மக்களை ஒடுக்குவதற்கான ஆயுதமே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – இரா.ரமேஷ்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள  ” பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ” குறித்து  பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியற்றுறை மூத்த விரிவுரையாளர் இரா.ரமேஷ் வழங்கிய நேர்காணல். (  நேர் கண்டவர்- துரைசாமி நடராஜா)

கேள்வி:-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எந்தளவுக்கு நாட்டில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதுகின்றீர்கள்?

பதில் :-
இந்தச் சட்டம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.இச்சட்டத்தின் வரைவை பார்க்கின்றபோது அது நல்லாட்சி காலத்திலே கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்திற்கு  ஒப்பான ப ல விடயங்களை உள்வாங்கியதாக இச்சட்ட வரைபு காணப்படுகின்றது.நல்லாட்சி காலத்திலே கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான பல்வேறு அழுத்தங்களின் காரணமாக அது கைவிடப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழுத்தம், சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் அழுத்தம் போன்ற பல காரணிகள் அதில் செல்வாக்கு செலுத்தி இருந்தன.ஆனால் இன்று கொண்டு வரப்படவிருக்கின்ற இச்சட்டமானது பெரும்பாலும் நல்லாட்சி காலத்திலே கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கூறுகளை அல்லது அடிப்படை அம்சங்களை கொண்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இதுவரை காலமும் பாதுகாப்பு அமைச்சருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் வழங்கப்பட்டிருந்த  பல்வேறு அதிகாரங்களை புதிய சட்ட வரைபானது  பிரதி பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்குவதை காணமுடிகின்றது..குறிப்பாக கைது செய்தல், தடுப்புக் காவலில் வைத்தல், நீதிமன்றில் ஆஜர்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்களை நாம் இதன்போது சுட்டிக்காட்ட முடியும்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் இலங்கையில் மிக மோசமாக சித்திரவதைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் நிலவதாக பல்வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாகவே எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் பொலிஸாருக்கும் கணிசமான அதிகாரத்தை இச்சட்டம் வழங்குவதாக உள்ளது.ஒரு நபரை கைது செய்யவதற்கு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேடுவதற்கு, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு என்று பல வழிகளில் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகளவிலான அதிகாரத்தை இச்சட்டம் வழங்குவது மிக் மிக ஆபத்தானது என்பதனை கூறியாக வேண்டும்.

ஏற்கனவே பொலிஸாருக்கு நாட்டின் சட்டத்தையும் ,பாதுகாப்பையும் ,பேணிப் பாதுகாக்கின்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது. இந்நிலையில் அவர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கின்ற கடமைப் பொறுப்புக்களை பார்க்கின்றபோது பொலிஸாரால் தமக்கு வழங்கப் பட்டுள்ள கடமைகளை எந்தளவுக்கு செய்வார்கள் என்ற எண்ணம் மேலெழுகின்றது.

பொதுமக்களின் பாதுகாப்பு  சமாதானம் நாட்டின் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுதல் என்பவற்றுக்காக எந்தளவுக்கு அவர்களால் நேரத்தை செலவிட முடியும் என்ற கேள்வி எழுகின்றது.எனவே இச்சட்டம்  ஒரு புதிய வடிவத்திலான அராஜக ஆட்சியினை, சர்வாதிகாரத்தினை உருவாக்குவதற்கு ஏதுவான ஒரு சட்டமாக காணப்படுகின்றது.

அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்போரை, அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்போரை , மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் பேசுவோரை அடக்குவதற்கும், ஒன்று கூடுகின்ற மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையினையும் சுதந்திரத்தினையும் முற்று முழுதாக  ஒடுக்குவதற்கான ஒரு ஆயுதமாகவே இச்சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையில் அவர் தன்னை உலகத்துக்கு ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக் கொண்டாலும் கூட அதிகாரம், பதவி என்று வருகின்றபோது ஜனநாயக விழுமியங்களை , உரிமைகளை அவர் ஒருபோதும் மதிப்பதில்லை என்பதனை கடந்தகால அனுபவங்களின் ஊடாக நாம் தெளிவாகவே காணமுடியும்.

இதனடிப்படையிலேயே இன்றும் தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் தனது பதவியினை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிலைநாட்டுவதற்காகவும் நடைமுறைபடுத்துவதற்காகவும் இந்த சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதற்கே முயற்சிக்கின்றமை வெளிப்படை உண்மையாகும்.இது தொடர்பில் அரசியல் மேடைகளிலே தற்போது பேசப்படுகின்ற கருத்துக்களை பார்க்கின்றபோது எதிர்கட்சியினர் மட்டுமன்றி ஆளும் மொட்டுக் கட்சியிலேயே உள்ள பலரும் இச்சட்டத்தை எதிர்ப்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.பிரிந்து சென்ற பலரும் இச்சட்டத்தை எதிர்க்கின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் முற்றாக இச்சட்டத்தை எதிர்க்கின்றன.பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் இச்சட்டம் நடைமுறைபடுத்தப்படுமாக இருந்தால் அது நாட்டில் பாரிய பின்விளைவுகளையே ஏற்படுத்தும். ஏற்கனவே முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகின்றது.அதனை நீக்குமாறு நீண்ட காலமாகவே அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப்போவதாக  ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு வாக்குறுதியையும்  முன்னதாகவே அளித்திருந்தது.

சர்வதேச தராதரங்களுக்கு ஏற்றவாறு, மனித உரிமை நியமங்களுக்கு ஏற்றவாறு ஜனநாயகத்தை. பேணுகின்ற ஒரு சட்டத்தை கொண்டு வருவதாகவும் அரசு வாக்குறுதி வழங்கி இருந்தது.அந்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே இலங்கைக்கு சர்வதேச நாடுகளின் உதவிகள் கிடைத்தன.ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை இலங்கை பெற்றுக் கொள்வதற்கும் அந்த வாக்குறுதியே இலங்கைக்கு கை கொடுத்தது.

நாடு பொருளாதார ரீதியாக இப்போது வங்குரோத்து நிலையிலுள்ளது.இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வரப்படுமாயின் ஜீ.எஸ்.பி. பிளஸ் மற்றும் கடன் சலுகை உள்ளிட்ட பல்வேறு நலன்களையும் இலங்கை இழக்க வேண்டியேற்படலாம்.சர்வதேச ரீதியாக மனித உரிமை குறித்த ஒரு ஐயப்பாடும் ஏற்படும்.உதவி வழங்கும் நாடுகள் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலையும் உருவாகும்.

இன்று இலங்கையில் மனித உரிமைக்கும் ஜனநாயகத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.இராஜபக்ஷாக்களின் ஆட்சி இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றை மழுங்கடித்திருக்கின்றது.

தொடர்ந்தும் அந்த நிலை தொடருமானால் பொருளாதார பின்னடைவைக்கூட மீட்டெடுக்க முடியாது போகலாம்.சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி , ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய  நாடுகள்  உதவி வழங்குகையில் ஜனநாயகம், மனித உரிமை தொடர்பான விடயங்களையே அதிகளவில் கருத்தில் கொள்வார்கள்.

இந்நிலையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும்  மழுங்கடிக்கும் வகையில் சட்டம் இலங்கையில் கொண்டு வரப்படுமாக இருந்தால் சர்வதேசம் அதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டாது.நாட்டின் அமைதியின்மைக்கும் அது வழிவகுக்கும்.இச்சட்டத்தை கொண்டு வருவதன் மூலமாக மக்கள் வீதிக்கு இறங்குவதனையோ, ஆர்ப்பாட்டம் செய்வதனையோ, அல்லது ஒன்று கூடுவதனையோ ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது.ஜனநாயகத்துக்கு ஆர்ப்பாட்டங்கள் மிகவும் அவசியமாகும்.எனினும் அரசாங்கம் இச்சட்டத்தின் ஊடாக அடக்குமுறைகளை பிரயோகித்தால் பாதுகாப்பு தரப்பினருக்கும் மக்களுக்கும் இடையே பாரிய முரண்பாடு தலைதூக்கும்.இதனால் கைதுகள், சித்திரவதைகளுக்கு குறைவிருக்காது.

சிவில் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவார்கள்.இதனால் அமைதியின்மை தொடர்ந்தும் நாட்டில் இருந்து கொண்டே இருக்கும்.மோசமான பொருளாதார நிலைமை இருக்கும் நிலையில் இது ஒரு சிறந்த குறிகாட்டியாக இருக்காது.சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை தனிமைப்படுத்தப்படும்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான சட்டங்களில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் மோசமானது என்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கருத்தாகவுள்ளது.ரணில் விக்ரமசிங்க மூன்று சட்டங்களை கொண்டு வரப்போவதாக கூறுகின்றார்.நல்லிணக்கம் குறித்த சட்டமும் இதில் ஒன்றாகும்.எனினுப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையே முதலில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.சமகாலத்தில் ஆட்சியில் உள்ள இலங்கை அரசாங்கத்திற்கு மக்களின் ஆணை இல்லாதிருக்கின்றது.

சிறுபான்மையினர் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தேர்தல்கள் பின்போடப்பட்டு  வருகின்றன.இப்படியான ஒரு சூழலில் இந்தச் சட்டம் ஏன் தேவை என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.ஜனாதிபதி தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ளவும், அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் இந்தச் சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ள முனைகின்றார்.பாதூகாப்பு தரப்பினரின் உதவியோடு இலங்கையில் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவே அவர் முனைகின்றார்.இலங்கை அரசு என்பது எப்போதுமே ஒரு தேசிய பாதுகாப்பு அரசாகவே இருந்து வந்துள்ளது.

பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் அரசின் பாதுகாப்ப்பை உச்சளவில் அதிகரித்தே வந்துள்ளனர்.மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களைவிட அரசின் பாதுகாப்பினை உச்சளவில் அதிகரித்து அதனூடாக தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.ரணிலும் இதனையே செய்யும் நிலையில் தேசிய பாதுகாப்பு அரசை கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கின்றார்.இச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களை நோக்குகையில் எல்லா விடயங்களிலும் பாதுகாப்பு தரப்பினருக்கு அதிக அதிகாரங்களை இச்சட்டம் வழங்குவதோடு.

மனித உரிமை விழுமியங்கள் மற்றும் தராதரங்களுக்கு இச்சட்டம்  முரணானதாக உள்ளது.. இலங்கை பல மனித உரிமை சாசனங்களை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இப்படியான சட்டத்தை உருவாக்குவது பாரதூரமான விளைவுகளுக்கு அடித்தளமாகும்.இந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.உச்சநீதிமன்றம் இச்சட்டத்துக்கு வழங்கவுள்ள தீர்ப்பே எமக்கு பெரும் எதிர்பார்ப்பதாக உள்ளது.

பாராளுமன்றத்தில் இச்சடடம் குறித்து வாக்கெடுப்பு இடம்பெறுகையில் எத்தனை அரசியல்வாதிகள் இதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதனை  பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.இதற்கு ஆதரவாக  வாக்களிக்கும் அரசியல்வாதிகள் நிச்சயமாக அவர்களின் சுயநலன் சார்ந்த விடயங்களுக்கே வாக்களிப்பவர்களாக  இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.ஜனநாயகம் மற்றும் மனித உரிமை பற்றிய கரிசனை அவர்களுக்கு இருக்காது.

இச்சட்டத்தால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிப்பினை எதிர்கொள்வார்கள்.எனவே இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை பெற்றுக் கொண்டு, கட்சி அரசியலை மறந்து  சட்டத்துக்கு எதிராக ஐக்கியத்துடன்  அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.ஏனெனில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சட்டமாக்கப்பட்டால் அதனை நீக்குவது அவ்வளவு எளிய காரியமாக  இருக்காது.

1979, ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் ஒரு தற்காலிக சட்டமாகவே அப்போது கொண்டு வரப்பட்டது.ஆனால் இன்று வரை அதனை நீக்க முடியவில்லை.எத்தனையோ அழுத்தங்கள் இருந்தும் அது சாத்தியமாகவில்லை.இந்த கதி புதிய சட்டத்துக்கு ஏற்பட்டுவிடக்கூடாது.புதிய சட்டம் இலங்கையின் வரலாற்றில் கறைபடிந்த ஒரு அத்தியாயத்தை உருவாக்கும்.இதுபற்றி தீவிரமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

கேள்வி:-
சிறுபான்மையினர் இச்சட்டத்தினால் அதிகளவில் பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ளதா?

பதில்:-
ஆமாம்.சிறுபான்மையினர் இச்சட்டத்தினால் அதிகளவில் பாதிப்படைவர் என்பதில் ஐயமில்லை.முப்பது ஆண்டுகளாக  இலங்கையில் இருந்து வரும் பயங்கரவாத தடைச் சட்டம் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கியது.புதிய சட்டத்தினாலும் இந்நிலையே ஏற்படும்.வடக்கு கிழக்கு என்பது ஏற்கனவே படையினரின் பிரசன்னம் அதிகமுள்ள பகுதியாகும்.மக்களுடைய இயல்பு வாழ்க்கை இப்பகுதியில் கேள்விக்குறியாகியுள்ளது.

இத்தகையதொரு சூழ்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வரப்படுமிடத்து அது சிறுபான்மையினருக்கு பல்வேறு வழிகளிலும் இடர்பாடுகளை ஏற்படுத்தும் ஒன்றாக அமையக்கூடும்.ஏற்கனவே சிறுபான்மையினர் இந்த நாட்டில் பலவீனமான ஒரு குழுவாக வாழ்ந்து வருகின்றனர்.எனவே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டால் இம்மக்களை அது மேலும் பலவீனப்படுத்துவதாகவே அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.

கேள்வி:-
விடுதலைப் புலிகளின் போராட்டத்தை “பயங்கரவாதமாக ” இனவாதிகள் சித்திரித்து வருவது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:-
என்னைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் ஒரு இனத்தின் விடுதலைக்காகவே போராடினார்கள்.இனத்தின் விடுதலைக்காக போராடிய அந்த பயணத்திலே அவர்கள் ஆயுதமேந்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதற்கும் இலங்கை அரசாங்கமே பொறுப்பாக இருந்தது.

காரணம் கூற வேண்டும்..தொடர்ச்சியாக இடம்பெற்ற அநீதிகள் , அட்டூழியங்கள், பாகுபாடுகள் என்பவற்றின் காரணமாக அவர்கள் ஆயுதமேந்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.விடுதலைப் புலிகள் பயணித்த பாதையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

அவர்கள் சில தவறுகளை செய்திருக்கின்றார்கள்.ஆனாலும் ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் விடுதலை, உரிமைகள், தமிழ் மக்களுக்கான சமத்துவம்  என்பவற்றை உரியவாறு பெற்றுக் கொள்ளவே அவர்கள் போராடினார்கள் என்பது என்னுடைய கருத்தாகும்.