ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட அந்நாட்டு இராணுவத்தினத்தைச் சேர்ந்த 1,000பேர், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகாமை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஆஃப்கானிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை கவனித்து வரும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) காலையில் தங்கள் எல்லைக்குள் ஆஃப்கானிஸ்தான் படையினர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இரவு முழுவதும் அவர்கள் தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட பிறகு தங்கள் பகுதிக்குள் வந்ததாகவும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் படையினர் தஜிகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைந்து கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறை. கடந்த இரு வாரங்களில் இது ஐந்தாவது முறையாகும்.
அதே சமயம், அந்த நாட்டு படையினர் பலரும் சமீப காலமாக பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவதாக தகவல்கள் வருகின்றன.
அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப்படையினர் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவரும் நிலையில், ஆஃப்கானிஸ்தானில் பத்தில் மூன்று பங்கு இடத்தை கட்டுப்படுத்திவரும் தலிபான்கள், குறிப்பாக, தஜிகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகே உள்ள பாதக்ஷான், தக்கார் மாகாணங்களில் வெகுவாக முன்னேறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.