யானைப்பசிக்கு சோளப்பொறி- துரைசாமி நடராஜா           

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு நிலைமைகள் தொடர்பில் நீண்ட காலமாகவே திருப்தியற்ற வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன.

இம்மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்களாகியுள்ளபோதும் இவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்குள்ளும் குடியிருப்பு பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. இம்மக்களின் “லயத்து”  வாழ்க்கை முறை இவர்களின் எழுச்சியில் தாக்க விளைவுகள் பலவற்றையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் சமூக அந்தஸ்தும் இதனால் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இம்மக்களின் பல்துறை எழுச்சி மேம்பாடு கருதி தனிவீட்டுத் திட்டத்தை துரித கதியில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆவண செய்தல் வேண்டும்.

” மக்களின் வாழ்க்கைத் தரத்தினை நிர்ணயிக்கும் ஏதுக்களில் ஒன்றாக வாழிடம் திகழ்வதுடன், மக்களது முக்கிய அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவும் இது விளங்குகின்றது.வாழும் கூட்டமும், வாய்ப்பு பொருட்களும் சேர்ந்து வாழிடத்தினை நிர்ணயிப்பதுடன் வாழிடச் சூழல்,  அயலவர்,  கிடைக்கும் ஏனைய சேவைகள் யாவற்றையும் உள்ளடக்கியதாக வாழிடம் விளங்குகின்றது.மக்களது உடல் நலத்தினை நிர்ணயிப்பதுடன் மனத்திருப்தியை ஏற்படுத்தவும் வாழிடம் உதவுகின்றது.

வாழிட வேறுபாடுகளுக்கு ஏற்ப குழுக்களிடையே வேறுபாடுகள் ஏற்படுவதுடன் சமூக அந்தஸ்தும் அவற்றிற்கேற்ப அமைகின்றது.மக்களது பொருளாதார நிலை விருப்புக்கள் என்பவற்றிற்கேற்ப இவ்வேறுபாடுகள் உருவாகின்றன ” என்று வாழிடம் தொடர்பில் பேராசிரியர் நா.வேல்முருகு தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துகின்றார்.

ஒவ்வொருவரும் உணவு, அடிப்படை வசதி,மருத்துவ கவனிப்பு, அவசியமான சமூக வேலைகள் உட்பட தமதும், தமது குடும்பத்தினரினதும் ,உடநலத்துக்கும், நல்வாழ்வுக்கும், போதுமான வாழ்க்கைத் தரத்திற்கும் உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும், அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும், வாழ்க்கைக்கு வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பிற்கும், உரித்துடையவராவர் என்று ஒரு மனிதனது வீட்டுரிமை தொடர்பாக சர்வதேச மனித உரிமை சாசனம் வலியுறுத்துகின்றது.

வீட்டுரிமை தொடர்பில் என்னதான் சட்டதிட்டங்கள் காணப்பட்டபோதும் பெருந்தோட்ட மக்களின் வீட்டு நிலைமைகள் இன்னும் முன்னேற்றம் காணவில்லை என்பது வருந்தத்தக்க ஒரு விடயமாகும்.இவர்களுக்கான தனிவீடு என்பது, கனவு நிலையில் இருந்து வருகின்றபோதும் இந்தக் கனவு அனைவருக்கும் சாத்தியமாகாத நிலையில் இன்னும் பலருக்கு பகற்கனவாகவே இருந்து வருகின்றது.

பெருந்தோட்ட மக்கள் ஏற்கனவே 200 வருடங்களுக்கு முன்னதாக இங்கு தொழில் நிமித்தம் அழைத்து வரப்பட்டு பல்வேறு துன்பதுயரங்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது.தோட்டத்தில் தொழிலாளர் தங்குவதற்காக கோப்பிக் காலத்தில் நிலையான குடிசைகள் அமைக்கப்பட்டன.இதேவேளை கடந்த நூற்றாண்டில் தொழிலாளர்களின் குடியிருப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட அநேகமான வதிவிடங்கள் தற்காலிகமானவையாகவே விளங்கியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரத்திற்கு பங்கம் ஏற்பட்டமையாலும் , தோட்டத் தொழிலாளர்களின் இருப்பிட வசதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி தொழிலாளர்களை நிரந்தரமாக இலங்கையில் தங்கச் செய்வதற்காகவும்  1912 ம் ஆண்டில் பத்தாம் இலக்க நோய்கள் (தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டது.இச்சட்டத்தில் எடுத்துக் காட்டப்பட்ட பிரமாணங்கள், விதிகளுக்கு ஏற்பவே தோட்டங்களில் லயன்களை நிர்மாணிக்க வேண்டியிருந்தது.இதனால் ஒரே சீரான இருப்பிட வசதிகள் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது என்பது புத்திஜீவிகளின் கருத்தாகும்.

தற்போது தொழிலாளர்கள் வாழும் வீடுகளில் 50 வீதத்திற்கும் மேலானவை 1949 ம் ஆண்டிற்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டவையாகும்..1927 ம் ஆண்டு முதல் 1945 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட லயன் வீடுகளை இன்றும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.1980 காலப்பகுதியில் தொழிலாளர்கள் வசித்த வீடுகளில் சுமார் 89 சதவீதமானவை லயன் வீடுகளே என்று தகவலொன்று வலியுறுத்துகின்றது.

தொழிலாளர்களுடைய வசிப்பிடங்கள் பெரும்பாலும் 180 சதுர அடி இடப்பரப்பிலேயே கட்டப்பட்டிருந்தன.எனவே மிகவும் பழைமையான சிறிய வசிப்பிடங்களில் ஒரு சராசரி குடும்பத்தில் ஐந்திற்கும் அதிகமானவர்கள் வாழவேண்டிய துரதிஷ்டமான நிலை காணப்படுகின்றது.

தேசிய ரீதியில் சராசரியாக தனியொருவனுக்கு சுமார் 100 சதுர அடி வாழ்விட வசதி காணப்படுகின்றபோதும் தோட்டங்களில் வாழ்வோருக்கு 46 சதுர அடி வாழ்விட வசதியே காணப்படுகின்றது என்று கடந்தகால தகவல்கள் வலியுறுத்துகின்றன.

பேராதனை பல்கலைக்கழகம் 1994 காலப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் தோட்டப் புற குடியிருப்புக்களில் பல்வேறு குறைபாடுகளும் தெளிவாக கண்டறியப்பட்டிருந்தது.

பிரேமதாசாவின் பாராமுகம்

இலங்கையில் 1970 ம் ஆண்டின் பின்னர் வீட்டு வசதிகளில் ஒரு அபிவிருத்தியைக் காண முடிந்தது.ஜனாதிபதி பிரேமதாசா வீடமைப்பு குறித்து அதிக அக்கறையுடன் செயற்பட்டார்.கம் உதாவ, கிராம் எழுச்சி வீடமைப்புத் திட்டம், ஒரு இலட்சம் வீடமைப்புத் திட்டம், பத்து இலட்சம் வீடமைப்புத் திட்டம் போன்றவற்றை செயற்படுத்துவதில் பிரேமதாசா முன்னின்றுழைத்தார்.

1987 ம் ஆண்டு சர்வதேச வீடமைப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டமை ஒரு சிறப்பம்சமாகும்.இலங்கையில் வீடமைப்பின் பிதாமகனாக பிரேமதாசா விளங்கியபோதும் தோட்டப் புற வீடமைப்பு தொடர்பில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே அவர் செயற்பட்டார் என்பதே உண்மையாகும்.

தோட்டப்புற மக்களின் கல்வி குறித்து சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா எந்தளவு பாராமுகத்துடன் செயற்பட்டாரோ அவ்வாறே பிரேமதாசாவும் இம்மக்களின் வீடமைப்பு தொடர்பில் செயற்பட்டார் என்றால் மிகையாகாது.1980 களில் தேர்தல் தொகுதிக்கு 100 வீடுகள் என்ற திட்டத்தின் கீழ்  இலங்கையின் கொட்டகலை, சௌமியபுரத்தில் 20 வீடுகளும், ஹட்டன், வெலிஓயா, மாணிக்கவத்தையில் 20 வீடுகளுமாக மொத்தமாக 40 வீடுகளே தோட்டங்களுக்கு வெளியே தனித்தனி வீடுகளாக கட்டப்பட்டமையும் நீங்கள் அறிந்ததாகும்.இதேவேளை 1971-.1975 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எல்லாத் துறைகளிலும் 10.5 வீதமான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.எனினும் பெருந்தோட்டங்களில் உள்ள மொத்த வீடுகளில் 3.2 வீதமானவை மாத்திரமே இக்காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ன.எல்லாத் துறைகளிலும் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் 23.3 சதவீதமானவை  1976 – 1981 காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டவையாகும். இதேவேளை இக்காலப்பகுதியில் பெருந்தோட்டங்களில் 5.2 வீதமான வீடுகளே  நிர்மாணிக்கப்பட்டது. .

ஆரம்ப காலம் தொட்டே தொழிலாளர்களின் வீட்டு வசதிகள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன.இந்நிலைமையில் இன்றும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை காண முடியவில்லை.இம்மக்களில் பலர் இன்னும் லயன் அறைகளுக்குள்ளேயே தங்களது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.இதனால் மேலெழும்பும் விபரீதங்கள் தொடர்பில் தொடர்ச்சியான வெளிப்பாடுகள் பல்துறை சார்ந்தோராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.எனினும் காத்திரமான முன்னெடுப்புக்கள் இல்லாமையானது ஒரு பெரும் குறைபாடாகக் காணப்படுகின்றது.நாள்தோறும் உழைத்துக் களைத்தவர்கள், தேயிலைச் செடிகள் செழிப்புறுவதற்கும், நாட்டின் தேசிய வருவாயை மேம்படுத்துவதற்கும் தன்னையே அர்ப்பணித்த ஒரு சமூகம் நிம்மதியாக உறங்குவதற்கு ஒரு பாதுகாப்பான வீடு இல்லை என்னும் போது அதை விடக் கொடுமை வேறென்ன இருக்கமுடியும்.

இவர்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பதற்கு ஒவ்வொருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு முன்செல்கின்றார்களே தவிர அவர்களின் பல்துறை அபிவிருத்திக்கும் தோள்கொடுக்க முன்செல்வோரின் பட்டியல் குறைவாகவே காணப்படுகின்றது.விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல்வாதிகள் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி முன்னோக்கிய நகர்த்தலுக்கு இட்டுச் செல்ல முற்படுகின்றார்கள். இத்தகையோரை ஊக்குவித்து தொழிலாளர் தோழர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முனைதல் வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு தொடர்பில் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிட்ட நிலையில் தனிவீட்டு கலாசாரத்தின் சாத்தியப்பாட்டிற்கு இன்னும் எத்தனை காலம், எத்தனை தலைமுறை இம்மக்கள் காத்திருக்க வேண்டியேற்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.எனினும் இதனை துரித கதியில் மெய்ப்பிக்க வேண்டிய ஒரு தேவைப்பாடும் காணப்படுகின்றது.

இந்தியா தொழிலாளர்களுக்கான வீடமைப்பு தொடர்பில் அவ்வப்போது சிற்சில உதவிகளை வழங்கி வருகின்றது.இது ” யானைப்பசிக்கு சோளப்பொரி” என்ற நிலையில் அமைந்தபோதும் இவ்வுதவிகளை நாம் ஒரு போதும் புறந்தள்ளி விடமுடியாது.

இந்தியா கடந்த காலங்களில் தொழிலாளர்களின் தனிவீட்டு கலாசாரத்தின் மேம்பாட்டிற்கு உதவிகளை வழங்கியுள்ள நிலையில் இந்திய வீடமைப்பு திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கும், இதற்கான மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான  ஜீவன் தொண்டமான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் ஒரு வீட்டுக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 28 இலட்சம் ரூபா அவசியமாகுமென்று மதிப்பிடப்பட்டிருக்கின்றது.எனவே4000 தனிவீட்டுத் திட்டத்தை பூரணப்படுத்துவதற்காக அத்திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை புதிய மதிப்பீட்டு விலையின் கீழ் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கையொன்று கடந்த மார்ச் 13 ம் திகதி  திங்கட்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

அமைச்சர்  ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் தெரிந்ததேயாகும.இது பூரணப்படுத்தப்பட்ட தன் பின்னர் பத்தாயிரம் வீட்டுத்திட்டமும் வெகுவிரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக. அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்திருக்கின்றார்..இதேவேளை தோட்ட வீடமைப்பு பற்றிய கொள்கை நிலைப்பாட்டில்.1972 ம் ஆண்டிற்கு பின்னர் முகாமைத்துவ உரிமை மாற்றத்தோடு சில மாற்றங்களையும் பின்னர் 1990 களில் நிறுவன ரீதியான மாற்றங்களையொட்டி குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் காணக்கூடியதாக உள்ளதாகவும்  கருத்துக்களுள்ளன.

தோட்ட மக்களில் பலர் லயத்து கலாசாரத்திற்குள் சிறைப்பட்டு அவல வாழ்க்கை  வாழ்ந்து வரும் நிலையில் இன்னும் சிலர் குடிசைகள், தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர்.வீடற்ற மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இது இம்மக்களை பாதக விளைவுகளுக்கே இட்டுச் செல்வதாக அமையும்.எனவே இதனை கருத்தில் கொண்டு தோட்டப்புற வீடமைப்பு தொடர்பில் ஆட்சியாளர்கள் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டும்.

இந்நாட்டில் 200 வருட வரலாற்றைக் கொண்ட மலையக சமூகம் அடிப்படை வசதிகளுக்கே குரல் கொடுக்கும் நிலை மாற்றம் பெற்று சகல உரிமைகளும் பெற்ற சமூகமாக அவர்கள் தலைநிமிர வேண்டும் என்பதே சகலரினதும் எதிர்பார்ப்பாகும்.