மலேசியாவின் பிரதான பேருந்து நிலையத்தில் திடீர் தேடுதல் நடவடிக்கை: இந்தியர்கள் கைது 

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்தியர்கள் உள்பட 11 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மலேசியாவின் கிளாந்தன் மாநிலத்தில் உள்ள எல்லை வழியாக மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜனவரி 3ம் திகதி அன்று இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குடிவரவுத்துறை இயக்குநர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத் தெரிவித்திருக்கிறார்.

இந்த 11 பேரில் 6 பேர் இந்தியர்கள் (5 ஆண்கள், 1 பெண்), மற்றும் 5 பேர் மியான்மர் நாட்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இவர்களை சோதித்ததில் அனைவரும் முறையான அனுமதி முத்திரையின்றி மலேசியாவுக்குள் நுழைந்தது தெரிய வந்திருக்கிறது. அதில் 4 மியான்மர் நாட்டவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இதில் கைது செய்யப்பட்ட ஒரு இந்தியர் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் மலேசியாவில் வேலை செய்யும் நோக்கத்துடன் சென்றிருக்கின்றனர்.

சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை கடத்தி வந்த கும்பல் பொது போக்குவரத்து நிலையங்களை ‘வெளிநாட்டவர்களை வேறு இடத்துக்கு மாற்றும் மையமாக’ பயன்படுத்தி வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் மலேசியாவுக்குள் நுழைவதற்காக முகவர்களிடம் 7,000 மலேசிய ரிங்கட்டுகள் (1,30,000 இந்திய ரூபாய்) செலுத்தியிருக்கின்றனர்.

மேலதிக நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட அனைவரும் புத்ராஜெயா குடிவரவுத் தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.