வெள்ள அனர்த்தம்: தடம் தெரியாமல் அழிந்து போயுள்ள விவசாய நிலங்கள்…

நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் லிந்துலை – அக்கரகந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள்  முழுமையாக அழிந்துள்ளன.

இங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட மரக்கறித் தோட்டங்கள் வெள்ளத்தால் அடியோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கோடிக்கணக்கில் நட்டமடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில், ஒருசில விவசாயிகள் ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரையிலான நிலங்களில் கரட், லீக்ஸ், போஞ்சி, பீட்ரூட் உள்ளிட்ட பல வகையான மரக்கறிகளைப் பயிர் செய்திருந்தனர்.

சிலரது விவசாயப் பயிர்கள் அறுவடைக்கு நெருங்கியிருந்த நிலையில் வெள்ளம் ஏற்பட்டதால், பல விவசாயிகள் மிகப் பெரிய நட்டத்தை அடைந்துள்ளனர்.

பல விவசாய நிலங்கள் தடம் தெரியாமல் அழிந்து போயுள்ளன.  நீர்ப்பாசனக் கட்டமைப்புகளும் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன. தற்போது சேதமடைந்து காணப்படும் விவசாய நிலங்களை மீண்டும் பண்படுத்தி விவசாயம் செய்ய மிக அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

மலையகப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வரலாறு காணாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று   அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.