Tamil News
Home செய்திகள் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை-

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை-

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீஸியா ஸ்கொட்லன்டிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பையேற்று 75ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீஸியா ஸ்கொட்லன்டுக்கும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை (4) கொழும்பில்  நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதுடன் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 6 மாத காலத்தில் நீதியமைச்சினால் புதிதாக 24 சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், அச்சட்டங்களின் ஊடாக இந்நாட்டு மக்களுக்கு பெருமளவான நன்மைகள் கிட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த பற்றீஸியா ஸ்கொட்லன்ட், பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடு என்ற ரீதியில் இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்பை பெரிதும் பாராட்டுவதாக குறிப்பிட்டதுடன், இலங்கைக்குள் நீதிக்கான அணுகலை வலுப்படுத்துவதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் தாம் வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தமானது 19ஆவது திருத்தத்துக்கும் அப்பால் பல்வேறு ஜனநாயகக் கூறுகளை உள்ளடக்கியிருப்பதாக தெரிவித்தார்.

அதேவேளை அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை குறைப்பதற்கு ஏற்றவாறான ஊழல் மோசடிகளுக்கு எதிரான சட்டமொன்றை கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய செயற்றிறன் மிக்க நீதிமன்ற கட்டமைப்பை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு நீதிமன்றங்களை டிஜிட்டல்மயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version