தமிழர்களின் எல்லைக் கிராமங்களை சத்தமில்லாமல் பௌத்தமயமாக்க முயற்சி

May be an image of 3 people, people standing, outdoors and tree

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி, வண்ணாமடு, மணற்கேணி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதித் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் இது தொடர்பில் அப்பகுதி தமிழ் மக்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் 20.03.2023 இன்று குறித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

May be an image of outdoors

தமிழர்களின் பூர்வீக மணலாற்றின் கற்தூண்பகுதியை மகாப்பிட்டிய என்னும் பெயரிலும், வண்ணாமடு பகுதியை வண்ணாமடுவ என்னும் பெயரிலும், அக்கரைவெளி பகுதியை அக்கரவெலிய என்னும் பெயரிலும் பௌத்த பிரதேசமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், அதேபோல் மணற்கேணிப் பகுதியையும் அவ்வாறே பௌத்த பிரதேசமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அப்பகுதித் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு தமிழ்மக்கள் குறித்த பகுதிகளிலிருந்து இடம்பெயர்வதற்கு முன்பு கற்தூண்பகுதியில் வைரவர் ஆலயம் இருந்ததாகவும், அக்கரைவெளியில் முனியப்பர் ஆலயமொன்று இருந்ததாகவும், அவ்வாறு இருந்த கோவில்களை உடைத்தழித்து தற்போது அந்த இடங்களை பௌத்த பகுதிகளாக மாற்றுவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் மணற்கேணிப் பகுதியில் இருந்த சைவ வழிபாட்டு அடையாளங்கள் உடைக்கப்பட்டு அங்கும் பௌத்த மயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அப்பகுதித் தமிழ்மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை அக்கரைவெளியில் 1984ஆம் ஆண்டிற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கம் ஒன்று இருந்ததாகவும், மாட்டுப்பண்ணைகள், விவசாய நிலங்கள் என தமிழ் மக்கள் சிறப்பாக வாழ்ந்த இடங்களையே பௌத்தமக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருதாகவும் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது அக்கரைவெளிப் பகுதியில் கொக்கிளாய் பகுதியிலுள்ள தமிழ் மக்களும், கற்தூண் பகுதியில் கொக்குத்தொடுவாய் பகுதித் தமிழ் மக்களும், மணற்கேணி மற்றும், வண்ணாமடுப் பகுதிகளில் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணித் தமிழ் மக்களும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

May be an image of nature and tree

இந் நிலையில் அண்மைக்காலமாக அந்தப் பகுதிகளுக்கு பௌத்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் அதிகளவில் வந்து செல்வதாகவும், பௌத்த மயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழ்மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் கற்தூணடிப் பகுதிக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை அழைத்துச் சென்ற தமிழ் மக்கள் அங்கு முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளைக் காண்பித்தனர்.

குறித்த பகுதிகளிலிருந்து தம்மை அப்புறப்படுத்தவே இவ்வாறான பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுகாகப்படுவதாகவும் அப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

May be an image of nature and tree

அத்தோடு ஏற்கனவே தமிழர்களின் பூர்வீக மணலாற்றுப்பகுதியின் பிரதான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயாவாக மாற்றப்பட்டுள்ளதுடன், தமது நீர்ப்பாசனக்குளங்களும் அதன்கீழான வயல் நிலங்களும் அபகரிக்கப்பட்டதைப்போன்று, அவற்றை அண்டிய மானாவாரி விவசாய நிலங்களையும் ஆக்கிரமிப்பதற்கான அபாயம் இந்த பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் மூலம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.