Tamil News
Home செய்திகள் அமைதிப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையை பாதுகாப்பதில் முன்னிறுத்தி செயற்படுங்கள் – அமெரிக்கத் தூதுவர்

அமைதிப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையை பாதுகாப்பதில் முன்னிறுத்தி செயற்படுங்கள் – அமெரிக்கத் தூதுவர்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்குமாறு இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிப்பதன் ஊடாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படுவதற்குப் பங்களிப்புச்செய்யவேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிடம் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

வெளிநாடொன்றில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திரியான ஜுலி சங், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், அதற்குரிய நியமங்களையும் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வேண்டுமெனவும் மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் அண்மையகாலங்களில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப் பட்டுவருவதுடன், போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட மிகமோசமான சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் மேற்குறிப்பிட்டவாறான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வேண்டுமென தூதுவர் ஜுலி சங்கிடம் வலியுறுத்தி டுவீட் ஒன்றைப் பதிவேற்றம் செய்யுமாறும் பொதுமக்களிடம் மன்னிப்புச்சபை கோரிக்கைவிடுத்துள்ளது.

‘அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இலங்கை அரசாங்கத்தினால் மிகமோசமாக அடக்கப்படுவதையும், எதிர்ப்புக்குரல்களை ஒடுக்குவதற்கான ஆயுதமாக மாற்றப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதையும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் பார்த்திருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டமானது மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு எதிரானதாகக் காணப்படுவதாகவும், தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான மக்களின் சுதந்திரத்தை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் அவர் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றார்’ என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மேலும் உயர்மட்ட இராஜதந்திரி மற்றும் பிறிதொரு நாட்டில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற ரீதியில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்குமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதன் ஊடாகவும் போராட்டங்கள் மற்றும் கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரத்தை இலக்குவைத்து எந்தவொரு சட்டமும் பிரயோகிக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலமும் இலங்கையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படுவதுடன் அதற்கு மதிப்பளிக்கப்படுகின்ற சூழல் கட்டியெழுப்பப்படுவதை முன்னிறுத்தி தூதுவர் ஜுலி சங் செயற்படவேண்டுமெனவும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version