‘எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும்’- இந்திய சுதந்திர நாள் உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

PMO India

இந்தியாவின் 76வது சுதந்திர நாள்  இன்று, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்திய அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளும் பங்கேறுள்ளனர்.

டெல்லியில் உள்ள செங்கோட்டையில் 10,000க்கும் அதிகமான  காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு பட்டம், ஆளில்லா விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு நீண்ட நெடியது. உலகின் எல்லா பகுதிகளிலும் இந்திய தேசியக் கொடி பறக்கிறது. ஆருடம் அனைத்தையும் தகர்த்து தேசியக்கொடி பறக்கிறது. வளர்ச்சியை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டிய நேரமிது” என தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிக முக்கியம் என சுட்டிக்காட்டி, 5 உறுதிமொழிகளையும் பட்டியலிட்டார்.

அந்த ஐந்து உறுதிமொழிகள்:

+முதலாவது நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். அந்த     இலக்கு இந்தியாவை வளர்ந்த தேசமாக்குவது.

+இரண்டாவது உறுதிமொழி, எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும்.

+மூன்றாவது நமது பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும்.

+நான்காவதாக, ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றிக் கொள்வோம்.

+இறுதியாக நாம் ஏற்க வேண்டிய ஐந்தாவது உறுதிமொழி குடிமகனின் கடமைகளை ஆற்றுவது. முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் கடமை இருக்கிறது என பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.