ஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா – தமிழில்: ஜெயந்திரன்

தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்காஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா: உண்மையில் அது ஒரு தவறு தான்”. பன்னாட்டு ரீதியாக உருவாகிய மிகப் பலமான கருத்தைத் தொடர்ந்தும், இரண்டு ஊடகங்கள் மேற்கொண்ட ஆய்வின் பின்னர் சமர்ப்பித்த தெளிவான சான்றுகளைத் தொடர்ந்தும், கடந்த செப்டெம்பர் 17ம் திகதி ஆப்கானிஸ்தானில் தாம் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக அமெரிக்க இராணுவம், தாம் முன்னர் கூறிவந்த கருத்தை முற்றாக மாற்றியது.

பயங்கரவாதிகளின் இலக்குகளைத் தாக்குவதற்குப் பதிலாக மனிதாயப் பணியாளர் ஒருவர் உட்பட, ஏழு சிறுபிள்ளைகளின் சாவுக்குக் காரணமாக அமைந்த ஆளில்லா விமானம் மூலம் காபூலில் தாம் மேற்கொண்ட மிகப் பயங்கரமான தாக்குதல், ‘மிகத் தவறுதலான தாக்குதல்’ என அந்த இராணுவம் ஏற்றுக்கொண்டது. தாம் தொடுத்த தாக்குதல் முற்றிலும் சரியானது என்று இதற்கு முதல் அதே இராணுவம் வாதிட்டு வந்தது. தாம் இழைத்த தவறுக்காக, அமெரிக்க நடுவக் கட்டளைப்பிரிவில் கட்டளை அதிகாரியான ஜெனரல் பிராங் மக்கென்ஸி (General Frank McKenzie) குறிப்பிட்ட தவறுக்காக மன்னிப்புக் கோரினார். அதற்குப் பிறகு என்ன? இந்த அப்பட்டமான குற்றச்செயலை விசாரிக்க வேண்டும் என்றும், தவறிழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் எழுப்பப்பட்ட குரல்கள் அனைத்தும் அலட்சியம் செய்யப்பட்டன. மேற்குறிப்பிட்ட கொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் எவருமே இதுவரை விசாரிக்கப்படவோ அன்றேல் தண்டிக்கப்படவோ இல்லை.

இருபது வருடங்கள் நீடித்த ஆப்கான் யுத்தத்தில் மிக மோசமான போர்க்குற்றங்களை அந்த நாட்டில் அமெரிக்கா இழைத்திருக்கிறது. ஆனால் வோஷிங்டனும், பென்ரகனும் பொதுவாக இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. உண்மையை மூடிமறைக்க அவர்கள் முயல்வார்கள். அதுமட்டுமன்றி, குற்றவாளிகளைப் பாதுகாத்து, மென்மையான முறையில் அவர்களுடன் நடந்து கொள்கிறார்கள். தவறு இழைக்கப்பட்டதற்கான சான்றுகள் அவர்களது முகத்துக்கு முன்னால் இருக்கும் போதும், இவற்றை மறுப்பது தான் அவர்கள் வழக்கம். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட போர்க்குற்றங்களை ஆராயத் தொடங்கிய பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளை அது தடைசெய்தது. ஆப்கான் மக்களுக்கு எதிராக தாம் இழைத்த குற்றங்கள் தொடர்பாக ஒரு சிறு துளி உண்மைத் தன்மையைக் கூட அமெரிக்கா இதுவரை வெளிப்படுத்தவில்லை.

மிக மோசமான குற்றங்கள்

மிக மோசமான குற்றங்கள்ஆப்கானில் நிலைகொண்டிருந்த அவுஸ்திரேலிய விசேட படைப்பிரிவினர் சட்டத்துக்கு முரணாக 39 அப்பாவிப் பொதுமக்களையும் வேறு தடுத்து வைக்கப்பட்டவர்களையும் கொன்றதையும், மேலும் இருவரைக் கொடூரமாக நடத்தியதையும் நிரூபிக்க நம்பத்தகுந்த சான்றுகள் இருப்பதாக 2020 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற விசாரணை கண்டறிந்தது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கு எதிராக உலகளாவிய வகையில் எதிர்ப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த தமது படைகள் மேற்கொண்டிருந்திருக்கக் கூடிய  சட்டத்துக்கு முரணான கொலைகளை விசாரிக்கும்படி, ஆப்கான் சுயாதீன மனித உரிமைகள் ஆணையம் குறிப்பாக அமெரிக்காவையும், ஐக்கிய இராச்சியத்தையும்  பின்னர் கோரியிருந்தது. அமெரிக்காவோ அல்லது ஐக்கிய இராச்சியமோ அவ்வாறான எந்தவித விசாரணையையும் முன்னெடுக்கவில்லை. அமெரிக்கப் படையினர் மீது ஒரு முறையான விசாரணை மேற்கொள்ளப்படுமாக இருந்தால், முடிவுகள் மிகவும் பயங்கரமானதாக அமையும் என்றே பொதுவாக நம்பப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றில் மிகவும் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட போர் என்று கருதப்படும் ஆப்கான் போரிலே 46,000 க்கும் அதிகமான ஆப்கான் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகப் ’போருக்குக் கொடுக்கப்பட்ட விலை’ என்ற  என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்த பிரவுண் (Brown)  பல்கலைக்கழகம் கணிப்பிடுகின்றது. பயங்கரவாதத்துக்கான எதிரான போர் என்ற அகன்ற கொடியின் கீழ், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆப்கான் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதை நோக்கும் போது, ஆகஸ்ட் 29 அன்று மேற்கொள்ளப்பட்ட தவறுதலான தாக்குதல் முதலாவது தாக்குதல் அல்ல என்பது கவனிக்கத்தக்கதாகும். ஆயுத வன்முறை மீதான நடவடிக்கை என்ற பெயர் கொண்டு இலண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு அமைப்பு வெளியிட்ட தரவுகளின் படி 2016ம் ஆண்டுக்கும் 2020ம் ஆண்டுக்கும் இடையேயான காலப்பகுதியில் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களின் காரணமாக 3,977 பேர் கொல்லப்பட்டதாக அறிக்கையிடப்பட்டது. அவர்களில் 1,598 பேர் சிறுவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2 ஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா - தமிழில்: ஜெயந்திரன்இப்படிப்பட்ட விடயங்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் தங்களுக்கு நேர்ந்ததாகவும், அவ்விடயங்கள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் சாதாரண ஆப்கான் மக்கள் கூறுகின்றார்கள். ஆளில்லா விமானங்கள் தாக்குதலை மேற்கொள்ளும் போது, ஆப்கான் நாட்டைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் குடிதண்ணீர் எடுப்பதற்காகவோ அல்லது விறகு எடுப்பதற்காகவோ அல்லது தங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காகவோ வெளியில் சென்றிருக்கலாம்.

2010ம் ஆண்டில், தென் ஆப்கானிஸ்தானிலுள்ள கந்தகார் (Kandahar)  மாகாணத்தில் நிலைகொண்டிருந்த 12 அமெரிக்க இராணுவ வீரர்கள், இரகசியமான முறையில் ஒரு கொலைக்குழுவை உருவாக்கி, ஆப்கான் பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டும், அவர்கள் மீது சகட்டு மேனிக்கு துப்பாக்கியால் சுட்டது மட்டுமல்லாமல், அவர்களது விரல்களைத் தமது நினைவுச் சின்னங்களாகச் சேகரித்து வைத்திருந்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றது மட்டுமன்றி, சித்திரவதைகளை மேற்கொண்டதாகவும், சிறைக்கைதிகளை மோசமாக நடத்தி, அவர்களைக் கொலைசெய்ததாகவும் அமெரிக்கப் படையினர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. 2016ம் ஆண்டில் தகவல் பெறுவதற்கான சுதந்திரச் சட்டத்தின் அடிப்படையில் ‘அமெரிக்க குடிமக்களின் உரிமைகள் ஒன்றியம்’ என்ற அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட சட்டரீதியான செயற்பாட்டைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்கப் படையினர் சிறைக்கைதிகள் மீது மேற்கொண்ட துன்புறுத்தல்கள் தொடர்பான 200 ஒளிப்படங்களை அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டது. அவர்களிடம் இருந்த 2000 ஒளிப்படங்களில் இவை ஒரு சிறுபகுதி மட்டுமேயாகும்.

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம், 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்கப் படையினர் உள்ளடங்கலாக அனைத்துப் படையினராலும் ஆப்கானில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையை முன்னெடுக்குமாறு, தனது முன்னிலை வழக்குத் தொடருநரைக் கோரியிருந்தது. 2003 – 2004 ஆண்டுகாலப் பகுதிகளில்இ சித்திரவதைகள்இ கைதிகளைக் கொடூரமான முறையில் கையாளுதல், தனிமனித மாண்பை மீறுதல், பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் அமெரிக்கப் படையினர் ஈடுபட்டதற்கான போதிய சான்றுகள் தம்மிடம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. இவ்வாறான சட்டரீதியிலான முன்னெடுப்புகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வருவதன் காரணமாகவும், இவற்றுக்கு ஒத்துழைப்பை வழங்க மறுத்து வருவதன் காரணமாகவும் இதுவரை இவ்விடயங்கள் தொடர்பாக எந்தவிதமான வழக்கும் தொடுக்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தான் 2003ம் ஆண்டிலிருந்து பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் ஓர் உறுப்பு நாடாக இருந்து வருவதன் காரணத்தால், அந்த நாட்டில் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்யும் உரிமையை நீதிமன்றம் கொண்டிருக்கிறது. இருப்பினும் தாம் அந்த நீதிமன்றத்தின் உறுப்பு நாடு அல்ல என்று வாதிடுகின்ற வோஷிங்டன், அதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. இவ்வாறான காரணங்களினால் சந்தேக நபர்களுக்கு எதிராகப் போதிய சான்றுகளைத் திரட்டி, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் நீதிக்கான செயன்முறையை முன்னெடுக்க வழக்குத் தொடுநருக்கு இயலவில்லை.

நீதியை நிலைநாட்ட முடியாதவாறு போடப்படும் தடைகள்

நீதியை நிலைநாட்ட முடியாதவாறு போடப்படும் தடைகள்ஆப்கானிஸ்தான் நாட்டில் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் எனச் சந்தேகிக்கப் படுகின்றவர்களைப் பாதுகாக்கும் ஒரு பெரும் குடையை, அவர்களைச் சுற்றி அமெரிக்கா விரித்திருக்கிறது என்று சொல்லப்படுகின்றது. யாராலும் மறைக்கப்பட முடியாத வகையில் குற்றங்களை இழைத்தார்கள் என்று வெளியில் பெரிதாக அறியப்பட்டவர்களை அமெரிக்கா தண்டித்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதே சமயத்தில், அமெரிக்கப் படையினரால் ஆப்கானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு நீதிக் கட்டமைப்புகள் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அது தடைகளை விதித்தே வருகின்றது.

”ஆப்கானிஸ்தான் நாட்டில் போர்க் குற்றங்கள் இழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவது மிகவும் கடினமான ஒரு விடயம்” என்று ஷங்காய் நிறுவனங்களின் பன்னாட்டு அமைப்பு மற்றும் பன்னாட்டுச் சட்டத் திணைக்களத்தைச் சேர்ந்த ஆய்வாளரான சூஏ லேயி (Xue Lei) தெரிவித்தார். அமெரிக்கப் படையினரால் ஆப்கான் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பான நீதிப்பரிபாலன நடைமுறை அமெரிக்காவின் கைகளிலே இருப்பது இதற்கான காரணங்களில் ஒன்று என அவர் சுட்டிக்காட்டினார். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை வழங்குவதற்கு ஏற்ற முறையில் அமெரிக்காவின் நீதிநிர்வாக ஒழுங்கமைப்பு கட்டமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

1 ஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா - தமிழில்: ஜெயந்திரன்ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் குற்றங்களை இழைத்தார்கள் எனக் குற்றஞ்சாட்டப்படும் பின்புலத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஊழல்களை மூடிமறைக்கும் நோக்கத்துடன், பன்னாட்டுச் சட்டங்களை ஏறிமிதித்து, அக்குற்றங்கள் மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் முன்னெடுக்க விழைகின்ற விசாரணைக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ஆப்கானில் அமெரிக்கப் படையினர் போர்க்குற்றங்களை இழைத்தார்களா என்பது விசாரிக்கப்படவேண்டும் என்று ஹேக்கைத் (Hague) தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் தீர்மானத்தை மேற்கொண்ட போது, அதன் முன்னிலை வழக்குத் தொடருநரான பற்றூ பென்சூதா (Fatou Bensouda) உட்பட அந்நீதிமன்றின் உயர்மட்ட அதிகாரிகள் செயற்பட முடியாதவாறு அமெரிக்கா தடைகளை விதித்தது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் சார்பில் அமெரிக்க வீரர்களை விசாரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கான பயண அனுமதிகள் வழங்கும் நடைமுறைகளுக்கும் அமெரிக்கா வரையறைகளை விதித்தது.

மனித உரிமைகளுக்கு தமது அரசில் முன்னுரிமை கொடுப்பதாக மார்தட்டிக்கொண்டு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் மீது முன்னாள் அதிபர் ட்ரம்ப் (Trump) விதித்திருந்த தடைகளை கடந்த ஏப்பிரல் மாதத்தில் நீக்கிய பைடன் நிர்வாகம்இ ஆப்கானில் அமெரிக்க இராணுவ வீரர்கள் இழைத்ததாகக் கருதப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்க ஒத்துழைப்பை வழங்க முன்வரவில்லை என்பது கவனிக்கப்படவேண்டும் என்று கூறிய சூஏ (Xue) பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் தனது விசாரணையை முன்னெடுப்பது மிகவும் கடினமான காரியம் என மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வெளிவேடம் இங்கு வெளிப்படையாகத் தெரிகிறது: அது சொல்வது ஒன்று. ஆனால் செய்வது வேறொன்று. மனித உரிமைகளைக் காப்பதாகவே வோஷிங்டன் நீண்ட காலமாகவே கூறிவருகிறது. ஆனால் பன்னாட்டு அமைப்புகள் மனித குலத்துக்கு எதிராக அது இழைத்த குற்றங்களை விசாரிக்க முற்படும் போது, எவ்வித வெட்கமும் இன்றி தடைகளை விதித்து நீதியை நிலைநாட்டும் முயற்சிகளை அது தோற்கடித்து வருகிறது. மற்றைய நாடுகளில் கொலைகளை முன்னெடுப்பதும் மனித உரிமைகளை ஏறிமிதிப்பதும் அதன் வழமையான நடைமுறை மட்டுமன்றி இழைக்கும் போர்க்குற்றங்கள் தொடர்பாக எந்தவித வருத்தத்தையும் தெரிவிக்காத நாடாகவும் அது இருந்து வருகிறது. உண்மையை மூடிமறைத்து, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஒரு நாடாக அமெரிக்கா இருக்கின்றது. இவ்வாறான பின்புலத்தில் சனநாயத்துக்கும் மனித உரிமைகளுக்கும் ஒரு சுடர்விளக்காக எப்படி அது இலங்க முடியும்?

இன்னும் அதிகமாக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்

அமெரிக்காவை விசாரிப்பது தொடர்பாக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் தனது முயற்சிகளை இன்னும் பலமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பன்னாட்டுக் கற்கைகளுக்கான சீன நிறுவனம் என்ற அமைப்பில் ஆசிய பசிபிக் பிராந்தியக் கற்கைகளுக்குப் பொறுப்பாக இருக்கின்ற ஸாங் ரெங்ஜூன் (Zhang Tengjun) குளோபல் ரைம்சுக்கு (Global Times) எடுத்துக்கூறினார். அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் ஆப்கானிஸ்தானில் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் தாம் மேற்கொள்ளும் தீர்மானங்கள் மூலமாகக் கண்டனத்தைப் பதிவுசெய்ய வேண்டும். அதுமட்டுமன்றி அவ்விடயங்கள் தொடர்பான விசாரணைகளையும் வழக்குகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் ஸாங் கருத்துத் தெரிவித்தார்.

3 ஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா - தமிழில்: ஜெயந்திரன்இது எவ்வாறிருப்பினும் அமெரிக்கா கொண்டிருக்கின்ற மேலாதிக்க நிலை காரணமாகவும் அதன் சிந்தனைப் போக்கின் காரணமாகவும் பன்னாட்டு நீதிமன்றமும் சரி அல்லது ஏனைய பன்னாட்டு அமைப்புகளும் சரி காத்திரமான வரையறைகளை விதிப்பது இயலாத செயல் என்பதையும் ஸாங் தெளிவுபடுத்தத் தவறவில்லை.

அமெரிக்காவின் பங்களிப்புடனேயே தற்போதைய ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட பொறிமுறைகள் தமது நலன்களைப் பாதிக்கும் என்பதை அறியவரும் போது, குறிப்பிட்ட சட்டங்களை அலட்சியம் செய்ய அது பின்னிற்பதில்லை. அவ்வாறான உடன்படிக்கைகளிலிருந்து தாம் வெளியேறுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவற்றுக்குப் பொறுப்பான அமைப்புகளைத் தடைசெய்யவும் அது தயங்குவதில்லை.

ஆப்கானிஸ்தானிலும் ஏனைய நாடுகளிலும் தாம் இழைத்த போர்க் குற்றங்களுக்கு அமெரிக்காவைப் பொறுப்புக் கூறவைப்பதற்கு இன்னும் அதிகமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் பரந்திருக்கும் மனித உரிமைக் குழுக்களும் அரச சார்பற்ற அமைப்புகளும் இவ்விடயங்கள் தொடர்பான சான்றுகளை ஒன்றுதிரட்ட மேலதிகமான உதவிகளை வழங்கலாம். அமெரிக்காவின் மீது ஒரு வகையான அழுத்தத்தைப் பிரயோகிக்கும் விடயத்தை குவிமையப்படுத்துவதை நோக்கி பொதுமக்களின் அபிப்பிராயங்களை அந்த அமைப்புகள் கட்டமைக்கலாம்.

நன்றி: குளோபல்ரைம்ஸ்.சிஎன் (Globaltimes.cn)