மலையகம்:குரல்வளையை நசுக்கும் பொருளாதார நெருக்கடி:துரைசாமி நடராஜா

சமகால பொருளாதார நெருக்கடிகீடுகளுக்கு மத்தியில் இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தினை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தொழிலாளர்களின் சம்பளத்தை 3250 ரூபாவாக தீர்மானிக்க வேண்டுமென்ற கோஷங்களும் வலுப்பெற்று வருகின்றன.இதனிடையே டொலர் விலை குறைவடைந்துள்ளதை காரணங்காட்டி தேயிலை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதனால் தாம் நட்டத்தை எதிர்நோக்குவதாகவும் கம்பெனிகள் பஞ்சப்பாட்டு பாடி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர்  வே..இராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தி இருக்கின்றார்.மேலும் இது நியாயமான செயல் இல்லை என்றும் உடனடியாக கம்பெனிகள் சம்பள உயர்வினை வழங்க உறுதிபூண வேண்டுமென்றும் அவர் அழுத்தமாகக் கூறியிருக்கின்றார்.

பெருந்தோட்டத் தொழிற்றுறையின் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.கம்பனியினரின் இலாபத்தை மட்டுமே மையப்படுத்திய செயற்பாடுகள், தொழிலாளர்களின் நலன் பேணாத தன்மைகள், பெருந்தோட்டத் துறை குறித்த அரசாங்கத்தின் பாராமுகம் போன்ற பல விடயங்கள் தோட்டங்களினதும் தொழிலாளர்களினதும் எதிர்காலத்தை சூனியமாக்கி இருக்கின்றன.

இதேவேளை வழமைக்கு மாறான காலநிலை விளைவுகளால் விவசாயப் பயிர்களும் அதனை நம்பி வாழும் சமூகங்களும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவற்றுள் இலங்கை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உந்துசக்தியாக விளங்கும் தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற பணப்பயிர்கள்,நெல் போன்ற வாழ்வாதாரப் பயிர்கள் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கமே அதிக அக்கறை செலுத்த வேண்டிய விடயமாக விளங்குகின்றது.தேயிலைப் பயிர் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கமானது அதனை நம்பி வாழும் மக்களுக்கு மாத்திரமன்றி இலங்கை அரசுக்கும் பாரிய சவாலாக விளங்குகின்றது.

இப்போக்கானது தேயிலை உற்பத்தியினையும் அதனை நம்பி வாழும் மக்களையும் பாதிப்பதுடன் மீளமுடியாத விளைவுகளையும் தேயிலைத் துறைக்கு ஏற்படுத்தியுள்ளது.எனவே காலநிலை மாற்றமானது வெறுமனே ஒரு சூழல் பிரச்சினையாக மட்டுமன்றி சமூக, பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தி வருவதாக  புத்திஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறாக தேயிலைத் தொழிற்றுறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இம்மக்களுக்கு வழங்கப்படும் சம்பள நிலைமைகள் தொடர்பில் திருப்தியற்ற தன்மையே நீண்ட காலமாக இருந்து வருகின்றது.உழைப்புக்கேற்ற ஊதியம் இதுவரையிலும் அம்மக்களுக்கு   கிடைக்கவில்லை என்பதும் தெரிந்ததேயாகும்.

ஆரம்ப காலம் தொட்டே தொழிலாளர்களுக்கு குறைந்தளவான சம்பளமே வழங்கப்பட்டு வந்த நிலையில் இது நீண்ட காலமாக மாற்றப்படாத நிலையிலும் இருந்துள்ளது.தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைவாக இருந்தமை, வேதனங்களை உயர்த்துவதன் மூலம் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை உயர்த்த முடியாது எனக் கருதப்பட்டமை போன்றன வேதனங்கள் குறைந்த மட்டத்தில் இருந்தமைக்குமுக்கிய காரணமாக கூறப்படுகின்றது.

குறைந்தமட்ட வாழ்க்கைத் தரத்திற்கு பழகிப்போன இவர்களின் உற்பத்தித்திறனை வேதனங்களை உயர்த்துவதன் மூலம் அதிகரிக்க முடியாது என்ற வாதங்களும் இருந்து வந்துள்ளமையை அறிந்து கொள்ள முடிகின்றது.

கடந்தகாலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளங்களை நோக்குகையில் அது பின்வருமாறு அமைந்துள்ளது.இதனடிப்படையில் 1944 க்கு முன்னர் ஆண் தொழிலாளர்களுக்கான சம்பளம் 41 சதமாகவும், பெண் தொழிலாளர்களுக்கான சம்பளம் 37 சதமாகவும், சிறுவர்களுக்கான சம்பளம் 25 சதமாகவும் காணப்பட்டது.இதேவேளை 1947 இல் ஆண்களுக்கு 1.72 ரூபா, பெண்களுக்கு 1.38 ரூபா, சிறுவர்களுக்கு 1.12 ரூபா என்றவாறும் ,1967 இல் ஆண்களுக்கு 3.01 ரூபா, பெண்களுக்கு 2.45 ரூபா, சிறுவர்களுக்கு 2.13 ரூபா என்றவாறும் சம்பளம் வழங்கப்பட்டது.

1984 இல் ஆண்களுக்கும், பெண்களுக்கும்  சமமாக 24.23 ரூபா வழங்கப்பட்டது . இதேவேளை 1987 மற்றும் 1989 காலத்தில் இவ்விரு சாராருக்கும் முறையே 33.92,  37.00 ரூபா சம்பளமாக வழங்கப்பட்டது.1870 ஆம் ஆண்டுகளில் ஆண் தொழிலாளர்களின் வேதனங்கள் 33 தொடக்கம் 37 சதங்களாகவும் , பெண்கள், பிள்ளைகள் ஆகியோரின் வேதனங்கள் 25 தொடக்கம் 29 சதங்களாகவும் இருந்தன.1908 ம் ஆண்டின் ஆணைக்குழு அறிக்கை ஆண், பெண், பிள்ளைகள் ஆகியோரின் வேதனங்கள் முறையே 33, 25, 15 – 20 சநங்களாக இருந்ததாக குறிப்பிடுகின்றது.

தொழிலாளர்களின் வருமானம் குறித்து நோக்குகையில் 1979 க்கு முன்னர் கிடைத்துவந்த உணவு மானியங்கள் முக்கியமானவையென்று புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.1979 இல் இலங்கையில் ” உணவு முத்திரை” வறுமை நிவாரணமாக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.1965 வரை அரிசி மானியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் அரிசியின் உண்மை விலையில் ஒரு பகுதியினை அரசாங்கமே செலுத்தியது.

இச்சகாய விலையின் காரணமாக தொழிலாளர் ஒருவருக்கு 1960 இல் 61.36 ரூபாவும், 1965 இல் 65.52 ரூபாவும் இலாபமாகக் கிடைத்திருந்தது.1967 முதல் இலவச அரிசி வழங்கப்பட்டது.இதனால் 1967 இல் 59.28 ரூபாவும், 1969 இல் 64.48 ரூபாவும் இலாபமானது.1970 முதல்1978 வரை அரிசி இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.இதனால் 5 அங்கத்தவர்களைக் கொண்ட தொழிலாளர் குடும்பமொன்று மாதாந்தம் 1974 இல் 105 ரூபாவையும்,, 1979, இல் 53.33 ரூபாவையும் இலாபமாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது..இது தொழிலாளர் குடும்பமொன்றின் மாதாந்த வருமானத்தில் 20 தொடக்கம் 30 வீதம் வரையிலான பெறுமதியினைக் கொண்டிருந்தது.இத்தகைய நிலைமைகள் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவு பரிகாரமாக அமைந்திருந்தது.

 வேதனச் சட்டம்

1927 இல் 27 ம் இலக்க இந்திய தோட்டத்  தொழிலாளர் குறைந்தபட்ச வேதனச் சட்டம் முன்வைக்கப்பட்டது.இலங்கையில் இந்திய தொழிலாளர்களின் வேதனங்களை நிர்ணயிப்பதற்கு கொண்டுவரப்பட்ட  முதலாவது சட்டம் இதுவாகுமென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.தோட்ட வேதன சபைகளை ஏற்படுத்துதல், குறைந்தபட்ச வேதனங்களை நிர்ணயித்தல், நாளொன்றுக்கு ஒன்பது மணி நேரத்திற்கு மேற்பட்ட வேலைக்கு (மதிய உணவுக்கான ஒரு மணிநேரத்தையும் இது உள்ளடக்கும்) மேலதிகக் கொடுப்பனவுகளை செலுத்துதல், 10 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்தல் போன்ற பல முக்கிய விதிகளை 1927 இன் குறைந்தபட்ச வேதனச் சட்டம் கொண்டிருந்தது.இச்சட்டமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டமாக கொள்ளப்படுகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருமானப் பற்றாக்குறை அம்மக்களின் வாழ்வில் தொடர்ச்சியாகவே பல்துறை சார்ந்த தாக்க விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது.அவர்களின் வருமானம் வாழ்க்கைத் தரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கு தடைக்கல்லாக உள்ளது.தொழிலாளர் சம்பள உயர்வு குறித்து பல வடிவங்களில் போராட்டங்கள் பலவும் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றமையும் தெரிந்ததாகும்.வேலை நிறுத்தப் போராட்டம், மெதுவாக பணி புரியும் போராட்டம், தலைநகருக்கு தேயிலைப் பெட்டிகளை கொண்டு செல்ல விடாது முடக்கும் போராட்டம் போன்ற பலவற்றையும் நாம் இதன்போது சுட்டிக்காட்ட முடியும.எனினும் இத்தகைய போராட்டங்கள் தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்ததா? என்பது கேள்விக்குறிய ஒரு விடயமேயாகும்.இதேவேளை ஒன்றிணைந்த அரசியல் மற்றும் தொழிற்சங்க அழுத்தங்கள் உரியவாறு இல்லாமையானது தொழிலாளர்களின் சம்பள உயர்வு நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தி வருவதாக விமர்சனங்கள் பலவும் இருந்து வருகின்றன.

கம்பனியினர் தோட்டங்களை பொறுப்பேற்றதன் பின்னர் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கருதி அவர்கள் கரிசனையுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.உற்பத்தி செலவுகள் அதிகமாக உள்ளதாக காரணங்காட்டும் கம்பனிகள் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதில் பெரும் சிக்கல்களை தாம் எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்து வருகின்றன.

மேலும் தேயிலை விலை வீழ்ச்சி, தோட்டங்களின் பராமரிப்பு செலவு அதிகரிப்பு என்பவற்றையும் சம்பள உயர்வு வழங்கப்பட முடியாமைக்கு காரணமாக கம்பனிகள் முன்வைத்து வருகின்றன.இதனடிப்படையில் தற்போது டொலர் விலை வீழ்ச்சி கண்டுள்ளதைத் தொடர்ந்து கம்பனிகள் தேயிலை விலை குறைந்துள்ளதாக பஞ்சப்பாட்டு பாடி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும்  இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் டொலர் விலை குறைவதானது மக்களின் பொருளாதாரத்தை சீர் செய்வதற்கு நல்ல விடயமாகும் இருந்தாலும், டொலர் விலை குறைந்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பதற்கு கம்பனிகள் முயற்சித்து வருகின்றன.இது முறையற்றது என்று இராதாகிருஷ்ணன் குறிப்பிடுகின்றார்.கம்பனிகளின் இந்தக் கூற்று தொழிலாளர்களின் சம்பள உயர்வை மழுங்கடிப்பதாக அமையும்.இந்நிலையில் சமகால பொருளாதார நெருக்கீடுகளுக்கு மத்தியில் தொழிலாளர்களின் சம்பளத்தை 3250 ரூபாயாக தீர்மானிக்க வேண்டும் என்பது பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் கருத்தாக உள்ளது.

இதனிடையே தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு வேதனத் திருத்தம் அவசியமென்பதை முதலாளிமார் சம்மேளனத் தலைவர் சேனக அலவத்தேகம அண்மையில் ஏற்றுக் கொண்டிருந்தார்.இதன்போது உற்பத்தி சார்ந்த முறைகள் தொடர்பில் அவர் வலியுறுத்திப் பேசி இருந்ததோடு தொழிற்சங்கங்கள் கூறும் காலனித்துவ கால வேதன முறைமைகள் இக்காலத்துக்குப் பொருந்தாது.எனவே நவீன காலத்துக்கேற்ப வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வேதன முறைமைகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருநதமை நோக்கத்தக்கதாகும்.எவ்வாறெனினும் சமகால பொருளாதார நெருக்கடிகள் தொழிலாளர்களின் குரல்வளையை நசுக்கிவரும் நிலையில் சம்பள உயர்வு, மானியங்கள் என்பவற்றை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க அரசியல் தொழிற்சங்கவாதிகள் முன்வர வேண்டியது அவசியமாகும்.ஆறுதல் வார்த்தைகளால் தொழிலாளர்களின் வயிறு நிரம்பாது என்பதனை அரசியல் தொழிற்சங்க வாதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.