இலங்கை- ஊழலுக்கு விழுந்த அடி-பத்திரிகையாளர் துரைசாமி நடராஜா

ஊழலுக்குப் பெயர்போன ராஜபக்ஸாக்களை அரசியலில் இருந்து கீழிறக்கி புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கும் நோக்கிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இன்று (9) நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

கொழும்பில் இடம்பெற்ற பிரதான ஆர்ப்பாட்டத்தில் இலட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதோடு ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றையும் அவர்கள் முற்றுகையிட்டு அரசுக்கு எதிரான கண்டனக் குரல்களை எழுப்பினர்.பொதுமக்களின் இந்த அகிம்சைப் புரட்சி இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதி கோத்தபாய வெளிநாடொன்றிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

 ஒரு சமூகத்தின், நாட்டின் அபிவிருத்தியில் ஆட்சியாளர்களின் வகிபாகம் என்பது மிகவும் அதிகமாகும்.ஆட்சியாளர்கள் இனவாதமற்ற, பொதுநலன் பேணுகின்ற, சகல இனங்களையும் அரவணைத்துச் செல்கின்ற, ஊழலற்ற போக்குடையவராக இருத்தல் வேண்டும்.அப்போதுதான் நாடு அபிவிருத்தி காணும் என்பதோடு இனங்களுக்கிடையிலான நல்லுறவும் வலுப்பெறும் என்பதே உண்மையாகும்.எனினும் இலங்கையைப் பொறுத்தவரையில் இந்நிலைமைகள் தொடர்ச்சியாகவே மறுதலிக்கப்பட்டு வந்துள்ளன.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் கூட நவ காலனித்துவம் இலங்கையை இறுக்கிக் கொண்டிருந்தமை ஒரு கசப்பான வரலாறேயாகும்.இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் அது ஒரு புதிய பாதையில் பயணிக்கப் போகின்றது.” இலங்கையர்” என்ற பொது வரையறைக்குள் நாட்டு மக்கள் அனைவரும் உள்ளீர்க்கப்படுவார்கள் என்றெல்லாம் நாட்டு மக்கள் கனவுகண்டபோதும் ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் அந்த எண்ணத்தில் மண் விழச் செய்திருக்கின்றன.பேராசிரியர்.கா.சிவத்தம்பி போன்றவர்களும் ஏற்கனவே இது தொடர்பாக தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

 சுதந்திரத்தின் பின்னர் இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்தவர்கள் நாட்டின் வளங்களை சுரண்டுவதிலும் இனங்களுக்கிடையே விரிசல்களை ஏற்படுத்தி குளிர்காய்வதிலுமே குறியாக இருந்தார்கள்.மக்களைக் பற்றி அவர்கள் கவலைப்படாது தானும் தனது குடும்பமும் செழிப்பாக வாழ வேண்டும் என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள்.

இதனால் ஊழல் பெருச்சாளிகளாக மாறிய அவர்கள் மக்களை துன்ப வலைக்குள் தள்ளி இருந்தனர்.இது நாட்டு மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே ஒரு அதிருப்தியினை ஏற்படுத்தி இருந்தது.குறிப்பாக ராஜபக்ஸாக்கள் மீதான அதிருப்தி சற்று அதிகமாகவே காணப்பட்டது.இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுத்தல் , அரசியல் கைதிகளின் விடுவிப்பு, வடபகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை மீளவும் உரியவர்களுக்கு பெற்றுக் கொடுத்தல் , தோட்டத் தொழிலாளர் வாழ்வில் அபிவிருத்தி போன்ற பல விடயங்களில் சாதகமான முடிவுகளை பெற்றுக் கொடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிபீடமேறிய ராஜபக்ஸாக்கள் மக்களுக்கு சாதக விளைவுகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.மக்களின் துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஊழலுக்கு பேர்போன நாடாக இலங்கையை ஆட்சியாளர்கள் மாற்றியமைத்தார்கள்.

நாட்டில் நாணயத்தாள்கள் பல மில்லியன் ரூபாய் கணக்கில் அச்சிடப்பட்டதால் பணவீக்கம் 122 வீதமாக உயர்வடைந்தது.இலங்கை மரணத்தின் விளிம்பில் இருப்பதாக அமெரிக்க பொருளியல் துறை நிபுணர் ஸ்டீவ் ஹான்கே சுட்டிக்காட்டி இருந்தமையும் இங்கு நோக்கத்தக்கதாகும்.நாட்டு மக்கள் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பல பொருட்களின் கொள்வனவிற்காக வரிசைகளில் பல நாட்கள் நிற்க வேண்டியிருந்த நிலையில் உயிரிழப்புகளும் இதனால் ஏற்பட்டன.

இவ்வாறாக வரிசைகளில் நின்ற 18 பேர் இதுவரை தமது உயிரை இழந்துள்ளமை கொடுமையிலும் கொடுமையாகும்.ஜனாதிபதி கோத்தபாயாவின் தூரநோக்கற்ற சிந்தனைகள், உரம் தொடர்பான முடிவுகள், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில் ஏற்பட்ட தாமதம், இராணுவத்தை சகல துறைகளிலும் உள்நுழைத்தமை, துறைசார் நிபுணத்துவம் இல்லாதோரை நிறுவனத்தின் தலைவர்களாக நியமித்தமை எனப்பல விடயங்களும் இலங்கையின் பொருளாதாரம், மக்களின் இயல்பு வாழ்க்கை என்பவற்றை சீர்குலைத்தது.

நாட்டில் பசி பட்டினி தலைவிரித்தாடியது நிலையில் ஒரு வேளை சோற்றுக்கே மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டது.வறுமையின் கொடுமையில் பெற்றோர் பிள்ளைகளை ஆற்றில் வீசி எறிந்து தன் உயிரைக் மாய்த்துக் கொள்ள முற்பட்ட பரிதாபகரமான சம்பவங்களும் இங்கு நடந்தேறியுள்ளன.ஒரு ரொட்டியை தயார் செய்து குடும்ப உறுப்பினர்கள் நால்வரும் கால் வாசிப்படி ரொட்டியை பகிர்ந்துண்டசோகம் மலையகத்தில் அரங்கேறி இருந்தது.மாணவர்களின் கல்வி உரிமைகள் பறிபோன நிலையில் நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பன கேள்விக்குறியாவதற்கும் ஆட்சியாளர்கள் வலுசேர்த்திருந்தனர்.

இத்தகைய பிண்ணனியில் நாட்டின் அராஜகப் போக்கினைக் கண்ணுற்ற இளைஞர்கள் ஜனாதிபதி கோத்தா உள்ளிட்ட ராஜபக்ஸாக்களை வீட்டுக்கனுப்பும் முனைப்புடன் கடந்த ஏப்ரல் ஒன்பதாம் திகதி காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தமது போராட்டக்களத்தை ஆரம்பித்தனர்.இலங்கையில் என்றுமில்லாத அளவிற்கு இந்தப் போராட்டம் மக்களிடையே ஒரு வரவேற்பினைப் பெற்றிருந்தது.இளைஞர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு என்பன நாட்டு மக்களை கவர்ந்திருந்ததில் வியப்பில்லை.அரச தரப்பில் பல்வேறு இடையூறுகள் போராட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டபோதும் இளைஞர்களின் ஐக்கியத்தையும் சக்தியையும் ஆட்சியாளர்களினால் சீர்குலைத்து விட முடியவில்லை.நாளுக்கு நாள் அவர்களுக்கான ஆதரவு அதிகரித்துக்கொண்டே வந்தது.

இளைஞர்களின் போராட்ட சக்தியின் காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எனப்பலரும் வீடு செல்ல நேர்ந்தது.பிரதமர் மஹிந்தவின் பதவி விலகலைத் தொடர்ந்து வெற்றிடமாகிய பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டபோதும் இவரின் செயற்பாடுகளும் திருப்தி தருவதாக இல்லை.பிரதமராகவும் நிதியமைச்சராகவும் அவர் இருந்து வரும் நிலையில் அவர் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக இருந்து வருவதாக அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தம்மிக்க பெரேரா பகிரங்கமாகவே குற்றம் சுமத்தி இருக்கின்றார்.மேலும் ராஜபக்ஸாக்களை பாதுகாப்பதற்காகவே ரணில் பிரதமராக பதவியேற்றதாகவும் ஒரு பலமான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.சாதாரணமக்களின் துன்பத்தை விளங்கிக் கொள்ளாது கோட் சூட் போட்ட அரசியல்வாதி ரணில் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்காவும் அண்மையில் பாராளுமன்றத்தில் கடிந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.இதனிடையே ஜனாதிபதி கோத்தபாயவோடு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவியை விட்டு விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கோஷங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

 எனினும் இது சாத்தியப்படாத நிலையில் காலிமுகத்திடல் இளைஞர்களும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் இன்றைய தினம் (9) இறுதிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.வன்முறையற்ற, ஜனநாயக பண்புகளைக் தழுவிய போராட்டமாக இது அமைய வேண்டும் என்று அரசியல்கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் வேண்டுகோள் விடுத்திருந்தன. எனினும் இது தொடர்பில் அச்சம் கொண்டிருந்த அரசாங்கம் இப்போராட்டத்தை மழுங்கடிக்கும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகளையும் மேற்கொண்டது.

பொலிஸ் ஊரடங்கு சட்டம், பஸ் வண்டிகள் மற்றும் புகையிரத வண்டிச் சேவைகளை முடக்குதல் என்பன அவற்றுள் சிலவாகும்.எனினும் போராட்டக்காரர்கள் இதற்கெல்லாம் மசிந்து கொடுக்காது இன்றைய போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கி இருந்தனர். இதற்கும் மத்தியில் முன்னதாக நேற்று இரவு 9 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணிக்கு திரும்பப் பெறப்பட்டது.இதனிடையே சகல இனங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் மதகுருமார்கள் ஒன்றிணைந்து  “செங்கடல பிரகடனம்” என்று ஒரு பிரகடனத்தையும் வெளியிட்டிருந்தனர்.

இதில் கோத்தபாய பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.மேலும் ஆறு மாத காலத்திற்கு சகல கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுதல் வேண்டுமென்றும் அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பவற்றின் ஊடாக உரியவர்கள் தெரிவு செய்யப்பட்ட வேண்டுமென்றும் வலியுறுத்தல்கள் பலவும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்று நாடளாவிய ரீதியில் பல இடங்களிலும் ஜனாதிபதி கோத்தபாய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை வீட்டுக்கனுப்பும் நோக்கில்   ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

கொழும்பில் இடம்பெற்ற பிரதான ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் சுமார்  இலட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.நாட்டில் பசி பட்டினியால் வாடும் மக்களின் வக்கிரங்கள் போராட்டத்தில் எதிரொலித்துன.ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பவற்றை நோக்கி வீறு கொண்டு முன்சென்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.எனினும் போராட்டக்காரர்கள் துணிச்சலுடன் முன்னேறி ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றை சுற்றி வளைத்தனர்.

இதன்போது பொலிஸாரினால் ஏற்படுத்தப்பட்டிருந்த பல வீதித்தடைகளையும் அவர்கள் உடைத்தெறிந்தனர்.போராட்டத்தின்போது 19 பேர் காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை இன்றைய போராட்டத்தில் இராணுவ வீரர்கள் சிலரும், பொலிஸார் ஒருவரும் பொதுமக்களுடன் இணைந்து கொண்டு  செயற்பட்டமை ஒரு சிறப்பம்சமாகும்.இலங்கைக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சகல இன மக்களும் இன், மத, மொழி பேதங்களை மறந்து முன்னதாக ஒன்றுபட்டு குரல் கொடுத்திருந்தனர்.அந்த ஒற்றுமைத்தன்மை சமகால போராட்டங்களில் எதிரொலித்தமை   குறிப்பிடத்தக்கதாக இருந்தது.நாடு இழந்துள்ள ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி,  ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாத்து, மரபுவழி அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதில் இளைஞர்களின் பங்கு இதில் மெச்சத்தக்கதாகவே உள்ளது.

பொதுமக்களின் இன்றைய போராட்டத்திற்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எதுவித அறிக்கையையும் வெளியிடாத நிலையில் அவர் வெளிநாடொன்றிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இதனிடையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வ கட்சித் தலைவர்களின் கூட்டமொன்றிற்கு இன்று மாலை அழைப்பு விடுத்திருந்ததோடு பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் சபாநாயகரை கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பல தலைவர்கள் உடனடியாக பிரதமரையும் ஜனாதிபதியையும் பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.அத்தோடு சுமார் ஒரு வாரத்திற்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன ஜனாதிபதியாக பதவிவகிக்க வே்ண்டுமென்றும் ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றம் கூடி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும் அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் ரணில் தான்  பிரதமர் பதவியில் இருந்து விலகி இடைக்கால அரசாங்கத்துக்கு வழிவிடுவதாக தெரிவித்துள்ளதாக பிரதமர அலுவலகம் இன்று மாலை செய்தி வெளியிட்டுள்ளது இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.