Tamil News
Home செய்திகள் ஜனாதிபதி ரணிலுக்கு இந்தியாவில் அன்பான வரவேற்பு காத்திருக்கிறது – இந்திய வெளியுறவுச் செயலாளர்

ஜனாதிபதி ரணிலுக்கு இந்தியாவில் அன்பான வரவேற்பு காத்திருக்கிறது – இந்திய வெளியுறவுச் செயலாளர்

இந்தியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அன்பான வரவேற்பு காத்திருக்கிறது. ஜனாதிபதியின் இந்த விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் சாதகமான மாற்றத்துக்கான ஒரு புள்ளியாக அமையும் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவத்ரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கிய தரப்பினருடனான சந்திப்பின் போது கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் ஊடகவியலாளர்கள் சிலருடனான கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

என்னுடைய இந்த குறுகிய கால பயணத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் மேலும் சில முக்கிய அமைச்சர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே எனது இந்த விஜயத்தின் நோக்கமாகும். அதற்கமைய நான் பங்கேற்ற சந்திப்புக்களில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயமானது உண்மையில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் சாதகமான மாற்றத்திற்கான ஒரு புள்ளியாக இருப்பதை உறுதிப்படுத்தும் முயற்சி குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் விஜயத்திற்கு முன்னதாக நாம் முன்னேறக்கூடிய பங்காளித்துவத்தின் முக்கிய பகுதிகள், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதாரப் பங்காளித்துவத்தின் கூட்டாண்மையின் கூறுகள் தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தை வெற்றியடைச் செய்வதே எமது இலக்காகும். அவர் நன்கு அறியப்பட்ட தலைவர் என்பதோடு, இந்திய – இலங்கை உறவின் மிகவும் வலுவான ஆதரவாளருமாவார்.

கடந்த 14-16 மாதங்களில் இலங்கை கடந்து வந்த பல்வேறு சவால்களில் நாம் சிறப்பாக இணைந்து பணியாற்றியுள்தோடு, ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளோம். இந்தியாவில் அவருக்கு மிகவும் அன்பான வரவேற்பு காத்திருக்கிறது என்பதை நான் உறுதியளிக்கிறேன்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள அதேவேளை, அவரது விஜயத்தை வெற்றிகரமானதாகவும் ஆக்குவோம். அதேவேளை, எமது உறவின் வெற்றியையும் உறுதிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version