக்கக்கூடியவர்கள்  அதை மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் சீன இராணுவ உள்ளே வரவில்லை.  சீருடை அணிந்த சீன இராணுவம் உள்ளே வரவில்லை.   இவர்கள் வெறும்  வர்த்தகர்கள்,  நிறுவனங்கள் நடத்த வந்தவர்கள் என்று   பொருள் கொள்ள முடியாது . அது தவறாக சென்று முடிந்துவிடும் . இந்தியாவின் கவலை அதுதான்.

இலங்கையில்  யாழ்ப்பாணத்தில் உள்ள என்னுடைய நண்பர்கள் சிலரிடம்  பேசினேன் அவர்கள் சொன்னார்கள்,   இல்லை சீன இராணுவ உடையில் நாங்கள் யாரையும்  பார்க்கவில்லை  என்று.    அங்கு இருக்கக்கூடிய சீனாவின் பிரஜைகள், சீனாவின் குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் இராணுவத்திற்கு ஆதரவாகவும் அவர்களுடைய உளவுத்துறைக்கு ஆதரவாகவும் செயல்பட வேண்டிய நிலை கட்டாயம் இருக்கின்றது.

அவர்களுக்கு விருப்பம், விருப்பமில்லை என்பதை கூற முடியாது. அது இந்தியாவிற்கு நேரடியாக ஒரு பாதுகாப்பற்ற அச்சுறுத்தலை கொடுப்பது என்பது தான் இந்த ஒரு குறிப்பிட்ட  செய்தியில் உள்ள சாராம்சம்.

கேள்வி:-

இந்த செய்தி உண்மையெனில் இலங்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நாடா?

இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை பூகோள ரீதியில், நான்  முன்னரே  கூறியது போல், இந்தியாவிலிருந்து  இருக்கக்கூடிய மொத்தம் 4000km தூரம் உள்ள நீளமுள்ள கடல் பகுதியில் மிகவும் அருகில் இருக்கக்கூடிய நாடுகள் இலங்கை இரண்டாவது மாலைத்தீவு. அப்பொழுது இலங்கையில் எந்தவொரு நகர்வு நடந்தாலும் அதன் விளைவு இந்தியாவிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நிச்சயமாக இருக்கும். உதாரணத்திற்கு இலங்கை கஞ்சா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவது என்ற நடவடிக்கையை நோக்கி செல்கின்றது.

அப்பொழுது இந்தியாவிற்கு மிக அருகில் இருக்கக்கூடிய இலங்கையில் இப்படி ஒரு  நிகழ்வு நடந்தால் அங்கிருந்து கள்ளக்கடத்தல் மூலமாக கஞ்சா இந்தியாவிற்கு வரும் என்று நிச்சயமாக  அறுதியிட்டு சொல்ல முடியும். அப்பொழுது இந்தியா தன் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. இலங்கையில் எந்தவொரு நிகழ்வு நடந்தாலும் அது நிச்சயமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு நேரடியாக ஒரு பாதிப்பை  நல்லதாகவோ கெட்டதாகவோ எவ்வாறிருந்தாலும் ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை.

கேள்வி :-

இந்த நிலையில் இந்தியா எவ்வாறு தனது பாதுகாப்பை உறுதிப்படுத் முடியும்?

இந்தியா இலங்கை இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி ஒப்பந்தங்கள் சில உள்ளது. அதாவது கடல் பாதுகாப்பில் போதைப்பொருள், ஆள்கடத்தல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான  நடவடிக்கைகள்,இரு நாடுகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் இருக்கக்கூடிய தீவிரவாத தாக்குதல்கள் அது தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது ஒரு நியதி. அதற்குண்டான ஒப்பந்தம் இருக்கின்றது . இரண்டாவது முக்கியமான விடயம் என்னவென்றால்  BIMSTEC  என்ற அமைப்பின்  கூற்றின் படி இந்தியா ஒரு பெரிய நாடாக இருக்கக்கூடிய காரணத்தினால் இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை , நேபால் , பூட்டான் , பங்களாதேஷ், பாகிஸ்தானை தவிர்த்து மாலைத்தீவு வரைக்கும் அதன் பிறகு இந்தியாவிலிருந்து சற்று தொலைவில் இருக்கக்கூடிய தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு இந்தியா தன்னுடைய கடல் மார்க்கத்தில் இருக்கக்கூடிய வலிமை அதாவது கப்பல் படையினுடைய வலிமை, அவர்களுடைய தடுப்பு நடவடிக்கைகள் உளவமைப்பு, உளவு சாதனங்கள் இதை வந்து BIMSTEC அமைப்பில் இருக்கக்கூடிய உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா தகவல்களை பரிமாறும்.  அந்த நாட்டையும் சேர்த்து பாதுகாக்கும் என்ற ஒரு கருத்தும், இரண்டாவதாக அந்த நாடுகளும் மிக முக்கியமாக இலங்கை அவர்களிடம் இருக்கக்கூடிய தகவல்களை பரிமாற வேண்டும் என்பது நியதி.

இந்த இரண்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த நாடுகள்  BIMSTEC   கூட்டமைப்பு என்பது ஆண்டுக்கு  ஒருமுறை கூடும்.  இந்த வருடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களின் தலைமையில் நடந்தது .   இரண்டாவது இரண்டு நாடுகளு‌க்கும் பரஸ்பர தூதரகங்கள் உள்ளன. இந்த இரண்டு நாடுகளும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கின்றன.  அந்த பேச்சுவார்த்தையில் இந்த விடயங்கள் குறிப்பாக பேசி இருப்பார்கள்.

ஈழத்தமிழர்கள் வாழ்வாதார பிரச்சினை , இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களுக்கிடையிலான சச்சரவு மூன்றுமே ஒரு மிக மிக முக்கயமாக  தூதரக அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கிடையே நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகள் மிக முக்கிய அம்சமாக நிச்சயமாக வைக்கப்பட்டிருக்கும் .