தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கவிட்டால் இந்த நாடு அழிவுப்பாதைக்கே செல்லும்-கோவிந்தன் கருணாகரம்

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு

“தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை இந்த நாட்டின் அரசாங்கங்கள் முன்வைக்கவிட்டால் இந்த நாடு மீண்டும் மீண்டும் அழிவுப் பாதைக்கே செல்லும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

காரைதீவில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

ஈழப் போராட்டத்திற்கு இந்தக் காரைதீவு மண் பல தியாகங்களைச் செய்திருக்கின்றது. எத்தனையோ போராளிகளைத் தந்திருக்கின்றது. அந்த வகையிலே இந்த ஈழப் போராட்டம் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னமே தோற்றம் பெற்றது. நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் எமது உரிமைகள் பறிக்கப்பட்டதோடு 1956ம் அண்டு தனிச் சிங்கள  சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் உரிமைக்காகப் போராடுகின்றோம்.

இன்று காலி முகத்திடலிலே பெரும்பாலான சிங்கள இளைஞர் யுவதிகள் தங்களது அன்றாட, அத்தியாவசியத் தேவைகளுக்காக இந்த ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று போராடுகின்றார்கள். ஆனால் நாங்கள் எமது உரிமைகளுக்காகப் போராடி வந்தவர்கள்.

ராஜபக்ச சகோதரர்கள் தாங்களாகவே இந்த ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. சர்வதேசத்தின் உதவியை நாடினார்கள். குறிப்பாக இந்தியாவின் உதவியை நாடினார்கள். இந்திய, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்த நாட்டிலே தனிஈழம் அமைவது வேண்டத்தகாத காரணத்தினால் ராஜபக்ச சகோதரர்களுக்கு உதவி செய்தார்கள்.

அந்நேரம் அவர்கள் சர்வதேசத்திற்கு ஒரு உத்தரவாதத்தைக் கொடுத்தார்கள் 1987ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமை என்ற 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாகச் சென்று அதிகாரப் பரவலாக்கலைக் கொடுப்போம் என்ற உத்தரவாதம் கொடுத்து இந்த ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.

தென்னிலங்கை சிங்கள மக்கள் இந்த ராஜபக்ச சகோதரர்களை இராஜாக்களாகப் பார்த்தார்கள். ஆனால், இன்று அவர்களுக்கு எதிராக இருக்கின்றார்கள். 2019ம் ஆண்டு 69 இலட்சம் சிங்கள மக்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்த நாயகன் போல கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினார்கள். அவர் கூட தனிச் சிங்கள வாக்குகளால் நான் ஜனாதிபதியாக வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

ஆனால் இன்று அதே சிங்கள மக்கள் எந்தவொரு அரசியல்வாதியையும் இகழாத அளவிற்கு ராஜபக்ச சகோதராகளை வீட்டுக்குச் செல்லுமாறு போராட்டம் நடத்துகின்றார்கள். கோட்டா கோ ஹோம், கள்ளன், பசில் காகம் என்றெல்லாம் ஏசுகின்றார்கள். அந்தளவிற்கு சிங்களவர்கள் போற்றிய தலைவர்கள் இன்று சிங்களவர்களாலேயே தூசிக்கப்படுகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது.

இவையெல்லாம் 140000 பேருக்கு மேற்பட்ட தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொன்றொழித்த பாவம் மட்டுமல்லாது எத்தனையோ அப்பாவி சிங்கள, முஸ்லீம் மக்களைக் கொன்று குவித்த பாவம் இன்று அவர்களை நின்று ஆட்டுகின்றது. இன்று ஆட்சியை மாற்ற வேண்டும் என்று கூறுகின்றீர்கள், ராஜபக்ச சகோதரர்கள் விட்டுக்குப் போக வேண்டும் என்ற கூறுகின்றீர்கள் ஆனால் அதன் பின்னர் வரக் கூடிய தலைவர் யார் என்பதை போராட்டக் களத்தில் நிற்பவர்கள் கூறவில்லை.

இன்று இந்தப் போராட்டங்கள் ஏற்பட்டதற்கான காரணம், இலங்கையின் பொருளாதார நிலை அதளபாதாளத்திற்குச் சென்றிருக்கின்றது. இந்த நிலைமைக்குச் செல்வதற்கு என்ன அடிப்படைக் காரணம் என்பதை இன்னும் புரியாமல் இருக்;கின்றார்கள். இந்த நாட்டில் போருக்காக எத்னை பில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 57ம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது அந்த ஒப்பந்தம் அமுலாக்கப்பட்டிருந்தால் இந்த நாட்டிலே போர் மூண்டிருக்காது, போருக்காக இத்தனை மில்லியன்களைச் செலவழித்திருக்க மாட்டீர்கள்.

இன்று கூட தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான நிரந்தரமான அரசியற் தீர்வை முன்வைக்காமல் வெறுமனே ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடாத்துகின்றீர்கள். ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்து போக வேண்டும், இந்த அரசாங்கம் போக வேண்டும் என்று கூறுகின்றீர்களே தவிர இன்னமொருமுறை போராட்டம் வெடிக்கக் கூடாது என்பதற்கான ஒரு அரசியற் தீர்வு கோhரிக்கையை முன்வைக்கவில்லை.

இன்று இந்தியா இல்லாது விட்டால் தமிழ் மக்கள் மாத்திரமல்ல இந்த ஒட்டுமொத்த நாடே மிகவும் மோசமான வறுமை நிலைக்குச் சென்றிருக்கும். இன்று இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் உதவி செய்கின்றது. ஆனால் சிலர் கூறுகின்றார்கள் ராஜபக்ச சகோதரர்களைக் காப்பாற்றுவதற்காக இந்தியா உதவி செய்கின்து என்று. நான் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தமிழ் மக்களைக் கொன்றுகுவித்த ராஜபக்ச சகோதர்களை நீங்கள் காப்பாற்றுகின்றீர்களா என்று கேட்டதற்கு அவர்கள் என்னிடம் சொன்னார்கள் நாங்கள் எரிபொருள், அரிசி கொடுப்பது ராஜபக்ச சகோதரர்களுக்கு அல்ல எமது பக்கத்து தேசம் பட்டினியால் வாடக் கூடாது என்பதற்காக அந்த மக்களுக்காகவே உதவி செய்கின்றோம் என்று தெரிவித்தார்கள்.

தமிழ் மக்களுக்காகன ஒரு நியாயமான, நிரந்தரமான ஒரு அரசியற் தீர்வை இந்த நாட்டின் அரசாங்கங்கள் முன்வைக்கவிட்டால் இந்த நாடு மீண்டும் மீண்டும் அழிவுப்பாதைக்குச் செல்லும் என்பதோடு எங்கள் மத்தியிலும் ஒற்றுமை முக்கியம் என்பதையும் கூறிக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

Tamil News