Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு.. | Support Tamils | Apr18
Home நேர்காணல்கள் பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் | கொளத்தூர் மணி

பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் | கொளத்தூர் மணி

கொளத்தூர் மணி

பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, தொடர் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதேவேளை தமிழக முதலமைச்சரும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவ முன்வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழர்கள் அகதிகளாக மீண்டும் தமிழகத்திற்கு வருகை தரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 9ம் திகதி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ’ஈழத் தமிழர்க்கு விடியல் – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு’ நடைபெற்றது. இவை பற்றி திராவிடர் விடுதலைக் கழக தலைவரும், ஈழ ஆதரவாளருமான கொளத்தூர் மணி அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி.

கேள்வி:
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் தமிழக மக்கள், அரசியல் கட்சிகளின் மனநிலை எவ்வாறு உள்ளது?

பதில்:
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக எழுந்துள்ள போராட்டம் மார்ச் 15-ஆம் திகதி குடியரசுத் தலைவர் அதாவது அதிபர் மாளிகையை சூழ்ந்துகொண்டு மக்கள் எடுத்த போராட்டம், எல்லாம் மிக விரைவாக மிக எழுச்சியாக நடந்து கொண்டு இருக்கின்றன.  ஆனால் இதற்கான காரணங்களை நாம் எண்ணிப் பார்க்கிற போது, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஒரு வகையில் பலர் மகிழ்ச்சி கொள்கிற நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட, இலங்கையில் ஏற்பட்டிருக்கிற அந்த பொருளாதார நெருக்கடி என்பது, ஈழத் தமிழ் மக்களையும், மலையகத் தமிழ் மக்களையும் பாதிக்கத்தான் செய்யும்.

அண்மையில் இரண்டு குடும்பங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்து இருப்பதும் கூட இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.  ஒருவேளை பெரிய பாதிப்பு இருந்தாலும் கூட, இங்கு வருவதற்காக படகு சேவைக்கு அளிக்க வேண்டிய பெரும் தொகை அதற்கான எரிபொருளுக்கு இப்போதுள்ள தட்டுப்பாட்டில் செலவழிக்க வேண்டிய மிகப்பெரிய தொகை எல்லாமும் சேர்ந்து பொருளாதார நெருக்கடியில் உள்ள தமிழ் மக்களால் கொடுக்க முடியாததால் வருகை குறைவாக இருக்கலாமே தவிர, இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது.

அப்படி வந்த சில ஈழத் தமிழ் ஏதிலிகளை தமிழ்நாடு அரசு புழல் சிறையில் அடைத்திருப்பது என்பது எல்லோருக்கும் பெரிய வேதனையை கொடுக்கிற செய்தியாக தான் பார்க்கிறோம். ஒருவேளை ஒன்றிய அரசினுடைய அழுத்தம் இருந்திருந்தாலும் கூட, அதை வேறு வகையில் செய்திருக்க முடியும் என்றே நாங்கள் கருதுகிறோம்.  அவர்களை சிறையில் அடைத்து வழக்கு போட வேண்டிய தேவை இல்லை. போர் காரணமாக புலம்பெயர்ந்து வாருகின்ற மக்களைப் போலவே பொருளாதார நெருக்கடி காரணமாகவும் புலம் பெயர்தல் என்பது இயல்பாக நடக்கும் ஒன்று தான். இந்த நேரத்தில் அதை ஒன்று பார்க்க வேண்டும்.

இன்னொன்று நாம் கருதுவது, இது இலங்கையின் தென்பகுதியில் சிங்களப் பகுதியில் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அங்கிருக்கிற சிங்கள மக்களை கூட தமிழீழ நியாயத்தை இப்போது பேசத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதையும் இன்னொரு நல்ல முன்னேற்றமாக பார்க்கிறோம். இந்த வேளையில் தென்னிலங்கையில் மட்டும் நடக்கிற அந்தப் போராட்டத்திற்கு தமிழ் மக்களும் ஆதரவு அளிப்பதின் மூலம் ஒரு சிங்கள உழைக்கும் மக்களுக்கும், தமிழ் உழைக்கும் மக்களுக்கான ஒரு நல்லுறவு ஏற்பட கூட வாய்ப்பிருக்கிறது.  மகாவம்ச மனோபாவத்தை வளர்த்து எடுத்திருக்கிற சிங்கள அரசியல்வாதிகள், அவர்களை கண்ணை மூடிக்கொண்டு தமிழர்களை எதிர்க்க செய்திருக்கிற அந்தப் போக்கில் மாற்றம் ஏற்படுவதற்கு தமிழ் மக்களும் கூட இதில் ஒன்றிணைப்பது வசதியாக இருக்கும் என்று கருதுகிறோம்.

இன்னொரு பக்கம் உதவிகள். இந்தியாவில் இருந்து உதவிகள் வழங்கப்படுகின்றன. மூழ்கிக் கொண்டிருக்கிற கப்பலுக்கு ஒரு தனி மனிதன் கையை கொடுத்து காப்பாற்ற நினைப்பது போல தான், இலங்கை சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிற பெரும் கடன் சுமையில், ஒன்று போரில் செலவழிக்கப்பட்ட ஏராளமான தொகை. கணக்கு வழக்கில்லாமல் செலவழிக்கப்பட்ட தொகை. அதில் நடந்திருக்கிற ஊழல்கள். இன்னொன்று சுற்றுலாப் பயணிகள் வருகை சுத்தமாக நின்று போனது. மற்றொன்று நோய் தொற்று என்று பல காரணங்களோடு ராஜபக்ச குடும்பம் இழைத்திருக்கிற பெரும் ஊழலும் கூட இந்த நிதியை பெருமளவில் நாசம் செய்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் போரில் செலவு செய்யப்பட்ட தொகை என்பது, மீண்டும் இலங்கை எழுந்து வந்தாலும் கூட படைத்துறைக்கு இராணுவத்திற்கு செய்ய வேண்டிய செலவு பெரிய அளவில் இருக்கும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கு, ஜனநாயகத் தீர்வு காண்பதற்குப் பதிலாக ராணுவத் தீர்வை காணத் துடித்ததுதான் இந்த பெருஞ்செலவுக்கு ஒரு காரணம் என்பதை எண்ணிக் கொண்டு, இந்த வேளையில் சிங்கள மக்கள் ஒரு அரசியல் தீர்வு தமிழர்களுக்கு வரவேண்டும் என்ற குரலை ஒலிக்கும் வண்ணம் தமிழ் மக்கள் ஒரு நல்ல அரசியல் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்த நேரத்தில் கட்டாயமாக நாங்கள் பார்க்கிறோம்.

கேள்வி:
இந்த மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற இனவழிப்புக்கு சர்வதேச  போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அது தொடர்பில் உங்கள் கருத்து ?

பதில்: 
இப்போது நடந்து முடிந்திருக்கின்ற அந்த ‘ஈழத் தமிழர்க்கு விடியல் – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு’ என்பதில் இரண்டு வகையான தீர்மானங்கள் இயற்றப் பட்டிருக்கின்றன. ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு என்பதன் வழியாகத்தான் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகிய தோழர் கோவை. கு ராமகிருஷ்ணன் அவருடைய தலைமையில் தான் அந்த மாநாடு நடந்தது.  அந்த மாநாட்டில் இரண்டு வகையான தீர்மானங்களை முன்னெடுத்தோம்.

ஒன்று நடந்து முடிந்திருக்கிற போரினால் ஏற்பட்டிருக்கிற இனப்படுகொலை உள்ளிட்ட இன அழிப்பு வேலைகள், மாந்தர் குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் செய்த இந்த ராஜபக்ச குடும்பத்தையும், அரசியல் தலைவர்களையும், இராணுவத் தலைவர்களையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்த வேண்டும்.  அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் 2002 ஆம் ஆண்டு ஜூலை முதல் நாளுக்கு முன்னர் இலங்கை புரிந்த குற்றங்களை உள்ளடக்கக் கூடியதான  அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். ஏனென்றால், 2002 க்குப் பின்னால் நடந்ததை மட்டும் தான் அவர்களால் விசாரிக்க முடியும்.  ருவாண்டா போன்ற நாடுகளுக்கு அமைக்கப்பட்டது போல ஒரு சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பது ஒன்று.

இன்னொன்று தமிழ் மக்களுடைய அரசியல் வேணவாவைத் தீர்ப்பதற்கு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையும் நாம் சொல்லி இருக்கிறோம்.  மேலும் அங்கு ஏற்பட்ட காணாமலாக்கப்பட்டோர் பற்றிய செய்திகளைப் பற்றியும், உடனடித் தீர்வாக வடக்கில் நிறுத்தப்பட்டிருக்கிறது பெரும் படைகள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.   வலிந்து காணாமலாக்கப்பட்டோர் அதாவது போரின் முடிவில் சிங்களப் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் உட்பட 19 ஆயிரம் பேரைப் பற்றிய ஒரு பொறுப்புக்கூறல் இதுவரை முறையாக செய்யப்படவில்லை என்பதால், பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு ஒன்று  ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் போர்க் கைதிகள் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் போன்ற, இப்போது தேவையாக இருக்கின்ற பலவற்றை நாம் எடுத்துரைத்திருக்கிறோம்.

இதில் இந்திய அரசுக்கு அது தன்னுடைய பன்னாட்டு அவைகளில் ஐ.நா.உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் தேவையேற்படும் போது தமிழ் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதும், வாக்கெடுப்பு வருகின்ற போது தமிழ் மக்களுடைய கோரிக்கை களுக்காக உடன்பட்டு வாக்களிப்பதும் தேவை என்பதையும், அதை தமிழ்நாடு அரசு தன்னாலான வகையில் வலியுறுத்த வேண்டும் என்பதையும் நாம் அந்த வேளையில் நாம் சொல்லியிருக்கிறோம்.

1 COMMENT

  1. […] பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, தொடர் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுமேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-178-april-17/  […]

Leave a Reply

Exit mobile version