Tamil News
Home செய்திகள் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்

தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. 

அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று இடம்பெற்றது. அந்தப் பகுதியில் குடியிருக்கும் பெண்கள், குழந்தைகள் உட்படப் பெருமளவானோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

“மக்களுக்கு மனநோய் வேண்டாம்”, “மின்காந்த அலை, காற்றுக்கு நஞ்சு”, “மக்களை உடல், உள ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள்”, “எங்கோ போகும் இடி மின்னலை எம்மை நோக்கி இழுக்க வேண்டாம்”, “நகர்த்து நகர்த்து தொடர்பாடல் கோபுரத்தை நகர்த்து” போன்ற சுலோகங்கள்  அடங்கிய பாதாதைகளைத் தாங்கியும், கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்துத் தகவலறிந்த  காவல்துறையினர் அந்தப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Exit mobile version