மழையில் தத்தளிக்கும் மலையகம்

இலங்கையில் கடந்த ஒரு வாரகாலமாக  பெய்துவரும் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.ஏழு மாவட்டங்களில் 2911 குடும்பங்களைச்சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்டோர்  சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் மலையக மக்கள் ஒருபடி அதிகமாகவே துன்பதுயரங்களை சந்தித்து வருகின்றனர்.உயிர் மற்றும் உடைமைச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்னும் மழையின் உக்கிரம் தணிந்ததாக இல்லை.

இந்த கனமழை காரணமாக  ஏழுபேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாவலப்பிட்டிய கெட்டபூலா பகுதியில் தோட்டத் தொழிலுக்காக சென்று திரும்பியதொழிலாளர்கள்   ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் மிகுதியால் அடித்துச் செல்லப்பட்டதோடு அவர்களின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறாக ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இரண்டு ஆண்களும் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை கண்டி, நுவரெலியா, மாத்தளை,பதுளை போன்ற மலையக மாவட்டங்களில் அநேகமானோர் அகதிகளாகியுள்ளனர்.

இதனடிப்படையில் கண்டி மாவட்டத்தில் 837 குடும்பங்களைச் சேர்ந்த 3809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு வெள்ளத்தில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்.19 வீடுகள் இம்மாவட்டத்தில் முற்றாக சேதமடைந்துள்ளதோடு 323 குடும்பங்களைச் சேர்ந்த 1595 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 1225 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதோடு மூவர் காணாமல் போயுள்ளனர்.இம்மாவட்டத்தில் 41 வீடுகள் சேதடைந்துள்ள நிலையில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பதுளை, இரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட்டங்களிலும் இழப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் நோட்டன் பிரிட்ஜ் பகுதியின்பல இடங்களில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். 8 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர்  பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டள்ளனர்.

இதேவேளை கனமழையின் காரணமாக மேலும் பல இடங்களில் மண்சரிவுகள் இடம்பெறலாமென்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. குறிப்பாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை,காலி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலையகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கத்தின் மட்டங்கள் வேமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அணைக்கட்டுக்கு அருகிலும் தாழ்நிலப்பகுதி கரையோரங்களிலும் வசிப்பவர்களை  மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அரசுதரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  சென்கிளேயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதேவேளை மலையகத்தின் பல இடங்களில் பிரதான மற்றும் உட்புற வீதிகளில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

சீரற்ற காலநிலையால் மலையகத்தில் கடுமையான குளிர் காலநிலை நிலவுகின்றது.அத்தோடு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் பாடசாலைகளுக்கும் இவ்வாரத்தில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில இடங்களில் மாணவர்களுக்கு இணையவழியில் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு அடிக்கடி நிகழும் மின்தடை காரணமாக தொழிற்றளங்களில் தொழில் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.இதனால் பணியாளர்கள் மிகுந்த அதிருப்தியுடன் இருந்து வருகின்றனர்.மேலும் கனமழையால் பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் இதுவும் தொழிற்றளங்கள் ஸ்தம்பிதமடைவதற்கு  காரணமாக உள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அத்தோடு நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  கட்சியும் உதவிகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில்  ஏனைய தொழிற்சங்கங்களும் மலையக அரசியல்வாதிகளும் இதனை முன்மாதிரியாகக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் பெற்றுக் கொடுக்க முனைதல் வேண்டும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.