Home செய்திகள் மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்

மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்

IMG 0297 1 மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்

மட்டக்களப்பு ஏறாவூர்  காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி காணி மாபியாக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

இன்று பிற்பகல் முதல் மட்டக்களப்பு நகரின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியருகே இந்த உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். காணி மாபியாக்களுக்கு சாதகமாக சட்டத்தினை காய்நகர்த்தும் ஏறாவூர் காவல்துறை அதிகாரி,காணி மாபியாக்களின் கைக்கூலி ஏறாவூர் காவல்துறை நிலைய அதிகாரி,ஏறாவூர் காவல்துறை நிலைய அதிகாரி மீது விசாரணை நடாத்துங்கள் போன்ற சுலோகங்களை தாங்கியவாறு இந்த உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

ஏறாவூர்,புன்னக்குடா தளவாய் பகுதியில் அமைந்துள்ள காணி மாபியாக்களின் நடவடிக்கைகளுக்கு ஏறாவூர் காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி மிகவும் துணை புரிந்துகொண்டிருக்கின்றார். அவரது ஆசீர்வாதத்தில் சில செயற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

என்னுடைய சொந்தக்காணி 21ஆம் திகதி காவல்துறை பொறுப்பதிகாரியினுடைய வழிநடத்தலில் பலாத்காரமாகப் பறிக்கப்பட்டது. இதுதொடர்பில் நான் அவரிடம் பலமுறை கெஞ்சியும் அவர் அதனை மறுதலித்து காணிமாபியாக்களுக்கு ஆதரவாக செயற்பட்டுவந்திருக்கின்றார். இதற்கு எதிராக நான் நீதி கேட்டு வந்திருக்கின்றேன். முற்றுமுழுதாக என்னுடைய பிரச்சினைகள் விசாரிக்கப்பட வேண்டும்.

பலவந்தமாக அந்தக் காணியினுள் காணி மாபியாக்களின் ஆட்களை குடியமர்த்திவிட்டு இன்று காணிப்பிரச்சினையாக இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள் என்கின்றார்.

நாங்கள் நீதிமன்றம் செல்லத் தயாராக இருக்கின்றோம். ஆனால் ஏறாவூர் காவல்துறை பொறுப்பதிகாரியின் துணையுடன் பலவந்தமாக அங்கு குடியமர்த்தப்பட்ட குடும்பத்தையும் வேலியையும் அகற்ற வேண்டும். அதன் பின்னர் நாங்கள் நீதிமன்றம் செல்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

மூன்று தினங்களுக்கு முன்பு எனது தோட்டத்தை பராமரித்துவந்த நபர் காணி மாபியாக்களினால் வாளாலும் பொல்லாலும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏறாவூர் காவல்துறை நீதிமன்றுக்கு தவறான தகவலை வழங்கி எதிரியை உடனடியாக விடுதலைசெய்ய உதவியதுடன் மூன்று முக்கியமான எதிரிகளை கைதுசெய்யவில்லை.அவர்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எங்கள் காணிக்குள் இன்னும் கத்தி,பொல்லுகளுடன்தான் உள்ளனர்.

இவர்களை ஏறாவூர் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி கண்டுகொள்ளவில்லை.
சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தலைமையில் அங்குள்ள கிராம மக்கள்,மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்,நிலஅளவையாளர்கள் உட்பட பலரை அழைத்து விசாரணைசெய்து நியாயமான தீர்வை வழங்கவேண்டும். அதனை வலியுறுத்தி சாகும் வரையிலான இந்த உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளேன் என்றார்.

Exit mobile version