இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு-  மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் எந்த தகவலும் இந்திய அரசு வெளியிடவில்லை

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி தொடர்ச்சியான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்,இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது என்ற அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியா, மேற்பார்வை பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் கட்சிகள் தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் தலைவர் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை  பேராசியர் இராமு. மணிவண்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி….

கேள்வி –

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டும் என தமிழ் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இது குறித்து இந்தியா மத்தியஸ்துக்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளதா?

இந்திய அரசு அந்த மாதிரி ஒரு முன்னேற்பாடுகளையோ அல்லது    வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்ற தமிழ் தேசிய கட்சிகள் இந்தியா அரசை  இந்த பேச்சுவார்த்தையில் கொண்டுவருவதற்கான  முயற்சிகளை செய்வது போலோ  இதுவரைக்கும் காணப்படவில்லை.  ஆனால் நிச்சயமாக தமிழ் தேசிய கட்சிகள் அல்லது வேறு தமிழ் கட்சிகள்,   அமைப்புகள் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த  பேச்சு வார்த்தையில் இந்தியா மத்தியஸ்தம்  செய்ய வேண்டும் என்று சொல்லும் பொழுது அவர்கள் ஒரு கோட்பாடுகளை வைக்கின்றனர். பொதுவாகவே 2009ம் ஆண்டுக்குப் பின்பு  பொதுவெளியில் அரசியலில் பலவீனமான ஒரு அரசியல் சூழல் பார்க்கப்படுகின்றது.  இந்திய அரசாங்கம்  குறித்த பேச்சு வார்த்தையில்  மத்தியஸ்தம் செய்யுமானால் ஒரு வலிமை  கூடலாம் அல்லது நியாயமான ஒரு தீர்ப்பு அல்லது நியாயமான ஒரு முன்னெடுப்புக்கள் வைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் தான் தமிழ் கட்சிகள்   இந்தியாவின் மத்தியஸ்தத்தைக் கோருகின்றனரே தவிர, இந்திய அரசாங்கம் இதுவரையும் மத்தியஸ்தம் போக வேண்டும் என்று  எந்த விதமான ஒரு முன்னெடுப்புக்களையும் எடுத்து வைத்ததாக எனக்கு தெரியவில்லை.

கேள்வி – இலங்கை விவகாரத்தில்  மத்தியஸ்தராக செயல்படுவது இந்தியாவுக்கு இருக்கக்கூடிய தடைகள் சவால்கள் என்ன?

இந்த பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யும் போது தடைகள் சவால்கள் என்று சொல்லும் பொழுது, இலங்கை அரசாங்கம், இதில் எத்தகைய  ஒரு நிலைப்பாடுகளை எடுக்கக்கூடும். தமிழ் அமைப்பகளும் தமிழ் தேசிய கட்சிகளும்   அரசியல் ரீதியாக    பலவீனமான ஒரு நிலையில் காணப்படுகின்ற ஒரு சூழல் இருக்கின்றது. இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் மிக மிக மோசமான ஒரு சூழலில் இருக்கின்றது. இந்த நிலையில், இந்திய அரசாங்கத்தின் ஒரு தலையீடு எத்தகைய ஒரு மத்தியஸ்தம் செய்யக் கூடும் என்று தமிழ் அமைப்புக்களும் இந்திய அரசாங்கமும் கூட யோசிக்கலாம்.

தமிழர்களுக்கு ஒரு வலுவான தீர்ப்பு அல்லது அவர்களின் நியாயங்களை எடுத்துக் கூறக்கூடிய வலிமை இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் இந்திய அரசாங்கத்தை பொருத்த வரையில்   இலங்கை அரசாங்கமும் தமிழ் அமைப்புகளும் குறிப்பாக தமிழ் தேசிய கட்சி  இவை அனைவருமே இந்தியாவின் மத்தியஸ்தத்தை இந்தியாவின் பங்காற்றலை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதே நேரம் அவர்கள் எவ்வாறு அதை பார்க்கின்றார்கள் என்பதைக் கூட அவர்கள் ஒரு ஆலோசணையாகவும் சொல்லலாம். அல்லது  இந்திய அரசாங்கத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லலாம். ஆனால்  இதில் வேறு சில பிரச்சினைகள் இருக்கின்றது. அதாவது குறிப்பாக 2009 ஒரு இராணுவ ரீதியான ஒரு தீர்வுக்கு இந்தியா உடந்தையாக இருந்ததாகப் பேசப்படுவதும் அதுமட்டுமன்றி இந்திய அரசாங்கம் இலங்கை பிரச்சினையில் மறுபடியும் ஒரு தலையீடு செய்ய வேண்டுமா என்ற ஒரு மன அழுத்தமும் இந்திய அரசாங்கத்திற்கு இருக்கலாம். இவை இரண்டையும் தாண்டி இன்று ழூன்றாவதாக   இராஜ தந்தர ரீதியான ஒரு  பார்வையும் இந்திய அரசாங்கத்திற்கு இருக்கலாம்.

இந்த பேச்சு வார்த்தையில் இந்திய அரசு தானே தன்னை அழைத்துக் கொண்டாலும் கூட அது சரியாகப் படாது. ஆனால் போரிற்கு பின்  தமிழ் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள்  இந்திய அரசாங்கத்தை சார்ந்து கடந்த 7 8 ஆண்டுகளாக இருக்கின்றனர். இந்திய அரசாங்கத்தின் வழிநடத்துதல், அல்லது ஆலோசணைகள் பல விடயங்களை முன் வைத்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் இந்தியாவிற்கும்   இலங்கைக்கான  ஒரு அயல் உறவுமூலமாக  அரசியல் அழுத்தத்தை கொண்டு போகக் கூடிய ஒரு வாய்ப்பு திரும்பவும் இந்தியாவிற்கு வரக்கூடும் அதை இந்தியா எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது ஒரு சவாலான விடயம்.

கேள்வி-

இன்றைய காலகட்டத்தில் இந்திய மத்தியஸ்தம் நியாயமான தீர்வு ஒன்றை ஈழத்தமிழர்களுக்கு பெற்றுத்தருவதில் ஆரோக்கியமான  பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறீர்களா?

நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான தீர்வு என்பது அரசியல் ரீதியாக ஆரோக்கியம் என்பது எதை என்று   நாம் பார்க்க வேண்டும்.

முதலாவதாக, வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் மற்றும் மலையக மக்கள் ஆகட்டும் அவர்களுக்கு ,எத்தகைய தீர்வினை இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்ற பார்வை இருக்கின்றது. அரோக்கியமான தீர்வு ஒரு பக்கம் ஆனால் அரசியல் தீர்வு என்பது பொதுவான ஒரு கருத்து. இந்த அரசியல் தீர்வுதான் அடுத்த கட்ட நகர்வுக்கான ஒரு முறையாகப் பார்க்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக இந்தியாவைப் பொருத்தவரையில் இரண்டு அடிப்படையிலான கருத்துக்களை முன் வைத்துதான் இலங்கை விவகாரத்தில் தலையீடுகளை மேற்கொள்கின்றது. ஒன்று இலங்கையின் இறையாண்மைக்கு எதிராகவும் இரண்டாவது இலங்கையின் ஒருங்கிணைந்த கருத்துக்கு ஒருங்கிணைந்த இலங்கைக்கு எதிராக இந்தியா  செயற்படாது என்ற கருத்தினை முன்வைத்துதத்தான் இந்தியா இது வரையில் செயற்பட்டு வருகின்றது. அதாவது இந்திரா காந்தியம்மையார் காலத்தில் ஒரு மேலோங்கிய ஒரு கருத்தில் மாற்றம் நிகழ வேண்டுமேயானால் இலங்கையின் அரசியல் மாற்றங்ளும் இந்திய பெருங்கடலில் நடந்தேறுகின்ற புவிசார் அரசியல் மாற்றங்களும் இந்தியாவின் இலங்கை சார்ந்த பார்வையில் மாற்றங்களை நிகழ்த்தலாம்.

ஆனால் இப்பொழுது எத்தகைய மாற்றங்கள் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடலும் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இவற்றையெல்லாம் ஒரு கணிப்பில் வைத்து இதில் ஏதேனும் ஒரு தளர்வுகள் இருக்குமா என்று நாம் சிந்திக்க வேண்டும். இல்லையென்றாலும் கூட இந்த அரசியல் தீர்வு, அதிகார பகிர்வு என்பது அதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளக் கூடும். அல்லது இலங்கை அரசு மறுக்கக் கூடும் இலங்கை அரசு 30 ஆண்டுகளுக்கு மேலாக 13ம் திருத்த சட்டத்தை கொண்டு வருவதற்று ஏற்பு நிலையில் இருந்தது இல்லை.அத்தகைய ஒரு சூழலி நாம் எதை ஆரோக்கியமான தீர்வு என்று பார்ப்பது.அல்லது அரசியல் தீர்வு என எதை பார்ப்பது என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.