Home செய்திகள் ஜனாதிபதியின் செயற்பாடு ‘நிழல் இராணுவ ஆட்சி’யே இலங்கையில் இடம்பெறுகிறது என்பதை உணர்த்துகின்றது – பா. பா.அரியநேத்திரன்

ஜனாதிபதியின் செயற்பாடு ‘நிழல் இராணுவ ஆட்சி’யே இலங்கையில் இடம்பெறுகிறது என்பதை உணர்த்துகின்றது – பா. பா.அரியநேத்திரன்

ஜனாதிபதியின் செயற்பாடு

இராணுவத்தினரை சகல விடயங்களிலும் பயன்படுத்துவதன் மூலம் ஒரு ‘நிழல் இராணுவ ஆட்சி’யே இலங்கையில் இடம்பெறுகிறது என உணரப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“பொது பாதுகாப்புக்காகவே சட்டரீதியாக காவல் நிலையங்கள் உள்ளன. ஆனால் தற்போது  இராணுவத்தினரை காவல் கடமையில் அனுமதித்தத்தன் பேரில் காவல் துறையினரால் பொதுமக்களை பாதுகாக்க முடியாது என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொள்கிறார். ஜனாதிபதியின் செயற்பாடு இதன் மூலம் தெரிகிறது.

சகல அரச நிர்வாக மட்டத்திலும் பல இராணுவத் தளபதிகளையும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளையும் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் பயன்படுத்துவது எதிர்காலத்தில் அடக்கு முறை ஆட்சிக்கே இட்டுச்செல்லும்.

பொதுமக்கள் பாதுகாப்பு எனும் பெயரில் உண்மையில் இராணுவத்தினரை நியமித்து அரசுக்கு எதிராக இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளும் எதிர்ப்புப் போராட்டங்களை அடக்குவதற்காகவும் இவ்வாறு இராணுவத்தினரை நியமித்துள்ளார்கள் என்ற சந்தேகமும் பலரின் மத்தியில் உண்டு.

தற்போதைய ஜனாதிபதி அவர்கள் ஏற்கனவே இராணுவத்தில் கடமை புரிந்தவர். அதன் பின்னர் பாதிகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியவர். இதனால் அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் அமைச்சர்களையும் விடவும் இராணுவத்தினர்மீது அதிக நட்பும் நம்பிக்கையும் கொண்டவர் என்பதை மீண்டும் இவ்வாறான நடவடிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது என்பதே உண்மை.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை, தமிழ் மக்கள் கூடுதலாகவும், இஸ்லாமிய மக்கள் அடுத்த நிலையிலும் வாழும் ஒரு மாவட்டம்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் மிக குறைவாக வாழும் மாவட்டம். இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆட்சியாளர்கள், மட்டக்களப்பில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைச் செய்து தமிழ் இனப்பரம்பலை குறைத்து  எதிர்காலத்தில் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து உருவாக்குவதற்கான நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் தற்போது மேய்ச்சல் தரைகளை இலக்கு வைத்து, சேனைப்பயிர் செய்கை என்ற போர்வையிலும், ஏற்கனவே மட்டக்களப்பில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள், அவர்களை மீள குடியேற்றம் என்ற போர்வையிலும் ஆதாரங்கள் எதுவும் இன்றி போலியான ஆவணங்களைத் தயாரித்து வெளிமாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு மட்டக்களப்பு மாவட்ட சில அதிகாரிகளும் துணையாக செயல்படுவதை காணமுடிகிறது. ஏற்கனவே 2012, 2019, காலப்பகுதியில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொண்டபோதும் தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய நாம் அதை தடுத்தோம். ஆதாரங்கள் இல்லை போலி ஆவணம் என்பதை அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தீடிரென தற்போது மீண்டும் அவ்வாறான முயற்சி எடுத்தபோது நாம் வாகரை காரமுனையில் சென்று கவன ஈர்ப்பு போராட்டம் மூலம் தடுத்தோம்.இது தொடர்பாக நீதி மன்றத்தையும் நாடுவதற்கான முயற்சிகளை செய்யவுள்ளோம்.

மட்டக்களப்பில் இரகசியமாக சில அதிகாரிகள் மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் காணிகளை வெளியாருக்கு வழங்கத் துணைபோவதும், கிழக்கை மீட்போம் என கூறி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற இரண்டு அரசாங்க சார்பு அபிவிருத்திக் குழுதலைவர், இராஜாங்க அமைச்சர் மௌனமாக இருப்பதும் மட்டக்களப்பு மண்ணுக்குசெய்யும் துரோகம்.

Exit mobile version