பொறுப்புடைமையும் பொறுப்பற்ற செயற்பாடும் | பி.மாணிக்கவாசகம்

தமிழ் அசியல் கைதிகளின் விவகாரம் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. வழக்குகளின்றியும், முறையான விசாரணைகளின் வழியில் குற்றச்சாட்டுக்களின்றியும் அரசியல் கைதிகள் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். விசாரணைகளைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது விசாரணைளின் பின்னர் வழக்குத் தொடர முடியாதவர்களை விடுதலை செய்யவோ ஆட்சியாளர்கள் இன்னும் துணியவில்லை. இந்த நிலைமை கடந்த 13 வருடங்களுக்கு மேலாகத் தொடர்கின்றது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள், அவர்களுக்குப் பல்வேறு வழிகளில் உதவிகளைச் செய்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் விவகாரம் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட அரசியல் அதிகார உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே தமிழ் இளைஞர்கள் ஆ,யுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பேரின அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் கூறுவதைப் போன்று அவர்கள் பயங்கரவாதிகளல்ல. பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கவில்லை. தமிழ் இளைஞர்கள் ஆயுதப் பிரியர்களல்ல. ஆ,யுதங்களின் மீது மோகம் கொண்டவர்களுமல்ல. பேரினவாதிகளும், பேரின அரசியல்வாதிகளுமே அவர்களை ஆயுதப் போராட்டத்தில் வலிந்து ஈடுபடச் செய்தனர்.

உண்மையில் பேரின ஆட்சியாளர்களே பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் மக்களின் பொருளாதாரத்தை நசுக்கவும், அவர்களை அடக்கி ஒடுக்கவும், குண்டர்களையும், குண்டர்களைப் போன்று பொலிசார் உள்ளிட்ட ஆயுதப்படையினரையும் ஆட்சியாளர்களே பயன்படுத்தினர். தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் முதலாக தமிழ் மக்கள் மீதான இன அழிப்புச் செயற்பாடுகளை இனவாத ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்டிருந்தனர்.

தமிழ் மக்கள் மீது இனஅழிப்பு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட இன மற்றும் மத ரீதியிலான வன்முறைகளில் அவர்களின் பொருளாதாரம் முழுமையாக அடித்து நொறுக்கப்பட்டது. சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த நகரங்கள், பிரதேசங்களில் இருந்து தமிழ் மக்கள் அடித்துத் துரத்தப்பட்டார்கள். சிங்கள மக்களோடு ஐக்கியமாகவும் அந்நியோன்னியமாகவும் இணைந்து வாழ்ந்து வந்த எண்ணற்ற தமிழ்க் குடும்பங்கள் அரச ஆசிர்வாதத்துடன் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களை நோக்கி துரத்தியடிக்கப்பட்டார்கள்.

பல்லின பல மதங்களைக் கொண்ட ஜனநாயக நாடாகிய இலங்கையில் சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும், இறைமை வழியிலான அரசியல் அதிகார உரிமைகளோடு அமைதியாக வாழவும் வழியின்றி தொடர்ச்சியான வன்முறைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகினர்.

கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகள், இணக்க வழியிலான அரசியல் வழியிலான அணுகு முறைகள் எதுவும் தமிழ் மக்களின் அரசியல் அதிகார உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால் சாத்வீக வழிகளில் உண்ணாவிரதப் போராட்டம், ஒத்துழையாமைப் போராட்டம் என்று போராட்டங்கள் பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் பிரச்சினைகளை சமாதான வழிகளில் தீர்ப்பதற்குப் பதிலாக அதிகார வன்முறைகளின் மூலம் அந்தப் போராட்டங்களை அடித்து நொறுக்கி அவர்களை அடக்கி ஒடுக்குவதிலேயே பேரினவாதிகள் குறியாக இருந்தனர்.

இதனால், தமிழ் மக்கள் தனிவழியில் தனிநாட்டில் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதனையடுத்தே, தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கான சர்வசன வாக்கெடுப்பாக இலக்கு வைத்து 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் அரசியல் அமைப்பாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது,

தமிழ் மக்கள் கூட்டணிக்குப் பெரும்பான்மையாக வாக்களித்து, அதனை வெற்றிபெறச் செய்ததன் மூலம் தனிநாட்டுக் கோரிக்கைக்கு அங்கீகாரமளித்தார்கள். ஆனால் தமிழ் மக்களின் இந்தத் தேர்தல் தீர்ப்பை அப்போதைய ஆட்சியாளர்களாகிய ஜேஆர் ஜயவர்தனவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. தனிநாட்டுக் கோரிக்கை அவர்களை சீற்றமுறச் செய்தது.

நாட்டைத் துண்டாடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட தமிழ் மக்களுக்குப் பாடம் படிப்பிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ்த்தலைவர்களைக் கபடத்தனமாகத் தமது அரசியல் வலையில் வீழ்த்தி மாவட்டசபை முறைமையை அறிமுகப்படுத்தி 1981 ஆம் ஆண்டு அதற்கான தேர்தல்கள் நடத்தப்பட்ட வேளை அரச படையினர் குண்டர்களாக மாறி யாழ்ப்பாணத்தில் வெறியாட்டம் நடத்தியதில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. உயிர்ப்பலி கொள்ளப்பட்டது, வர்த்தக நிலையங்கள், வீடுகள், வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்ப்பெரியார்களின் உருவச் சிலைகள் அடித்து நொறுக்கி இடிபாடுகளாக்கப்பட்டன.

தொடர்ந்து 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜுலையின்போது. ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு தலைநகராகிய கொழும்பு உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழ் மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது மிக மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வர்த்தக நிலையங்கள் வீடுகள் என்பன கொள்ளையிடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. பலர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தச் சம்பவங்கள் அனைத்தும், பட்டப்பகலிலும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காகப் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊடரங்கு சட்டம் நடைமுறையில் இருந்த வேளையிலேயே இடம்பெற்றன. இந்தச் சம்பவங்கள் அனைத்துமே அரச பயங்கரவாதத் தாக்குதல்களாகவே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும், அரசியல் உரிமைக்காகவும் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ் இளைஞர்களே பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டார்கள்.

இத்தகைய பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளே இயற்கை நீதிச்சட்டத்திற்கு விரோதமாக பல ஆண்டுகளாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

யுத்தம் முடிவுற்றதையடுத்து, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும்  விடுதலைப்புலிகள், மறைந்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் என எண்ணற்ற விடுதலைப்புலி உறுப்பினர்கள் புலனாய்வு விசாரணைகளின் பின்னர் புனர்வாழ்வுப் பயிற்சி அளித்து விடுதலை செய்யப்பட்டார்கள். அதேவேளை, விடுதலைப்புலிகளின் சில முக்கியஸ்தர்கள் ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காக எதுவித நடவடிக்கைகளுமின்றி சுதந்திரமாக நடமாடவும், அரச சார்பு அரசியலில் ஈடுபடுவதற்கும் உச்சக்கட்ட வசதிகள் அளித்து அனுமதிக்கப்பட்டாhர்கள்.

ஆனால் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்பதற்காகக் கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக ஏற்றுக்கொள்வதற்கும் ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அவர்களைக் கால வரையறையின்றி தடுத்து வைத்திருக்கின்றார்கள். எத்தகைய நீதி நடைமுறையின் கீழ் இலங்கை அரசுகள் இந்த நடைமுறையைக் கைக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு விளக்கமில்லை.

தமிழ் அரசியல் கைதிகளை நடைமுறையில் உள்ள எந்த சட்ட திட்டங்களுக்கும் அமையாத வகையில் தடுத்து வைத்திருப்பதும், அவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தி கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தியிருப்பதும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அது மட்டுமல்லாமல் இயற்கை நீதிக்கு நேர் விரோதமான குற்றச் செயலுமாகும்.

ஒருவர் சட்டங்களை மீறிச் செயற்பட்டார் என்பதற்காகக் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் குற்றம் செய்திருக்கின்றார் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்து நீண்ட காலம் விசாரணைகளின்றியும் வழக்குத் தாக்கல் செய்யாமலும் தடுத்து வைத்திருப்பதை கொடுங்கோலாட்சி நடவடிக்கை என்றே கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமானமற்ற முறையிலும் நியாயமான காரணங்களின்றியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தடுத்து வைத்திருப்பது மனுநீதிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கையாகும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து 13 வருடங்களாகின்றன ஆயினும் யுத்தகாலத்துச் செயற்பாடுகளில் தொடர்புபடுத்தி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காமல் வைத்திருப்பது, தமிழ் மக்கள் மீதான ஆட்சியாளர்களின் பேரினவாத வெறுப்புணர்வின் அடையாளமாகவே நோக்க வேண்டியுள்ளது.

இத்தகைய பின்னணியில் 12 வருங்களாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட சிங்களக் கைதி ஒருவருக்கு அரசு 55 லட்ச ரூபா இழப்பீடு வழங்கியிருக்கின்றது. கொழும்பின் புறநகர்ப்புறமாகிய பொரள்ளை பொலிஸ் நிலையத்தி;ற்குப் பின்னால் இரகசியமாக இயக்கப்பட்டு வந்த புலனாய்வு பிரிவில் பணியாற்றிய அதிகாரியாகிய துர்யலாசே தர்மதாச என்பவருக்கே நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த இழப்பீடு வழங்கப்பட்டிருக்கின்றது.

வெடிப்பொருட்களை வைத்திருந்தமை, சுடுகலன்களை வைத்திருந்தமை, விடுதலைப்புலிகளுக்கு அரச புலானய்வுத் தகவல்களை வழங்கியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களில் இவருக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் நிரபராதியாகக் காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் பெருந்தொகைப் பணம் இழப்பீடாகவும் வழஙக்;கப்பட்டிருக்கின்றது.

இலங்கை பங்கரவாதத் தடைச்சட்டத்தின் நாலரை தசாப்த கால நடைமுறையில், 12 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு இவ்வாறு முதற் தடவையாக இழப்பீடு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் பல தமிழ் அரசியல் கைதிகள் 10, 15 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டு வழக்கு விசாரணையின்போது விடுதலை செய்யப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கான இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை.

நிராபராதி ஒருவர் எந்தக் காரணத்தைக் கொண்டும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது நீதி நெறிமுறை. குற்றம் செய்யாதவர் எந்தக் காரணத்தைக் கொண்டும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது. இதனை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அமைச்சும் அதிகாரிகளும் நடந்து கொள்ள வேண்டும். வழக்குத் தாக்கல் செய்யாமலேயே பல வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் நிரபராதி என தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். குற்றம் செய்யாமலேயே தண்டனை அனுபவிக்க நேர்ந்துவிட்ட அவர்களிடம் குறைந்த பட்சம்  பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரோ அல்லது பாதுகாப்பு அமைச்சோ வருத்தம் கூட  தெரிவிக்கவில்லை. மன்னிப்பு கோரவுமில்லை. அது மட்டுமல்லாமல் அவர்கள் தண்டனை அனுபவித்தமைக்காக இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை.

இத்தகைய தமிழ் அரசியல் கைதிகள் தமக்கான இழப்பீடு கோரி வழக்குத்தாக்கல் செய்யாதிருக்கக் கூடும். எனினும் யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த பின்னரும் அவர்களை சிறைத்தண்டனை பெறச் செய்தமைக்காக சம்பந்தப்பட்ட தரப்பினர் தாமாகவே முன்வந்து அவர்களுக்கான இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

மனிதாபிமானம் மரத்துப் போன நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை நடத்துகின்ற இனவாத மதவெறி கொண்ட பேரினவாத ஆட்சியாளர்களிடம் நீதியையும் நெறிமுறைகளையும் எதிர்பார்ப்பது வீணான செயற்பாடாகவே அமையும். ஆனாலும் பொறுப்புடைமையைப் புறக்கணித்துச் செயற்படுபவர்கள் ஒரு நாள் பொறுப்பு கூற நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.