தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதத்தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைகளை  முன்வைபப்தற்கு அனைத்து  தமிழ் பாராளுமன்றப் உறுப்பினர்களும் கட்சி தலைவர்களும்  ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்க வாருங்கள் என மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளார்கள்.

நல்லை ஆதீனத்தில் நேற்று 13 ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே சமயத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தினர்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும்  தமிழ் கட்சி தலைமைகளும் விரைவாக  ஒன்று கூடி இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள  அரசியல்  பொருளாதார சூழலில் எடுக்கவேண்டிய தீர்மானம் என்ன என்பதை சீராகத் தீர்மானிப்பதற்கு முன் வரவேண்டும்.

வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என்ற பேதமின்றி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் , கட்சித் தலைவர்கள்  வேறுபாடுகளைக் கடந்து மக்களுக்காக ஒன்று கூடவேண்டிய தருணம் இது. எனவே அறிவு பூர்வமாக தீர்க்க தரிசனத்தோடு ஒன்றுகூடி ஆராயுங்கள்.இது காலத்தின் கட்டாயம்.

இவ்வேளை நீங்கள் ஒன்றுகூடி ஆராய மறுப்பீர்கள் ஆனால் அது மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.இன்று கொழும்பில் இடம்பெற்றுவரும் போராட்டத்தை போல் இங்கும் நடைபெறமாட்டாது அல்ல எனவே கடமையை ஒன்றிணைந்து நிறைவேற்ற ஒன்றிணையுங்கள்.

பொருளாதார பிரச்சினை அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளபோதும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ கட்சிகளாகவோ நீங்கள் ஒன்றுபட்டு என்ன நடக்கிறது என்பதை

மக்களுக்கு தெளிவுபடுத் தவில்லை அது மட்டுமன்றி பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுகு உதவி செய்வதற்கு ஆக்கபூர்வமான கோரிக்கைகளோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாகவே உள்ளது இதுவே உண்மையாகவும் உள்ளது எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் கட்சி தலைமைகளும்  ஒன்றிணைந்து செயற்பட முன்வாருங்கள் இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொள்ள தாயாராக இருக்கின்றோம் என்றார்கள்

குறித்த  ஊடக சந்திப்பில் நல்லை ஆதீன முதல்வர்  சோமசுந்தர பரமாச்சாரிய  சுவாமிகள், யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை  தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், ரிஷி தொண்டுநாத சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.