இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் உலகளாவிய ரீதியில் வாழும் 300 க்கும் மேற்பட்ட தமிழர்களின் கையெழுத்துடன்கூடிய மனுவின் ஊடாக இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி ‘சேஞ்ச் ஓர்கனைசேஷன்’ என்ற அமைப்பின் இணையப்பக்கத்தின் ஊடாக இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒன்லைன் மனுவில் இதுவரை சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச சமூகமும் ஊடகங்களும் அமைதிகாத்துவருவது எமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இனப்படுகொலை இடம்பெற்று 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது குரலற்ற மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கோ சர்வதேச சமூகத்தினால் இதுவரையில் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

அதேபோன்று இலங்கைக்கு வெளியே பெரும்பான்மையான தமிழர்களின் ‘இல்லமாக’ பிரிட்டன் திகழ்கின்ற போதிலும், இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பிரிட்டனால் முன்னெடுக்கப்படாமை கவலையளிக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையினால் கடந்த 1948 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பான பிரகடனத்தின் வரைவிலக்கணமானது, சுதந்திர இலங்கையில் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களுடன் பொருந்துகின்றது.

அதுமாத்திரமன்றி இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற கருத்தை நிரூபிப்பதற்கான பல சான்றாதாரங்கள் காணப்படுகின்ற போதிலும், இதுகுறித்து இன்னமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் சபையின் பக்கச்சார்பான விசாரணைப்பொறிமுறையின் ஊடாக இனப்படுகொலை தொடர்பான ஆதாரங்கள் திரட்டப்படாமல், வெறுமனே போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் மாத்திரமே திரட்டப்படுகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இணையனுசரணை வழங்கியதன் மூலம் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு பிரிட்டன் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டுகின்றோம்.

அதேவேளை தமிழ்மக்கள் இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் உடலியல் ரீதியானதும், கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியானதுமான இனப்படுகொலையை அனுபவித்தார்கள் – அனுபவித்துவருகின்றார்கள் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை அவசியமென நாமனைவரும் கூட்டாக வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவுங்கள் என்று அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.