அவுஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் ஆப்கானில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள்

தற்காலிக விசாக்கள் கிடைத்தும் வெளியேற முடியாமல்

ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலியாவுக்கு உதவிய 150க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் வெளியேற முடியாமல் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். 

காபூலில் செயல்பட்ட அவுஸ்திரேலிய தூதரகத்தில் பணியாற்றியவர்களும் அவுஸ்திரேலிய படையினருக்கு மொழி பெயர்ப்பாளர்களாக பணியாற்றியவர்களும் வெளியேற முடியாத நிலையில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஓகஸ்ட் 27ம் திகதியுடன் நிறுத்தப்பட்ட வெளியேற்ற விமானங்களை அடைய முடியாததால் இவர்கள் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது.

சாம், அவ்வாறான தற்காலிக விசா பெற்ற ஆப்கானியர்களில் ஒருவர். கடந்த 6 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய தூதரகத்தில் கவச வாகன பராமரிப்பு ஒப்பந்ததாரராக பணியாற்றிய சாம், தனது மூன்று மாத தற்காலிக விசா குறித்து அச்சம் கொண்டிருக்கிறார்.

“எனக்கு மூன்று மாத காலத்திற்கு விசா வழங்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே 35 நாட்கள் கடந்து விட்டன. இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளன,” எனக் கூறும் சாம், விசா காலம் முடிந்த பின்னர் ஆஸ்திரேலிய அரசு தங்களை மறந்துவிடுமோ என்ற அச்சத்துடன் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி சுமார் ஒரு மாத காலம் கடந்திருக்கிறது. காபூல் தாலிபான் வசம் சென்றதை அடுத்து அமெரிக்காவும் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளும் பரபரப்பான சூழலில் அவசர கதியில் ஆப்கானை விட்டு வெளியேறின.

வெளியேற்ற விமானங்கள் நிறுத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சாம்- க்கு அவுஸ்திரேலிய விசா வழங்கப்பட்டிருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் நிலவிய பெருங்குழப்பமான சூழலினால் அவரால் விமான நிலையத்தை அடைய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், அடுத்த அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்குமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகாரங்கள் துறை அறிவுறுத்திய நிலையில் அதன் பின்னர் அத்துறையிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை எனப்படுகின்றது.

“இங்கேயே தங்கியிருப்பதா? வெளியேறுவதா? அல்லது மேலும் பல நாட்களுக்கு காத்திருப்பதா? எனத் தெரியவில்லை. அவுஸ்திரேலிய அரசிடமிருந்து அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என்றும் தெரியவில்லை,” எனக் கூறுகிறார் ஆப்கானியரான சாம்.

வெளிநாட்டுப் படைகளுடன் பணியாற்றிய ஆப்கானியர்கள் தொடர்பான பயோ-மெட்ரிக் விவரங்கள் தாலிபான் அமைப்பிடம் சிக்கியுள்ளது தொடர்பாக பெருங்கவலை கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படைகளுடன் Uruzgan மாகாணத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஆப்கானியர் ஒருவர்.

“தாலிபான் படையினர் காபூலில் ஒவ்வொரு வீடுகளிலும் தினமும் சோதனை நடத்துகின்றனர். எங்களது பயோ-மெட்ரிக் விவரங்களை அவர்கள் கண்டறிந்து விடுவார்களோ என பயமாக உள்ளது,” என அந்த மொழிபெயர்ப்பாளர் கூறியிருக்கிறார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021