Tamil News
Home செய்திகள் அரசின் கொள்கையினால் கைவிடப்படும் நெற்செய்கை

அரசின் கொள்கையினால் கைவிடப்படும் நெற்செய்கை

அரசாங்கத்தின் பிழையான கொள்கையினால் விவசாயம் கைவிடப்பட்டதோடு உணவுப் பஞ்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட கிண்ணியா விவசாய  சம்மேளனப் பேச்சாளர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை விழிப்புணர்வு தகவல் மையத்தில் இன்று (30)    நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கமானது இரசாயனப் பசளை மற்றும் நாசினிகளின் இறக்குமதியை தடைசெய்தமையினால் கடந்த பெரும் போகத்தில் நெற்செய்கையும் ஏனைய பயிர்ச்செய்கைளும் முழுமையாக பாதிக்கப் பட்டன.

சேதனப் பசளைகளை மாத்திரம் சிபாரிசு செய்த அரசாங்கம் விவசாயச் செய்கையில் நட்டங்கள் ஏற்பட்டால் நட்ட ஈட்டை உடனடியாக வழங்குவோம் என வாக்குறுதி அளித்திருந்தும் இது வரை அது வழங்கப் பட வில்லை. ஆகையினால் பெரும்போகத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கான நட்ட ஈட்டை உடனடியாக வழங்கவேண்டும்,ஒரு ஏக்கருக்கு ஆகக் குறைந்தது 50Kg யூரியா பசளையேனும் பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும்,உழவு செய்வதற்கான போதிய எரி பொருளை தடையின்றி பெற்றுத்தர வேண்டும்,அரசினால் வழங்கப்படுகின்ற சேதனப் பசளையை உழவு செய்யும் முன் கிடைக்கச் செய்ய வேண்டும்,விவசாய செய்கைக்கான அனைத்து மூலப் பொருட்களுக்கும் கட்டுப் பாட்டு விலையை உறுதிப்படுத்தல், ஆகிய 5 கோரிக்கைகளையும் முன்வைத்து இவை நிறைவேற்றப் பட்டாலே அன்றி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என விவசாயிகள் நிபந்தனைகளையும் விதித்தனர்.

கந்தளாய் குள நீர்ப்பாசனத்தில் செய்கை பண்ணப் படும் 22000 ஏக்கர் உட்பட பல மாவட்டங்களில் செய்கை பண்ணப் படுகின்ற வயல்களை கைவிடுகின்ற போது உணவுத் தட்டுப் பாடு ஏற்படுவதுடன் எதிர்வரும் பெரும் போக நெற் செய்கைக்கான விதை நெல்லும் இல்லாமல் போகும் அபாய நிலையும் உள்ளது.ஏற்கனவே நடைபெற்ற மூன்று தீர்மானக் கூட்டங்களிலும் உரிய தீர்மானம் எட்டப் பட முடியாமல் போய்விட்டன.

எனவே எதிர்வரும் 04.05.2022ம் திகதி நடைபெற இருக்கும் இறுதி தீர்மானக் கூட்டத்திலேனும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூடிய வகையிலான நல்ல தீர்மானத்தை பெற்றுத் தர திருகோணமலை மாவட்ட செயலாளரும் விவசாய அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version