இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட நடமாடும் சேவை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதற்கான நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 7,000 க்கும் அதிகமான இலங்கை  குடும்பங்களைச் சேர்ந்த 12,500 க்கும் மேற்பட்டோர் வடமாகாணத்தில் குடியேறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்பிரகாரம் அவர்களது இலங்கை குடியுரிமையைப் பெறுவது தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவி வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் எதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் 1 ஆகிய நாட்களில் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய 31 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்திலும், நவம்பர் முதலாம் திகதி முற்பகல் 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிளிநொச்சி திறன் அபிவிருத்தி மத்திய நிலைய வளாகத்திலும் (கிளிநொச்சி மாவட்டச் செயலக பயிற்சி நிலையம்) இந்நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நடமாடும் சேவையில் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள், பிறப்பு, விவாகம், இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான பிரச்சினைகள்,  தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வது, திருத்தம் செய்வது மற்றும் காணாமல் போன அடையாள அட்டைக்கான பிரதி ஒன்றினை வழங்குவதற்குரிய சேவைகள், காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும்  மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரகப் பிரிவு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம், பதிவாளர் நாயகத்தின் திணைக்களம், காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் ஆகியன தமது சேவைகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.