Home செய்திகள் மட்டக்களப்பு மாந்தீவு பறவைகள் சரணாலய பகுதிக்குள் விமானப்படை முகாம் அமைப்பு

மட்டக்களப்பு மாந்தீவு பறவைகள் சரணாலய பகுதிக்குள் விமானப்படை முகாம் அமைப்பு

சரணாலய பகுதிக்குள் விமானப்படை முகாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலய பகுதிக்குள் விமானப்படை முகாம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாந்தீவு சரணாலயத்திற்குள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான தொழுநோய் வைத்தியசாலை மற்றும் முருகன் கோயில், கத்தோலிக்க தேவாலயம் உள்ளிட்டவையும்   காணப்படுகின்றன.

அத்தோடு இலங்கையில் வரலாற்று ரீதியாக குறித்த பிரதேசம் பறவைகள் சரணாலயமாக உள்ளது.

இந் நிலையில் குறித்த பிரதேசத்தில் திடீரென விமானப்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாந்தீவு பிரதேசத்திற்குள் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கு நின்ற விமானப்படையினர் அனுமதி மறுத்துள்ளதோடு பாதுகாப்பு அமைச்சில் அனுமதி எடுத்து வருமாறு கோரியுள்ளனர்.

இதுவரை காலமும் சுகாதார அமைச்சுக்கு சொந்தமாக இருந்து வந்த மாந்தீவு பிரதேசம் எப்போது பாதுகாப்பு அமைச்சுக்கு  மாற்றப்பட்டது என்ற விடயம் யாருக்கும் தெரியாத நிலையில், அங்கு விமானப்படைக்கு சொந்தமான இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டபோது, குறித்த பிரதேசத்தில் விமானப்படைக்கு சொந்தமான தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்று தற்காலிகமாக இயங்கி வருவதாகவும் நிரந்தர இராணுவ முகாம் ஒன்றுக்கான அனுமதி கோரப்பட்ட போதும் அதற்கான எந்த உத்தியோக பூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுகாதார அமைச்சுக்கு சொந்தமான குறித்த பிரதேசத்தில் விமாப்படை முகாம் அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அதனை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு மறுப்பு தெரிவித்து வந்துள்ளது. இந் நிலையில் தற்போது குறித்த இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version