அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைய வேண்டும் – இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகா தேரர்

நிலையான பொருளாதாரக் கொள்கையொன்றை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு பலமான அரசாங்கம் அவசியமானது எனவும், அதற்கு சர்வகட்சி ஆட்சி மிகவும் முக்கியமானது எனவும் இலங்கை அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகாதலைவர் அக்கமஹா பண்டித வண. தொடம்பஹல சந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை தேரரை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று (04) பிற்பகல் இராஜகிரிய, கலபலுவாவ, கோதம தபோவன விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க   அமரபுர மகா நிகாயவின் மகாதலைவர் வண.தொடம்பஹல சந்தசிறி தேரர் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.

விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை நிர்வாக சபையின் தலைவர் அஜித டி சொய்சா உட்பட சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மதவழிபாடுகளில் ஈடுபட்டார்.

மகாநாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர், தாது மன்றத்திற்குச் சென்று அங்கு சமய கிரியைகளை மேற்கொண்ட பின்  மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறிய தேரர் அவர்கள், திறமையின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குதல்  மற்றும் எதிர்கால உலகை வெல்லக்கூடிய பொருத்தமான பாடங்களை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் இலங்கை அமரபுர மகா நிகாயவின் பதிவாளர் கலாநிதி வண.பல்லேகந்த ரத்தனசார தேரர் மற்றும் அந்த நிகாயவை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்க சபைகளின் தேரர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.