Tamil News
Home செய்திகள் இலங்கை தொடர்பிலான மற்றுமொரு பிரேரணை ஐ.நாவில் இன்று சமர்பிக்க தீர்மானம்

இலங்கை தொடர்பிலான மற்றுமொரு பிரேரணை ஐ.நாவில் இன்று சமர்பிக்க தீர்மானம்

இலங்கை தொடர்பிலான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்(UNHRC) இன்று(06) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதிகாரமிக்க சில நாடுகள் இணைந்து இந்தப் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக ஜெனீவா சென்றுள்ள வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி  தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை ஆயுதமாகக் கொண்டு இலங்கையை வாழ் நாள் முழுவதும் நிர்வகிக்கும் முயற்சியே இது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இன்று(06) உரையாற்றவுள்ள வௌிவிவகார அமைச்சர் அவ்வாறு கூறினாலும், இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் உண்மையிலேயே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எவை?

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, வட அயர்லாந்து, வடக்கு மெசடோனியா, ஜெர்மனி, மலாவி, மொன்டினீக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள் முன்வைக்கவுள்ள இந்தப் பிரேரணை ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த பிரேரணையில் 19 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவற்றில் முதல் இரு விடயங்களில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேரணையிலுள்ள 19 விடயங்களில் 09 விடயங்கள் பொருளாதார நெருக்கடி, அண்மைக் காலமாக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குறிப்பிடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

உணவுப் பாதுகாப்பு சீர்குலைந்தமை, பாரிய எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடு, குடும்பங்களின் வருமானம் குறைந்தமை ஆகிய விடயங்கள் தொடர்பாக பிரேரணையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியினால் மனித உரிமைகளுக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறவழி போராட்டங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள், அந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்பட்டமை, அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்போருக்கு எதிரான வன்முறைகளின் போது ஏற்பட்ட மரணங்கள், காயமேற்படுத்தப்பட்டமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக உடனடியாக ஆராய்ந்து அதற்கு பொறுப்பு கூற வேண்டிய தற்போதைய மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் தொடர்பில் தேவையான சுயாதீன, பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் இணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்பு செய்கின்ற சிவில் செயற்பாட்டாளர்களை பின்தொடர்வதை நிறுத்தி அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறும் பிரேரணையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இம்முறை கூட்டத் தொடரில் சமர்ப்பித்த அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்காக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சாட்சியங்களை சேகரிக்கவும் விசாரணை நடத்தவும் இலங்கை அனுமதி வழங்க வேண்டும் என பிரேரணையில் எட்டாவது விடயமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்து அது சார்ந்த நீதிமன்ற செயற்பாட்டினை நடைமுறைப்படுத்துவதற்கு உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் இம்முறை கூட்டத் தொடரில் 47 நாடுகள் பங்​கேற்றுள்ளதுடன், அவற்றில் 30 நாடுகள் ஏற்கனவே பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Exit mobile version