நாணய நிதியத்தின் உதவியின் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டும் ஐ.தே.க. அழைப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தற்போது கிடைத்திருக்கும் உதவியைக்கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர் சமன்த்த அருணகுமார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாக்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்து தெரிவிக்கையிலேயே அவர்  இவ்வாறு குறிபிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்டமையை சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் நாணய நிதியத்துக்கு செல்லாமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மாற்று வழி எதனையும் இவர்கள் முன்வைக்கவில்லை.

மாற்று வழி இல்லாமலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டும் என உறுதியாக இருந்தார். ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னர் இருந்து, நாணய நிதியத்துக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறே தெரிவித்து வந்தார்.

ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை. அதனால் காலம் கடந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட தீர்மானத்தாலே எமக்கான நிபந்தனைகளும்  சற்று கடினமாக அமைந்துள்ளது.

அத்துடன் கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கம் மேற்கொண்ட பிழையான தீர்மானங்களே நாடு வங்குராேத்து அடைந்து, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டது. வரி குறைப்பை மேற்கொண்டதால் நாட்டுக்கு கிடைக்க இருந்த 586பில்லியன் ரூபா வருமானம் இல்லாமல் போனது.

அதேபோன்று விவசாயிகளுக்கு வழங்கிவந்த இரசாணன உரத்தை இரத்துச்செய்தார்கள். இதனால் 24ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்டிருந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற்றுக்கொள்ள எங்களுடன் இணைந்து 12நாடுகள் விண்ணப்பித்திருந்தன. அந்த நாடுகளில் இலங்கைக்கே முதலாவதாக கடன் உதவி கிடைக்கப்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நாங்கள் சரியான முறையில் பின்பற்றியதாலே எமக்கு அதனை விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமாகியது. எம்முடன் விண்ணப்பித்த பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கவில்லை.

எனவே தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி முதல் கட்டமாக எமக்கு கிடைத்திருக்கிறது. அதனை பயன்படுத்திக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அதனால் தற்போதாவது எதிர்க்கட்சிகள் இதனை தொடர்ந்தும் விமர்சித்துக்கொண்டிருக்காமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் கைகோர்த்துக்கொள்ள முன்வரவேண்டும் என்றார்.