தமிழா் மீது தொடுக்கப்பட்டுள்ள ஆபத்தான மறைமுக யுத்தம்-அகிலன்

கீரிமலை சிவன் ஆலயம் உடைக்கப்பட்டு, இலங்கை ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதா? - BBC News தமிழ்

வடக்கு – கிழக்கு மீண்டும் போராட்ட களமாகியிருக்கின்றது.  தமிழ் மக்களுக்கு எதிராக மறைமுகமான யுத்தத்தை அரசாங்கத்தின் இயந்திரங்கள் தீவிரப்படுத்தியிருக்கின்றன. நன்கு கட்டமைக்கப்பட்ட இன அடையாளங்களை அழிப்பதற்கான ஒரு போா் அனைத்துத் தரப்புக்களிலிருந்தும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் மீண்டும் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றாா்கள்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதாகக் கருதப்படும் நிலையில், நாட்டில் மீண்டும் இனவாதம் மற்றொரு வடிவத்தில் தீவிரமடைந்துவருகிறது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயகம் என்ற கோட்பாட்டை வலுவிழக்கச் செய்வதை இலக்காகக்கொண்டு திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களுடைய அடையாளங்களை இல்லாமல் செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீா்வைக்காண்பதுதான் தமது இலக்கு எனக் கூறிக்கொண்டாலும் கூட,  மறுபுறத்தில் அரசாங்கத்தின் கட்டமைப்புக்கள் இனக்குரோதத்துடனேயே செயற்படுகின்றன. தமிழ் மக்களுடைய பாரம்பரிய வாழ்விடங்களை ஆக்கிரமித்து – தமிழ் மக்களுடைய வரலாற்றை முற்றாகத் துடைத்தெறிவதை நோக்கமாகக்கொண்டே இந்த செயற்பாடுகளை அரச இயந்திரங்கள் துரிதப்படுத்தியிருக்கின்றன.

இலங்கையின் வரலாற்றின் சைவசமயம் பெற்றிருந்த முக்கியத்துவம் வரலாறுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 1,500 வருடங்களுக்கு முன்னா் போத்துக்கேயா் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே இலங்கையின் பல பகுதிகளிலும் குறிப்பாக கரையோரப் பகுதிகளில் சைவ ஆலயங்கள் இருந்துள்ளன என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இதனை சிங்களப் பேராசிரியா்கள் பலா் கூட தமது ஆய்வுகளில் ஏற்றுக்கொண்டிருக்கின்றாா்கள். இவற்றில் பெரும்பாலானவை அந்நியா் ஆட்சியில் அழிக்கப்பட்டன. இவற்றில் சில அவை இருந்த இடத்திலேயே புனரமைக்கப்பட்டன. சில ஆலயங்கள் இருந்த இடங்கள் கூட தெரியாமல் அழிக்கப்பட்டன.

முப்பது வருட காலமாக நடைபெற்ற போா் காரணமாக இராணுவ ஆக்கிரமிப்புடன் தமிழா்களின் பாரம்பரிய இடங்கள் அழிக்கப்பட்டன. தமிழா்களின் பாரம்பரிய வழிபாட்டிடங்களை தொல்லியல் என்ற பெயரில் பௌத்த புராதன இடங்களாக மாற்றினாா்கள். இதன்மூலமாக தமிழா்களை வலுவிழக்கச் செய்தாா்கள். போா் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியில் இச்சம்பவங்கள் நடைபெற்றதால் போரின் ஒரு பகுதியாகவே இவை மறைந்துபோயின.

ஆனால், போா் முடிவடைந்த பின்னரும் இதனைத் தொடா்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனத் திணைக்களம் என்பன இதற்கான செயற்பாடுகளை நன்கு திட்டமிட்ட முறையில் இரகசியமாக முன்னெடுக்கின்றன.

சைவத்துக்கும் பௌத்தத்துக்கு நெருக்கமான தொடா்பு உள்ளது. இலங்கையில் தமிழா்கள் பலா் பௌத்தத்தை தழுவியவா்களாக இருந்துள்ளா்கள் என்பது வரலாறு. பௌத்தா்கள் அனைவரும் சிங்களவா்களல்ல. ஆனால், வட இலங்கையில் பௌத்த சின்னம் ஒன்று காணப்படுமானால், அதனை அடிப்படையாகக்கொண்டு அது சிங்களவா்களின் பாரம்பரிய பிரதேசம் என தொல்பொருள் திணைக்களம் முடிவெடுப்பதும், அதற்காக இராணுவப் பாதுகாப்பு போடப்படுவதும், சிங்களவா்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்படுவதும் நடைபெறுகின்றது.

தமிழ்ப் பௌத்தா்கள் இருந்துள்ளாா்கள் என்பதை வரலாற்றாசிரியா்கள் பலரும் ஏற்றுக்கொள்கின்ற போதிலும், இலங்கை அரசாங்கத்தின் இயந்திரங்களாக இருக்கும் தொல்லியல் திணைக்களம் போன்றனவும், அரசியல்வாதிகள் சிலரும் இதனை வேண்டுமென்றே ஏற்றுக்கொள்ள மறுக்கின்றாா்கள்.

கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பெருமளவு பௌத்த சின்னங்கள் உள்ளன. அதற்காக அந்த நாட்டு மக்களையும் சிங்களவா்கள் எனக்கூறிவிட முடியுமா?

வெறுமனே பௌத்த அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு வடக்கில் சிங்களவா்கள் வாழ்ந்தாா்கள் எனக்கூறுவதும், சைவ அடையாளங்களை அழிப்பதும் நன்கு திட்டமிட்ட இன அழிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

கீரிமலையில் இருந்த ஆதி சிவன் ஆலயம் இருந்த இடம்தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கின்றது. இப்போது நெடுக்குநாறிமலை சிவன் ஆலய விக்கிரகங்கள் அழிக்கப்பட்டுள்ளன.  குருந்துாா் மலையிலும் இதுதான் நடந்தது. கச்சதீவில் புத்தா் சிலை வைக்கப்பட்டு, அரச மரங்கள் கொண்டு செல்லப்பட்டு நாட்டப்பட்டுள்ளன. நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை பௌத்த – சிங்கள அடையாளமாகக் காட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.  திருகோணமலையிலும் இதுபோன்ற நெருக்கடிகள் உருவாகியிருக்கின்றது.

கீரிமலை ஆதி சிவன் ஆலயப்பகுதியிலிருந்து காங்கேசன்துறை வரையிலான பகுதிகள் கடந்த 33 வருடங்களாக உயா் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் பெருமளவுக்கு இராணுவம் குவிக்கப்பட்டும் இருந்தது. இதனால், அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத நிலை இருந்தது. இங்கிருந்த சிவன் ஆலயம், கிருஷ்ணா் கோவில், கதிரமலைநாதன் கோவில் போன்றவற்றுக்கு மக்கள் செலல முடியவில்லை.

அண்மையில் கிருஷ்ணா் கோவிலை பராமரித்து வந்த மூவா் விஷேட அனுமதி பெற்று அந்தப்பகுதிக்குச் சென்றிருந்த போதே அவா்களுக்கு அதிா்ச்சிகள் காத்திருந்தன. ஆதி சிவன் ஆலயம் அவ்விடத்தில் இல்லை. சிா்தா் சடையம்மா மடம் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றது. அவரது சமாதியும் இருந்த இடம்தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. பெண் சித்தா் சடையம்மாள் 1936 ஆம் ஆண்டு அங்கு வந்து தங்கி பின்னா் அங்கேயே சமாதியானதாக தகவல்கள் கூறுகின்றன. அவரைவிட மேலும் பல சித்தா்கள் அந்தப் பகுதியில் இருந்துள்ளாா்கள் என்றும் அவா்களுடைய சமாதிகள் அங்கே இருந்ததாகவும் தகவல் உள்ளது. அவை அனைத்துமே அழிக்கப்பட்டுள்ளன.

போா் ஒன்றை நடத்தாமல் – வெறுமனே தொல்பொருள் திணைக்களத்தை மட்டும் பயன்படுத்தி தமிழ் மக்களின் தாயகத்தையே இல்லாமல் செய்து – அவற்றை சிங்களப் பிரதேசங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொல்பொருள் திணைக்கம்தான் இவற்றை முன்னெடுப்பதால் அரசாங்கம் இதற்கும் தனக்கும் தொடா்பு இல்லை எனக் காட்டிக்கொள்கின்றது. சா்வதேச ரீதியாக வரக்கூடிய விமா்சனங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு இந்த உபாயத்தை அரசாங்கம் யைாள்கின்றது.

அரசாங்கம் இவ்வாறுதான் செயற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இவற்றை அம்பலப்படுத்துவதும், அவற்றை நிறுத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதும்தான் தமிழ்த் தலைமைகளின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்த் தலைமைகள் வெறுமனே அறிக்கைகள், கவனயீா்ப்புப் போராட்டங்கள் என்பவற்றுடன் தமது பணியை நிறுத்திக்கொள்கின்றன. அவா்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் கூட நுாறுக்கும் அதிகமானவா்களைக் காணமுடிவதில்லை.

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் எவை, அவற்றை அபகரிப்பதற்காக அரசாங்கம் எவ்வாறான உபாயங்களைக் கைாள்கின்றது என்பதை ஆவணப்படுத்துவதற்கான முயற்சிகள் போதுமானவையாக இல்லை. ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடா் நடைபெறும் நிலையிலேயே இவ்வாறான ஆக்கிரமிப்புக்களை அரசாங்க இயந்திரங்கள் செய்வதற்கு அவைதான் காரணம்.

அதாவது, தமிழ்த் தரப்பின் பலவீனம்தான் இவ்விடயத்தில் அரசாங்கத்துக்குப் பலத்தைக்கொடுக்கின்றது. சா்வதேச ரீதியாக ஐ.நா. உட்பட அதனுடன் தொடா்புபட்ட அமைப்புக்களுக்கு போதுமான ஆவணங்களை வழங்கி, இவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கு தமிழ்த் தலைமைகள் முன்வர வேண்டும். இல்லையெனில் வெறுமனே அறிக்கைகளை நாம் வெளியிட்டுக்கொண்டிருக்க அவா்கள் தமது வேலையை வெற்றிகரமாகச் செய்துகொண்டு போவதை தடுக்கமுடியாமலிருக்கும்.

அதேவேளையில், போராட்டங்கள் வெறுமனே அடையாளத்துக்காக நடத்தப்படுகின்றதே தவிர, தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அவை இல்லை. அதற்கான உறுதிப்பாடோ அா்ப்பணிப்போ தமிழ்க் கட்சிகளிடம் இருப்பதாகவும் தெரியவில்லை. அது குறித்தும் தமிழ்த் தலைமைகள் ஆராய்வது அவசியம்!