Tamil News
Home உலகச் செய்திகள் அமெரிக்கர்களின் ஆயுள் குறைகின்றது

அமெரிக்கர்களின் ஆயுள் குறைகின்றது

கோவிட்-19 நோய் மற்றும் அளவுக்கு அதிகமாக மருந்துப்பொருட்களை உள்ளெடுத்தல் போன்ற காரணிகளால் அமெரிக்க மக்களின் ஆயுள் அளவு குறைவடைந்து செல்வதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 வருடங்களில் இந்த வாழ்நாள் குறைவு ஏற்பட்டுள்ளது இதுவே முதல் தடவை. 2021 ஆம் ஆண்டு சராசரி அமெரிக்கர்களின் ஆயுட்காலம் 76.4 ஆக குறைவடைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு அது 78.8 ஆக இருந்தது. உலகில் உள்ள மிகப்பெரும் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும் போது அமெரிக்கா பின்தங்கியுள்ளது.

அமெரிக்காவில் இதைய நோய்களினால் மக்கள் இறப்பதே தற்போதும் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் புற்றுநோய் மற்றும் கோவிட்-19 போன்ற நோய்கள் உள்ளன.

1923 ஆம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஆயுட்காலம் குறைந்து வருவது தற்போது தான் அவதானிக்கப்பட்டுள்ளது. 2019 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையில் கோவிட் நோயினால் ஏற்பட்ட இறப்பு 74 விகிதமாக இருந்தது.

மருந்துகளை அளவுக்கதிகமாக உள்ளெடுப்பதால் ஏற்படும் மரணங்களும் 2020 ஆம் ஆண்டு 16 விகிதமாக அதிகரித்திருந்தது.

பிரித்தானியாவில் சராசரி ஆயுட்காலம் 80.8 வயதாகவும், கனடாவில் 81.75 வயதாகவும் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த இரு நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவே சுகாதாரத்துறைக்கு அதிக நிதியை செலவிட்டு வருகின்றது.

Exit mobile version