Tamil News
Home செய்திகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி வன பாதுகாப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட அனைத்து வர்த்தமானிகளும் இரத்து...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி வன பாதுகாப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட அனைத்து வர்த்தமானிகளும் இரத்து செய்யப்பட வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்

போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி அது வனப்பகுதி என பின்னர் அறிவிக்கப்பட்டு காலப்போக்கில் இந்த வனப்பகுதி அழிக்கப்பட்டு அங்கு சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு வனஜீவராசிகள் அமைச்சு மற்றும் அது சார்ந்த திணைக்களங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி வன பாதுகாப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட அனைத்து வர்த்தமானிகளும் இரத்து செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை,சுற்றாடல் துறை மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு அபிவிருத்திக்கான அமைச்சு என சிங்கள மக்கள் கருதலாம்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் இருப்பினை கேள்விக்குறியாக்குவதற்கும்,தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து,தமிழ் மக்களை நிர்கதிக்குள்ளாக்கவும் இந்த  அமைசசு மற்றும் அதனுடன் தொடர்புடைய திணைக்களங்கள் ஒரு கருவியாக செயற்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் விடுதலை புலிகளின் ஆளுகையின் கீழ் நடைமுறை அரசு ஆட்சி செய்தது.அங்கும் வனவள பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் போன்ற துறைகள் காணப்பட்டன.அந்த துறைகள் மக்களால் நேசிக்கப்பட்டன.தமிழர்களின் பாதுகாப்பிற்கும்,முன்னேற்றத்திற்கும் அமைவானதாக இந்த துறைகள் காணப்பட்டன.வனப்பகுதிகளும் பாதுகாக்கப்பட்டன.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இன அழிப்பை தொடர்ந்து எமது தேசம் வீழ்ச்சியடைந்ததுடன் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி பின்னடைவை நோக்கிச் சென்றது.பாதுகாப்பு அமைச்சு.மகாவலி அதிகார சபை,எல்லை நிர்ணய குழு,முப்படையினர்,சுற்றுலாத்துறை அமைச்சு,வனஜீவராசிகள் திணைக்களம், ஆகியன எமது சமூகத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் தீவிர செயற்பாடுகளில் ஈடுப்பட்டனர்,தற்போதும் ஈடுப்படுகின்றனர்.

இராணுவத்தினரின் இனப்படுகொலையில் இருந்து தப்பித்துக் கொள்ள எமது சமூகத்தினர் இந்தியா,ஐரோப்பியா உள்ளிட்ட உலக நாடுகளில் தஞ்சமடைந்தார்கள்.கல்லோயா அபிவிருத்தி திட்டம் முதல் 2009 ஆம் ஆண்டு வரை இனப்படுகொலை சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்றன.மக்கள் கொத்தணி யாக நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

எமது சமூகத்தினர் வாழ்ந்த இடங்கள் காலப்போக்கில் காடானது.பிற்பட்ட காலப்பகுதியில் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய மக்கள் தமது காணிகளை துப்பரவு செய்யும் போது வனவளத்துறையினர் குறித்த பகுதி வனபாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு வன பாதுகாப்பு என்ற பெயரில் காணிகளை அபகரித்துக் கொண்டனர்.காணி அமைச்சும் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது,

அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுகின்றன. ஏதாவதொரு விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு எமது சமூகத்தினரின் காணிகள் சூறையாடப்பட்டுள்ளன. வனஜீவராசிகளுக்கு என குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை சீரழித்து சிங்கள மயமாக்கலை துரிதப்படுத்தும் நோக்கில் வனஜீவராசிகள் அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய திணைக்களங்கள் செயற்படுகின்றன.

வவுனியா வடக்கு முல்லைத்தீவு இணைந்த பகுதியில் கிமுலு ஓயா என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது..இந்த திட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள தனி குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக 7,000 மில்லியன் ரூபா நிதி இந்த திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. இதில் 2500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி அது வனப்பகுதி என பின்னர் அறிவிக்கப்பட்டு காலப்போக்கில் அந்த வனப்பகுதி அழிக்கப்பட்டு அங்கு சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு வனஜீவராசிகள் அமைச்சு மற்றும் அதுசார்ந்த திணைக்களங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றன.

இயற்கை வன பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பூர்வீக காணிகள் “வனபாதுகாப்பு” என்ற பெயரில் திட்டமிட்ட வகையில் சூறையாடப்படுகின்றன. இதனை சர்வதேசம் கண்டு கொள்வதும் இல்லை. ஆகவே எமது சமூகத்தினருக்கு எதிரான இந்த அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக வாக்களிப்போம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வனப்பகுதி தொடர்பில் 2009 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட அனைத்து வர்த்தமானிகளும் இரத்து செய்யப்பட வேண்டும் என்றார்.

Exit mobile version