இலங்கையில் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கு அனைத்து கட்சிகளும் வழிவிட வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம் 

இலங்கையில் அமைதியையும் ஸ்திரத்தையும் விரைவான அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருக்கிறது.

இலங்கை மக்களை பொறுத்தவரையில் அவர்கள் அமைதியான முறையில் தமது குரல்களை எழுப்புவதற்கு உரிமை இருக்கிறது. எனினும் ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் பிரஸல்ஸ் நகரில் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை இலங்கையின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கு அனைத்து கட்சிகளும் வழிவிட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.