Tamil News
Home செய்திகள் அகலேகாத் தீவின் இந்தியக் கடற்படைத் தளமும் அகலேகா மக்களின் எதிர்காலமும் – மொழியாக்கம்: ஜெயந்திரன்

அகலேகாத் தீவின் இந்தியக் கடற்படைத் தளமும் அகலேகா மக்களின் எதிர்காலமும் – மொழியாக்கம்: ஜெயந்திரன்

அகலேகா தீவு இந்திய கடற்படைத் தளம் மக்கள் கவலை: மொரீசியஸ் நாட்டுக்குச் சொந்தமான அகலேகா (Agalega) தீவில் வாழுகின்ற கிட்டத்தட்ட 300 பேர், அந்தத் தீவு இந்திய கடற்படைத் தளமாக விரைவில் மாற இருக்கின்ற காரணத்தால், அத்தீவில் தமது எதிர்காலம் தொடர்பாக ஆழ்ந்த கவலை அடைவதாகக் கூறுகிறார்கள்

இராணுவ ரீதியான பயன்பாடுக்காக, கடந்த இரண்டு வருடங்களாக 3 கிலோமீற்றர் நீளமான விமான ஓடுதளத்தையும் இரண்டு பாரிய இறங்கு துறைகளையும் அத்தீவில் இந்தியா நிர்மாணித்து வருவதை அல்ஜசீராவின் விசாரணைப் பிரிவு கண்டறி ந்திருக்கிறது.

அல்ஜசீரா திரட்டிய தகவல்களை உறுதிப்படுத்திய இராணுவ ஆய்வாளர்கள், கடல் தொடர்பாகப் புலனாய்வுத் தகவல்களைத் திரட்டவும் அத்தீவிலிருந்து கடற் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், இந்தியக் கடற்படை இத்தீவைப் பயன்படுத்தப் போகிறது என்று மேலும் தெரிவித் திருக்கிறார்கள்.

இக்குறிப்பிட்ட இராணுவத் தளம் தொடர்பான வதந்திகளும் அறிக்கைகளும் 2018ம் ஆண்டில் முதன் முதலாக வெளிவரத் தொடங்கின. ஆனால் அகலேகாவில் முன்னெடுக்கப் படுகின்ற கட்டட நிர்மாணப் பணிகள், இராணுவ நோக்கத்துக்காக முன்னெடுக்கப் படுகின்றன என்பதை அறவே மறுத்து வந்த இந்தியாவும் மொரீசியசும், உட்கட்டமைப்பு நிர்மாணப் பணிகள் அனைத்தும் அத்தீவில் வாழ்கின்ற மக்களது பயன்பாட்டுக்கானதே என்றே கூறி வந்திருக்கின்றன.

மீன்பிடியையும் தெங்குப் பயிர்ச் செய்கையையும் தமது தொழில்களாகக் கொண்டு வாழ்கின்ற அகலேகா மக்களோ, 250 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த நிர்மாணப் பணிகள் நிச்சயமாகத் தமது பயன்பாட்டுக்கானவை அல்ல என்று திட்ட வட்டமாக நம்புகின்றனர்.

“ஒரு விமான நிலையத்தையும் ஒரு மருத்துவமனையையும் கட்டித் தருமாறு நாங்கள் கேட்டோம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு பாரிய விமான நிலையத்தைக் கட்டித்தருமாறு நாம் ஒரு போதும் கேட்கவில்லை” என்று அகலேகாத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பிராங்கோ பூலே (Franco Poulay) அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார்.

இந்த விமான நிலையத்தைக் காணும் போதெல்லாம் எமது எதிர்காலம் தொடர்பாக எமக்குப் பாரிய கவலை ஏற்படுகிறது. இதே கருத்தைத் தான் அவரது சகோதரர் ஆர்ணோ பூலேயும் (Arnaud Poulay) வெளிப்படுத்தினார்.

“ஒரு விமான நிலையத்தையும் ஒரு மருத்துவமனையையும் கட்டித் தருமாறு நாங்கள் கேட்டோம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு பாரிய விமான நிலையத்தைக் கட்டித்தருமாறு நாம் ஒரு போதும் கேட்கவில்லை”

“எமக்கு நிச்சயமாக ஒரு கப்பல் இறங்குதுறை தேவையாக இருக்கிறது. ஆனால் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற இறங்குதுறை எமது பயன்பாட்டுக்காகக் கட்டப்படவில்லை என்பதும் எமக்கு நன்கு தெரிகின்றது. இந்த இறங்கு துறைகளில் தொழில் புரிய தற்போது அகலேகா வாசிகள் எவருக்குமே பயிற்சி வழங்கப் படவில்லை. ஆகவே இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கே அங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது” என்று ஆர்ணோ மேலும் கூறினார்.

எமது பிள்ளைகளும் இளையோரும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பயிற்சி வழங்கப் படவில்லை.

தியேகோ கார்சியா தீவு (Diego Garcia)

மொரீசீயசுக்குச் சொந்தமான தியேகோ கார்சியா தீவில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்பட்ட கதியே தங்களுக்கும் ஏற்படப்போகிறது என்று  அகலேகா மக்கள் அச்ச மடைகிறார்கள். மொரீசியசின் முன்னைய காலனீய ஆட்சியாளரான பிரித்தானியா, 1966 இல் அத்தீவை அமெரிக்காவுக்குக் குத்தகைக்கு வழங்கியிருந்தது.

அத்தீவு 1971ம் ஆண்டில் ஒரு இராணுவத் தளமாக மாற்றப்பட்டு, அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் அனைவரும் வேறு இடங்களில் குடியேற்றப்பட்டார்கள். இன்றோ அந்தத் தீவு அமெரிக்காவின் 15 கட்டளைத்தளங்களைக் கொண்டிருப்பதுடன், தரைப்படை, நீர்மூழ்கிக் கப்பல்கள், நீண்ட தூரம் சென்று தாக்கும் தாக்குதல் விமானங்கள் என்பவற்றின் தளமாகவும் பயன் படுத்தப்படுகின்றது.

பிரித்தானியா, மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒரு நீண்ட காலப் பிணக்குக்கு உரிய விடயமாக சேகொஸ் தீவுக் கூட்டங்களின்  (Chagos Archipelago)  ஒரு பகுதியாக இருக்கின்ற தியேகோ கார்சியா தீவு இருந்து வருகிறது. ‘இந்த தீவுக் கூட்டங்களுக்கான இறைமை பிரித்தானியாவுக்கு இல்லை’ என்று ஐக்கிய நாடுகளின் கடல்சார் நீதிமன்று, இந்த வருடத்தின் தொடக்கத்தில் தீர்ப்பளித்திருந்தது. “தமது பாதுகாப்பு நோக்கங்களுக்கு இத்தீவுக்கூட்டங்களின் அவசியம் எப்போது இல்லாமற் போகின்றதோ, அப்போது மட்டும் அந்தத் தீவுக்கூட்டங்களை மீண்டும் மொரீசியசுக்குத் தாம் திருப்பிக் கொடுப்போம்” என்று பிரித்தானியா கூறியிருக்கிறது.

ஒரு இராணுவத் தளமாக தியேகோ கார்சியா தீவு மாற்றப்பட முன்னர் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள், அத்தீவுக்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கான தமது உரிமைக்காக அன்றிலிருந்து இன்று வரை போராடி வருகிறார்கள்.  தமது வாழ்க்கைக்குப் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாகவும், சீமெந்து மற்றும் கால்நடைகளைத் தமது தீவுக்குள் கொண்டு வர தமக்கு அனுமதி மறுக்கப் பட்டிருப்பதாகவும் அகலேகா வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தீவை விட்டு முன்னர் வெளியேறியவர்கள் இப்போது அத்தீவுக்குத் திரும்பிச் செல்ல முடியாதிருப்பதாகச் சொல்கின்றனர்.

அகலேகாவிலிருந்து வெளியே செல்லவோ அல்லது அகலேகாவுக்கு உள்ளே வரவோ விரும்புகின்றவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மொரீசியசிலிருந்து அகலேகாவுக்கு பயணிக்கின்ற கப்பல் மூலம் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள முடியும். ஆனால் மேற்படி பயணம் மிகவும் பிரச்சினைக்குரியதாகி விட்டதாக அகலேகா வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

“2013ம் ஆண்டிலிருந்து அங்கு செல்ல நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்று 67 வயதான றோசலெட் ஜஸ்மின்  (Rosalette Jasmin) அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார்.

“எனது இரண்டு சகோதரர்கள் அங்கு இருக்கிறார்கள், எனது மருமக்களும் அங்கு இருக்கிறார்கள். அவர்களைப் போய்ப் பார்க்க நான் ஆசைப்படுகின்றேன். ஆனால் அங்கு செல்ல நான் முயற்சி செய்யும் ஒவ்வொரு தடவையும் பயணச் சீட்டுக்கள் முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த தடவை முயற்சி எடுக்கும் படியும் எனக்குச் சொல்லப்படுகிறது”.

“இப்படியாக அடுத்த தடவை முயற்சி செய்யுங்கள் என்று ஒவ்வொரு தடவையும் எனக்குச் சொல்லப்படுகிறது. இதனால் நான் மனம் தளர்ந்தே போய் விட்டேன்”.

அகலேகாவுக்குச் செல்பவர்கள் அங்கே நோய்வாய்ப் படுவார்களாக இருந்தால் அந்த மருத்துவ செலவுக்காக, மொரீசியசிலிருந்து அங்கு செல்பவர்களிடம் முன்கூட்டியே ஒரு பெரிய கட்டணத்தை அறவிடும் திட்டம் மொரீசியஸ் அரசிடம் இருந்ததாக அத்தீவில் வாழுகின்ற மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கடும் எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவாக அத்திட்டம் இறுதியில் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் அகலேகாவுக்குச் செல்ல விரும்புகின்றவர்கள் பலவிதமான தடைகளைத் தொடர்ந்து எதிர்நோக்குகின்றனர்.

“மற்றவர்களால் எங்கள் தீவு சுரண்டப்படுவதைப் பார்க்கும் போது அது ஆழ்ந்த மனவேதனையை எமக்குத் தருகிறது. ஆனால் சிறிது காலம் அங்கே சென்று, நாங்கள் பிறந்த இடத்தில் சுதந்திரமாகக்  காற்றைச் சுவாசிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு நாங்கள் தள்ளப் பட்டிருக்கிறோம்” என்று மொரீசியஸ் பெருநிலப்பரப்பில் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கின்ற அகலேகா வாசியான அலிக்ஸ் கலப்பின் (Alix Calapin) அல்ஜசீராவிடம் கூறினார்.

அந்தத் தீவுக்குச் செல்லப் பல வருடங்களாக கலப்பின் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். “ஆனால் கப்பலில் பயணிக்க இடமில்லை” என்று ஒவ்வொரு தடவையும் அவருக்குச் சொல்லப்படுகிறது. தியேகோ கார்சியா தீவின் நிலைமையை அகலேகாவுடன் ஒப்பிடும் போது இரண்டுக்கும் இடையே ஒற்றுமைகளும் இருக்கின்றன. அதே நேரம் வேற்றுமைகளும் இருக்கின்றன என்று அவுஸ்திரேலியத் தேசியப் பல்கலைக் கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற சாமுவேல் பாஷ்பீல்ட் (Samuel Bashfield) தெரிவிக்கிறார்.

“தியேகோ கார்சியா தீவில் நடந்ததைப் போன்ற ஒரு நிகழ்வு அகலேகாத் தீவிலும் நடைபெறக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது. ஆனால் அதே நேரம் மொரீசியஸ் தமது இறைமையை இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கும் என்று தான் எண்ணவில்லை” என்று அவர் அல்ஜசீராவுக்கு மேலும் தெரிவித்தார்.

அகலேகாவில் வாழ்கின்ற மக்கள் நாடுகடத்தப்பட மாட்டார்கள் என்றும் மக்கள் தொடர்ந்தும் அங்கு வாழக்கூடியதாக இருக்கும் என்று இரண்டு அரசுகளுமே வாக்களித்திருக்கின்றன.

“ஆனால் நிலைமை அங்கு கட்டாயம் மாற்றமடையும். ஏனென்றால் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவுபெற்ற பின்னர், தமது விமானங்களைப் பயன்படுத்தி கடற் பாதுகாப்புப் பணிகளை இந்தியா நிச்சயமாக மேற்கொள்ளும்” என்று பாஷ்பீல்ட் கருத்துத் தெரிவிக்கிறார்.

“ஒரு இராணுத் தளத்தை இயக்குவது என்னும் பொழுது அதனால் பலவிதமான தாக்கங்களும் விளைவுகளும் ஏற்படும்” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

“இந்த இராணுவத் தளம் முற்று முழுதாகக் கட்டி முடிக்கப்படும் போது அகலேகாவில் வாழும் மக்களின் வாழ்க்கை முற்றாகவே மாற்றமடையும். ஒரு இராணுவத் தளத்தினுள்ளே மக்கள் இயல்பாக நடமாட முடியும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது”.

இவ்விடயத்துடன் தொடர்புடைய அனைவரையுமே எமது ஆய்வுப் பிரிவு தொடர்பு கொண்டது.

“அகலேகாவில் ஒரு இராணுவத் தளத்தை நிர்மாணிப்பதற்கு மொரீசியஸ்க்கும் இந்தியாவுக்கும் இடையே எந்தவிதமான உடன்படிக்கையும் கைச்சாத்திடப் படவில்லை” என்று மொரீசியஸ் அரசு தமது நிலைப்பாட்டை மீள வலியுறுத்தியது.

ஒரு இராணுவத் தளம் என்று கூறும் போது, “நிரந்தரமாக, இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தோடு, தமக்குச் சொந்தமான முறையில் இராணுவ உபகரணங்களைச் சேகரித்து வைக்கவும் இராணுவத்தினதைத் தங்கவைக்கவும் ஒரு தளம் இயக்கப் படுவதையுமே இராணுவத் தளம் என்ற பதம் குறிப்பிடுகிறது” என்று மொரீசியஸ் அரசு தெளிவுபடுத்தியது.

அகலேகாத் தீவில் வாழ்கின்ற மக்களை இடம்பெயர வைக்கின்ற எந்தவிதமான எண்ணமும் தம்மிடம் இல்லையென்றும் மொரீசியஸ் அரசு சுட்டிக்காட்டியது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சும் இந்திய வெளிவிவகார அமைச்சும் இவ்விடயம் தொடர்பாக எம்மிடம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

நன்றி: அல்ஜசீரா

Exit mobile version