அமெரிக்க உச்சி மாநாடு: நெருக்கடியான ஒரு நேரத்தில் வீணாக்கப்பட்ட அரிய வாய்ப்பு | தமிழில் ஜெயந்திரன்

அமெரிக்க உச்சி மாநாடுஜெயந்திரன்

அமெரிக்க உச்சி மாநாடு

“இது ஒரு தோல்வி. இது படுதோல்வி. இது ஒட்டுமொத்த ஏமாற்றம்.” அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டை அரசியல் ஆய்வாளர்களும், இலத்தீன் அமெரிக்க மற்றும் கரிபிய நாடுகளின் தலைவர்களும் இவ்வாறு தான் விமர்சிக்கிறார்கள்.

இவ்வாரம் இந்த உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன்னராகவே இந்த மாநாடு தொடர்பாக நடைபெற்ற உரையாடலின் பேசுபொருள் இந்த பிரதேசத்தின் தலைவர்கள் எதிர்கொள்கின்ற இடம்பெயர்தல் போன்ற முக்கியமான சவால்களை எந்தவிதத்திலும் உள்ளடக்கியிருக்கவில்லை.

இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் தான் கொண்டுள்ள உறவைச் சீர்ப்படுத்த தனக்குக் கிடைத்த இந்த ஒப்பற்ற வாய்ப்பைப் பயன்படுத்துவது தொடர்பாகக் கூட அங்கு எந்தவித உரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை. அதிபர் ட்ரம்பின் காலத்தில் நான்கு வருடங்களாக இவ்விடயம் முற்றிலும் கவனிக்கப்படாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.

‘நிக்காரகுவா, கியூபா, வெனிசுவேலா ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்களை மாநாட்டுக்கு அழைப்பதில்லை’ என்ற அதிபர் பைடனின் முடிவால், இந்த நாடுகளின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் முகத்துக்கு முகம் பார்த்து நேரடியாக உரையாடக் கிடைத்த அளப்பரிய வாய்ப்பு ஏற்கனவே பாதிக்கப்பட்டுவிட்டது.

முறையே இந்த நாடுகளின் தலைவர்களான டானியேல் ஓர்த்தேகா, மிகேல் டியாஸ் கேனெல், நிக்கொலஸ் மதுரோ ஆகியோருக்கு ஆதரவு வழங்குவது இங்கு முக்கியமான விடயம் அல்ல. வோஷிங்டன் இவர்களை எப்படிப் பார்க்கின்றதோ அது போலத் தான் இப்பிரதேசத்தில் உள்ள பல நாடுகள் இவர்களைச் சர்வாதிகாரி களாகவும் சனநாயகப் பண்பு அற்றவர்களாகவும் நோக்குகின்றன.

இவ்வாண்டு ஜூன் மாதம் 8ம் திகதி ஆரம்பமான இந்த அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டின் தொடக்க நிகழ்வில் அதிபர் பைடன் ஒரு உரையை ஆற்றினார்.

ஆனால் அதே வேளையில் உரிய சனநாயகப் பண்புகளை இந்த நாடுகள் கொண்டிருக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி, அமெரிக்க கண்டத்தின் பகுதிகளாக இருக்கின்ற இந்த மூன்று நாடுகளையும் ஒருதலைப்பட்சமாக வெளியிலே விடுவதன் மூலம் ஒபாமாவுக்கு முற்பட்ட காலத்துக்கு வோஷிங்டன் கடிகாரத்தை மீண்டும் திருப்பியிருக்கிறது.

“இது உண்மையில் இழைக்கப்பட்ட ஓர் பாரிய தவறு. இதை நிச்சயமாக உச்சி மாநாட்டில் நாங்கள் சுட்டிக்காட்டுவோம்” என்று சிலி நாட்டின் அதிபர் கபிரியேல் போரிச் லொஸ் ஏஞ்சலஸ் நகரை வந்தடைந்த போது தெரிவித்தார்.

“யாருமே தனித்தியங்குவதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. எமது அபிவிருத்தி முயற்சிகளை மேம்படுத்த நாம் ஒருவரோடொருவர் கரங்கோத்துச் செயற்பட வேண்டும். இவர்களை வெளியே விடுவது சரியான அணுகுமுறை அல்ல என்பதைத் தெரிவிக்கும் உரிமை எமக்கிருக்கிறது. வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது இவ்வாறான அணுகுமுறைகள் ஒருபோதுமே நன்மை பயக்கவில்லை. மேலும் ஐக்கிய அமெரிக்கா குறிப்பிட்ட நாடுகளை வெளியே விடும் போது, அந்த நாடுகளின் தலைவர்கள் தமது தவறான அணுகுமுறைகளை தமது நாடுகளில் தொடர்வதற்கே அது வழிவகுக்கின்றது.”

ஒரு பகிஷ்கரிப்பு

குறிப்பிட்ட மாநாட்டில் இந்த மூன்று நாடுகளையும் உள்ளடக்காவிட்டால் இந்த உச்சி மாநாட்டை தான் பகிஷ்கரிக்கப் போவதாக மெக்சிகோ அதிபர் அந்திரேஸ் மனுவேல் லோப்பேஸ் ஒப்பிராடோர் அமெரிக்க அதிபர் பைடனை எச்சரிக்கை செய்தார். இதனால் உருவாகக்கூடிய நெருக்கடியைத் தணிப்பதற்காக சனநாயக் கட்சியைச் சார்ந்த முன்னாள் செனட்டரான கிறிஸ்ரோபர் டொட் என்ற செனட்டரை வோஷிங்டன் அப்பிரதேசத்துக்கு அவசரஅவசரமாக அனுப்பிவைத்தது.

இருந்த போதிலும் மெக்சிகோ அதிபர் தான் ஏற்கனவே எச்சரித்தது போலவே மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரவில்லை. அவரைப் போலவே ஹொண்டூராஸ், குவாத்தமாலா, எல் சல்வதோர், பொலீவியா மற்றும் பல கரிபியன் நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த உச்சி மாநாட்டில் பங்குபற்றவில்லை.

அமெரிக்க பிரதேசத்திலேயே அமெரிக்காவின் செல்வாக்கு எவ்வளவு சரிவைச் சந்தித்திருக்கிறது என்பதை இவ்வாறான அலட்சியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

“மாநாட்டுக்கு கியூபாவை அழைப்பதில்லை என்ற முடிவு மாநாட்டைப் பத்து வருடங்களுக்குப் பின்தள்ளிவிட்டது” என்று மெக்சிகோ அதிபரின் சார்பில் பங்குபற்றுகின்ற அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரான மார்செல்லோ எப்ரா குறிப்பிட்டார். “நாடுகளை உள்வாங்காது அவற்றை ஒதுக்கிவைப்பது என்பது மிகப் பாரதூரமான தவறு” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இலத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய சனநாய நாடான பிரேசிலின் அதிபரும் முன்னாள் அதிபர் ட்ரம்பின் நெருங்கிய சகாவுமான ஜெயார் பொல்சொநாரோவுடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.

பிரேசிலிய அதிபருடன் இருதரப்பு உறவு ரீதியில் பேசுவதற்கு பைடன் உடன்பட்டிருந்தார். ஆனால் ‘அமெசோன் காடுகள் மற்றும் அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம், தேர்தல் நீதிமன்றம் போன்றவற்றின் மீதான பொல்சொநாரோவின் தாக்குதல் தொடர்பில் மாநாட்டில் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும்’ என்ற வேண்டுகோளை பைடன் ஏற்றுக்கொள்ளவில்லை என வெள்ளை மாளிகையிலிருந்து வரும் செய்திகள் மூலம் அறியக்கிடக்கிறது.

2020ம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளை பைடன் களவாடவில்லை என்பதை தன்னால் இன்னுமே நம்ப முடியவில்லை என்று கூறி, லொஸ் ஏஞ்சலசுக்கான தனது பயணத்தை ஆரம்பிக்க முதல் பொல்சொநாரோ தனது பதிலடியை வழங்கினார். இவ்வாறான கோபமூட்டும் வார்த்தைகள் அமெரிக்காவில் பெரிய பொருண்மியத்தைக் கொண்டிருக்கின்ற இரண்டு நாடுகளுக்கிடையேயான உரையாடலை எவ்விதத்திலும் ஊக்குவிக்கப்போவதில்லை.

“அது உண்மையில் ஒரு தவறு. மாநாட்டின் கவனத்துக்கு அதை நாம் கொண்டு வருவோம்” என்று சிலி நாட்டின் அதிபரான கபிரியேல் கருத்துத் தெரிவித்தார்.

முன்னுரிமைகள் எவை?

உச்சி மாநாட்டில் பின்வரும் கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது. வெனிசுவேலா நாட்டில் இருந்து 6 மில்லியன்கள் மக்கள் வெளியேறியிருக்கும் சூழ்நிலையில் மாநாட்டில் அந்த நாட்டின் பங்களிப்பு இல்லாமல் முன்னெப்போதும் இல்லாதவாறு அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கின்ற அகதிகள் பிரச்சினையை பைடனால் எவ்வாறு கையாள முடியும்?

அதுபோலவே கியூபா, நிக்காராகுவா போன்ற நாடுகளிலிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் அமெரிக்காவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பட்சத்தில் இந்த இரண்டு நாடுகளும் இந்த உச்சி மாநாட்டில் பங்குபற்றவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும்.

அமெரிக்கா எந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. பல தசாப்தங்களாக இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா முன்னுரிமை கொடுத்திருக்கவில்லை.

பெரூ நாட்டின் முன்னாள் அதிபரான பேட்றோ பாப்ளோ குஸின்ஸ்கி ஒரு தடவை தான் ட்ரம்புடன் மேற்கொண்ட உரையாடல் பற்றிக் குறிப்பிட்டார். “இலத்தீன் அமெரிக்கா எப்போதுமே தூங்கிக்கொண்டிருக்கின்ற ஒரு நல்ல நாய். அதனை எழுப்ப வேண்டிய எந்த அவசியமும் இல்லை” என்று ட்ரம்ப் தன்னிடன் கூறியதாக பேட்றோ குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் மூலோபாய ஈடுபாடுகள் தொடர்பாக நோக்கும் போது, அவ்வாறான பார்வை குறுகியது என்பதற்கு அப்பால், எதிர்விளைவுகளைத் தோற்றுவிக்க வல்லது என்பது கவனிக்கத்தக்கது.

தென் அமெரிக்காவின் பாரிய பொருண்மியங்களைக் கொண்டவையும் அதே வேளையில் உலகில் அதிகளவில் செம்பு, லிதியம், போன்ற தாதுப்பொருட்களையும் சோயா, சோளம் போன்ற தானியங்களையும் உற்பத்தி செய்கின்ற பிரேசில், ஆர்ஜெந்தீனா, சிலி, பெரூ போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் முதன்மை நாடாக சீனா தற்போது திகழ்கிறது.

மத்திய அமெரிக்கப் பிரதேசத்தில் சீனாவின் செல்வாக்கு கணிசமான அளவு அதிகரித்துக் கொண்டிருக்கும் அதே வேளை, இப்பிரதேசத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு வரலாற்றில் என்றுமில்லாத அளவு வீழ்ச்சியடைந்திருப்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது. முன்னொரு காலத்தில் அமெரிக்காவின் கோடிப்புறத்தில் உள்ள இந்த நாடுகளில் அமெரிக்காவின் தலைமைத்துவம் அசைக்க முடியாததாக இருந்தது என்பது நினைவிற் கொள்ளப்படவேண்டும்.

1994ம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறுகின்ற அமெரிக்க பிரதேசத்தின் உச்சி மாநாடு முன்னர் அப்பிரதேசத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. “சமத்துவம் மிக்க பங்காளர்கள் என்ற வகையில் எமது உறவுகளைப் பொறுத்த வரையில் முற்றிலும் புதிய ஒரு அத்தியாயத்தை உங்களுக்கு நான் வாக்களிக்கின்றேன்” என்று அதிபராகப் பதவியேற்ற ஒரு சில நாட்களில் அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா, 2009ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் நடைபெற்ற 5வது உச்சி மாநாட்டில் தனது சகாக்களுக்குக் கூறினார்.

கியூபா அக்காலப் பகுதியில் விலக்கப்பட்ட ஒரு நாடாகவே இருந்தது. ஆனால் ஒபாமா அதிபராகப் பங்குபற்றிய கடைசி உச்சி மாநாட்டில் கியூபா அதிபரான ராவுல் காஸ்ட்ரோவுடன் ஒரு மேசையில் ஒபாமா அமர்ந்திருந்தது குறிப்பிட்டுக்கூறப்பட வேண்டிய விடயமாகும்.

“இந்த மாநாடு நடைபெறுகின்ற நேரம் துரதிஷ்டமானது” என்று இவ்வாண்டு நடைபெறும் மாநாடு தொடர்பாக சிலியின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ஹெரால்டோ மூனோஸ் கருத்துத் தெரிவித்தார். “இது அமெரிக்க இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்ற காலம். புளோரிடா, நியூ ஜேர்சி போன்ற மாநிலங்களில் உள்ள பழமைவாதிகளின் அழுத்தங்களே மாநாட்டில் யார் பங்குபற்றவேண்டும் யார் பங்குபற்றக்கூடாது என்பதைத் தீர்மானிக்கின்றது.”

உண்மையில் பைடனும் அப்பிரதேசத்தைச் சார்ந்த ஏனைய தலைவர்களும் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நிக்காரகுவா, கியூபா, வெனிசுவேலா போன்ற நாடுகள் மனித உரிமைகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பாகப் பொறுப்புக்கூறக்கூடிய ஒரு சூழலை உருவாக்கயிருக்கலாம். அது மட்டுமன்றி அந்த நாடுகள் தமக்கிடையேயான பொதுவான இலக்குகள் நோக்கியும் முன்னகர்ந்திருக்கலாம்.

கடைசியாகப் பார்க்கும் போது, ஒரு மிக முக்கியமான நேரத்தில் முற்றாக வீணாக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவே அமெரிக்கக் கண்டத்தின் ஒன்பதாவது உச்சி மாநாடு எதிர்காலத்தில் நினைவுகூரப்படப்போகிறது.

நன்றி: அல்ஜசீரா

Tamil News