அனுராதபுரம் சிறைச்சாலை விவகாரம் – அமைச்சரை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

பொறுப்புக் கூறலிற்கு உட்படுத்த வேண்டும்

‘இராஜாங்க அமைச்சரை அவரது நடவடிக்கைகளிற்காக பொறுப்புக் கூறலிற்கு உட்படுத்த வேண்டும்’ என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியா பசுபிக்கிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற  சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை மண்டியிடச் செய்து, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியிருந்தார்.

இதையடுத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் தமது கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியா பசுபிக்கிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா,

“இலங்கையில் கைதிகள் நடத்தப்படுவது குறித்த எங்களது கரிசனைகள் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அதிகரிகள் சித்திரவதை செய்வது மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துவது குறித்த எங்கள் கரிசனைகள் உண்மையானவை என்பதை இந்த சம்பவம் குறித்த தகவல்கள் புலப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் குற்றவியல் நடவடிக்கைளில் ஈடுபட்டால் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது காணப்படுவதை இது வெளிப்படுத்தியுள்ளது.

உடனடி பக்கச்சார்பற்ற பயனுள்ள விசாரணை அவசியம் அமைச்சரை அவரது நடவடிக்கைகளிற்காக பொறுப்புக்கூறசெய்யவேண்டும்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில், 16 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை குறித்து அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தம்பட்டமடித்தார்.  இவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்படவிருந்தவர்கள்.

லொகான் ரத்வத்தையின் இந்த நடவடிக்கை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை சரிசெய்வதற்கு அரசாங்கம் நல்லிணக்கம் என்ற பெயரில் முன்னெடுக்கும் சிறிய நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல் குறித்த எதிர்கால பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளிற்காக ஆதாரங்களை சேகரித்து பாதுகாப்பதற்கான பொறிமுறையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் நிராகரித்துள்ளார்.

இந்த விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு உள்நாட்டு செயற்பாடுகளே அவசியம்.
லொகான் ரத்வத்தையை அவரது நடவடிக்கைகளிற்காக பொறுப்புக்கூறச்செய்தால் மாத்திரமே உள்நாட்டு செயற்பாடுகள் குறித்த வெளிவிவகார அமைச்சரின் இந்த சொற்கள் தீவிரமானவையாக கருதப்படும்“ என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021