அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள் என வலியுறுத்தும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு

நவுருத்தீவில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை உடனடியாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது. 

நவுருத்தீவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று, அந்நாட்டில் உள்ள 40 சதவீத மக்களை பாதித்துள்ளது. இந்த தொற்று சூழலால் அங்கு 9 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள 112 அகதிகள் மற்றும் தஞ்சம் கோரியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

“மக்கள் துயரத்தில் உள்ளனர், இப்போது ஒரு பயங்கரமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். ஊரடங்கால் பல்பொருள் அங்காடிகளில் உணவு பொருட்கள் தீர்ந்துவிட்டன. மேலும் அவர்கள் சுத்தமான தண்ணீர், மற்றும் மருந்துகளை பெற போராடி வருகின்றனர்,” என ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின்  அகதிகள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்  ஜக்கி ஹைதாரி தெரிவித்திருக்கிறார்.

“குரூரமான மற்றும் தோல்வியுற்ற கடல்கடந்த தடுப்பு முகாம் முறை அகதிகளை இந்த மோசமான நிலைமைக்குள் தள்ளியுள்ளது. இதை கையாளுவதற்கான வளங்கள் நவுருத்தீவிடம் இல்லை. இந்த நெருக்கடியில் அவுஸ்திரேலியா தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டிய நேரம் இது,” என ஜக்கி ஹைதாரி கூறியிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை சிறை வைக்க உபயோகப்படுத்தப்பட்டு வரும் நவுருத்தீவின் பிராந்திய பரிசீலனை மையம் அவுஸ்திரேலியாவின் நிதியுதவியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இம்மையம் அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த குடிவரவுத் தடுப்பு முகாம் என்றும் அழைக்கப்படுகிறது.