46/1 பிரேரணையின் பின்னரும் தமிழருக்கு எதிரான செயற்பாடு

தமிழருக்கு எதிரான செயற்பாடு: மனித உரிமைகள் ஆணையாளருக்கு 5 தமிழ்க் கட்சிகள் கூட்டாக கடிதம்

“இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள், மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை அதிகளவில் பயன்படுத்தும் அதிகாரிகள், அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான உரிமையை கட்டுப்படுத்துவதுடன், தமிழ் மக்களை ஓடுக்குமுறைக்குள்ளாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுள்ளன” என ஐந்து தமிழ்க் கட்சிகளின் சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள்.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆறு பக்கங்களைக் கொண்ட இந்த விரிவான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின்  செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன்,  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,  ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சித்தார்த்தன்,  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா  மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,  பாராளுமன்றமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்  ஆகியோரின் கையொப்பத்துடன் விரிவான அறிக்கை ஒன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் ஆரம்பமாகும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் 46/1 பிரேரணை  பற்றிய   மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல  அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.  46/ 1 பிரேரணையை  இலங்கை அரசாங்கம் நிராகரித்து இருக்கிறது.  முக்கியமாக ஆதாரங்களைத் திரட்டுவதற்கான அதிகாரத்தை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு கடந்த கூட்டத் தொடரில் மனித உரிமை  பேரவை வழங்கியிருந்தது.

இதற்கான நிதி ஒதுக்கீடு இடம்பெற்று, அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையிலேயே ஆதாரங்களை திரட்டுவதற்கு மனித உரிமை ஆணையம் தயாராகி உள்ளமையை தெரிவித்துள்ளது.   அதன் அடிப்படையில் முக்கியமாக கருதப்படுகின்ற  எதிர்வரும் மனித உரிமை பேரவையின் அமர்வில் நீதி பொறிமுறைக்கான நடவடிக்கைகள் முன்னேற்றத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வேளையில் 46/1 பிரேரணைக்கு பின்னராக  அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அறிக்கையிடுவது என தமிழ் தேசிய கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.  இரு வாரங்களுக்கு முன்னர் மெய்நிகர் நிகழ்வாக இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்க் கட்சிகள் ஐந்தின் தலைவர்களுடைய கையொப்பத்துடன் இந்த விரிவான அறிக்கை ஒன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில்  46/ 1  பிரேரணைக்கு பின்னராக   தமிழர் தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தமிழினத்துக்கு எதிரான  விடயங்களான  காணி அபகரிப்பு,  தொல்லியல் சார்ந்த நடவடிக்கைகள், நினைவேந்தல்களுக்கான தடைகள்,  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையிலான கைதுகள்,  சட்ட நடவடிக்கைகள், தடுத்து வைத்தல்,  காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவ அதிகாரிகளை நியமித்தல்,  காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேட வேண்டிய அவசியம் இல்லை என்ற அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு,  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி பயணத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள், கைதுகள்,  அண்மையில் அரசினால் அறிவிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அபாயநிலைகள் என்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021