அகதிகள் தொடர்பான இங்கிலாந்து மற்றும் ருவாண்டா இடையிலான ஒப்பந்தம், அவுஸ்திரேலிய கொள்கையின் அப்பட்டமான நகல்

இங்கிலாந்து – ருவாண்டா இடையிலான ஒப்பந்தம்

ஐரோப்பியாவிலிருந்து இங்கிலாந்தை படகு வழியாக சென்றடையும் 40 வயதுக்கு உட்பட்ட ஆண் தஞ்சக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் புதியதொரு ஒப்பந்தம் இங்கிலாந்து- ருவாண்டா இடையே சமீபத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அவுஸ்திரேலியா கடல் கடந்த தடுப்பு முகாம் கொள்கையின் அப்பட்டமான நகல் என பப்பு நியூ கினியா தீவில் உள்ள பாதிரியாரான Giorgio Licini தெரிவித்திருக்கிறார். 

அதே தேவை. அதே வடிவம் என அவுஸ்திரேலிய தடுப்புக் கொள்கையுடன் ஒப்பிட்டு இந்த ஒப்பந்தத்தை அவர் சாடியிருக்கிறார்.  கடந்த 2013ம் ஆண்டு இவ்வாறு தஞ்சமடையும் அகதிகளை வேறொரு நாட்டுக்கு அனுப்பும் செயலை முதன் முதலில் அவுஸ்திரேலிய அரசு தொடங்கியது. படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயல்பவர்களை ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம் எனச் சொல்லிய அவுஸ்திரேலிய அரசு, அகதிகளை அருகாமை தீவு நாடுகளான பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியது.

இவ்வாறு அனுப்பப்பட்ட பல அகதிகள் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாகி இன்றும் நிச்சயத்தன்மையற்ற வாழ்வில் சிக்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மட்டும் சிறிய படகுகள் வழியாக சுமார் 28 ஆயிரம் இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர், இந்த எண்ணிக்கை கடந்த 2020ல் 8500 ஆக இருந்தது.

தற்போதைய புதிய ஒப்பந்தத்தின் படி, இங்கிலாந்தில் சிறிய படகுகள் வழியாக தஞ்சமடைபவர்களை அந்நாட்டிலிருந்து 6400 கிலோ மீட்டர் அப்பால் உள்ள ருவாண்டாவுக்கு இங்கிலாந்து அரசு அனுப்பயிருக்கிறது. சட்டவிரோத புலம்பெயர்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக சொல்லப்படும் இதனை இங்கிலாந்து எதிர்க்கட்சியினரும் அகதிகள் நல செயல்பாட்டாளர்களும் ‘மனிதாபிமானமற்றது, மக்கள் பணத்தை வீணடிப்பது’ என கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Tamil News