Home ஆய்வுகள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம்: சர்வதேசத்தை திசை திருப்பும் உபாயமா? | அகிலன்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம்: சர்வதேசத்தை திசை திருப்பும் உபாயமா? | அகிலன்

சட்டத்தில் திருத்தம்அகிலன்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம்

இலங்கையில் கடந்த 43 வருட காலமாக நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மீண்டும் அரசியலில் பேசுபொருளாகி இருக்கின்றது. பாராளுமன்றத்தில் வியாழக் கிழமை இதற்காகக் கொண்டுவரப்பட்ட திருத்தமும் எதிர்த் தரப்பினரால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது.

சர்வதேசத்தை சமாளிப்பதற்காக சில திருத்தங்களைச் செய்வதாகக் காட்டிக் கொண்டாலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற ஆயுதத்தை கைகளில் வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடர்வது தான் அரசாங்கத்தின் உபாயம் என்பதும் அரசு முன்வைத்திருக்கும் திருத்தங்கள் மூலமாக வெளிப்படையாகியிருக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகும் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து பேசப்படுவது வழமையானது தான். 49 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் பயங்கரவாத தடைச் சட்டம் குறித்த பேச்சுக்களையும், வாக்குறுதிகளையும் ஊடகங்களில் அவதானிக்க முடிகின்றது. அரசின் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருப்பதால், அது குறித்த விவாதம் அங்கும் இடம்பெற்றுள்ளது.

43 வருட வரலாறு

1979 ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடையத் தொடங்கிய போது அதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜே.ஆர்.ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது, கொண்டு வரப்பட்ட இந்த சட்டமூலம் ஆறு மாதங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் என வாக்குறுதி அளிக்கப் பட்டிருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள சில சரத்துக்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், பாதுகாப்புப் படையினர் கட்டுமீறிச் செயற்படுவ தற்கான அதிகாரங்களைக் கொடுப்பதாகவும் அமைந்திருந்தது. அதனால் உருவாகிய கண்டனங்களையடுத்தே ஆறு மாதங்களுடன் அது நீக்கப்படும் என்ற வாக்குறுதியை ஜயவர்த்தன வழங்கியிருந்தார்.

பின்னர் 1982 இல் இது நிரந்தரமான சட்டமாக்கப்பட்டது. இப்போது 43 வருடங்கள் சென்று விட்ட போதிலும், அதனை நீக்குவதற்குப் பதிலாக அதில் திருத்தங்கள் சிலவற்றைச் செய்வதில்தான் அரசாங்கம் அக்கறை காட்டுகின்றது. அதுவும், சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் அழுத்தங்களைச் சமாளிப்பதற்கான ஒரு உத்தியாகத்தான் இதனை செய்வதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.

இரு பக்க அழுத்தம்

சர்வதேச ரீதியாகப் பார்க்கும் போது, இரண்டு இடங்களிலிருந்து நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொள்கின்றது.

முதலாவது ஜெனீவா. ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரமான சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டிருந்தது. ஜெனீவா கூட்டத் தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த விவகாரம் மீண்டும் அங்கு கிளப்பப்படும் என்ற நிலையில்தான் இலங்கை அரசாங்கம் தனது அக்கறையை இப்போது வெளிப்படுத்த முற்படுகின்றது.

இரண்டாவது ஐரோப்பிய ஒன்றியம். இலங்கைக்கு வழங்கும் ஜி.எஸ்.பி. சலுகைக்கான நிபந்தனையாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், அல்லது அதிலுள்ள கொடூரமான சரத்துக்கள் திருத்தப்பட வேண்டும் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படும் என இலங்கை கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் 2017 இல் ஜீ.எஸ்.பி. சலுகை இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்டது. ஆனால், இன்றுவரையில் இலங்கை அதற்காக எதனையும் செய்யவில்லை என்பதால், இவ்வருடத்துடன் ஜ.எஸ்.பி. சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருக்கின்றது. அதனால் தான் இலங்கையும் அவசரமாக திருத்தங்களைச் செய்வதாக அறிவிக்கின்றது.

திருத்தங்களுக்கு அங்கீகாரம்

அரசியல் எதிராளிகளையும், சிறுபான்மையினரையும் இலக்கு வைப்பதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறான அழுத்தங்கள் முன்வைக்கப் படுகின்றன. வடக்கு, கிழக்கில் தீவிரவாதம் ஆரம்பமானபோது அதனை ஒடுக்கு வதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்த சட்டமூலத்தை, போர் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் சென்றுவிட்ட நிலையிலும் பயன்படுத்துவதை எந்தவகையிலும் நியாயப் படுத்தக்கூடிய நிலையில் இலங்கை அரசாங்கமும் இல்லை.

அந்த நிலையில்தான் இப்போது பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்படுவதாக அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளிநாடுகளின் தூதுவர்களைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடை முறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது கூறியுள்ளார். பல மாதங்களாக மேற்கொள்ளப் பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் இராஜதந்திர அதிகாரி களுக்கு விளக்கமளித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் இறுதி அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றத்தில் அதனை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த நிலையில்தான் வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அரசாங்கத்தின் திருத்தங்களை உள்ளடக்கிய பிரேரணையை பாராளு மன்றத்தில் முன்வைத்தார்.

என்ன திருத்தங்கள்?

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு கட்டுப்பாட்டு உத்தரவு நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் நீண்டகால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச் செய்தல் நீதிவான்கள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளை அணுகுவதற்கான விதிகளை வெளிப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல் தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல் குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை நீண்டகால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளிலான திருத்தங்கள் உள்ளடங்கும்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13ஆவது பிரிவின் கீழ் ஆலோசனை சபையொன்று நிறுவப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இருந்த போதிலும், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தச் சட்டத்தில் முக்கியமான கூறுகள் உள்ளடக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்து வதற்கான முன்மொழிவுகள் மூலம் அரசாங்கத்தின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் முடிவிற்கு வராது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான ஒருவரை 18 மாதங்கள் வரையில் தடுத்துவைக்க முடியும் என்ற சரத்தை 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல என்பது மனித உரிமை அமைப்புக்களின் கருத்து.

இலங்கையின் உபாயம்

இதனைவிட பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள மோசமான அம்சங்களில் ஒன்றாக, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் உள்ளது. அதாவது, சந்தேக நபர் ஒருவர் பொலிஸாருக்குக் கொடுக்கும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாக பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும். இது சித்திரவதை செய்து பெறப்பட்டதாகவும் இருக்க முடியும். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்பதுடன், தடுப்புக்காவலில் சித்திரவதைகளுக்கு வழிவகுப்பதாகவும் அமையலாம் என்பது மனித உரிமை அமைப்புக்களின் கருத்து.

ஜெனிவாவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுக்கமான நிலைப்பாடும் இவ்விடயத்தில் உறுதியாக எதனையாவது செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை இலங்கைக்கு கொடுத்துள்ளது. வாக்குறுதிகளைக் கொடுப்பதுடன், கண்துடைப்புக்காக சில திருத்தங்களைச் செய்து இந்த நெருக்கடிகளைத் தாண்டிச் சென்றுவிட முடியும் என்பதுதான் இலங்கை அரசின் திட்டமாகவுள்ளது.

அதற்காகத்தான் ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறிப்பிட்ட திருத்தங்கள் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்த திருத்தங்களோ, ஜெனீவா தீர்மானத்தில் சொல்லப்பட்ட திருத்தங்களோ இதில் இல்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரமான சில சரத்துக்களைக் கைகளில் வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடர்வதுதான் இலங்கை அரசின் திட்டம் என்பதும் தெளிவாக புலனாகின்றது. இந்த நிலையில் சர்வதேசமும், மனித உரிமைகள் அமைப்புக்களும் என்ன செய்யப்போகின்றன?

Exit mobile version