Home ஆய்வுகள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் தமிழர்களை தொடர்ந்து வைத்திருக்கும் சிங்கள- இந்திய அரசுகளின் புது வியூகம்.

கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் தமிழர்களை தொடர்ந்து வைத்திருக்கும் சிங்கள- இந்திய அரசுகளின் புது வியூகம்.

இந்திய அரசின் துணையுடன் புனரமைக்கப்பட்ட பலாலி விமான நிலையம் அடுத்த மாத நடுப்பகுதியில் சேவையைத் தொடர இருக்கிறது.

இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போது இந்தியாவின் நுழைவு, அரசியல் ரீதியாக எமக்கு அதிருப்தியை உண்டாக்கினாலும் தமிழர் பொருண்மியம் கருதி ஒரு சிறு ஆறுதலாக இருந்தது.

ஏனெனில் புலத்திலிருந்து நேரடியாக கொழும்பு செல்லாமல் சென்னை-திருச்சி வழியாக யாழ் செல்வதென்பது தமிழர் பொருண்மியத்திற்கு பலம் சேர்க்கும் ஒன்று.

அத்துடன் தமிழீழத்திலிருந்து கொழும்பு செல்லாமல் தமிழகம் சென்று திரும்புவது நேரத்தையும்/ செலவையும் மட்டுப்படுத்துவது மட்டுமல்ல இரு நிலத்திற்குமிடையிலான ஒரு புதிய வியாபாரப் பாதையையும் உருவாக்க வல்லது.

பண்டைய காலம் தொடக்கம் போர் உச்சத்தை அடைந்து சிங்களக் கடற்படை கெடுபிடி அதிகரிக்கும் வரை இந்த வணிகப் பதையினூடாக தமிழ் வணிகம் செழிப்புற்று ஓரளவு தன்னிறைவடையும் நிலை இருந்தது.

இப் புதிய விமான சேவையினூடாக புலம், தமிழகம், தாயகம் சார்ந்து ஒரு புதிய தமிழ் வர்த்தக வலயம் உருவாகும் வாய்ப்பு இருந்தது.

பெரும் பொருண்மிய சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் எமது மக்களுக்கு இது தேவையாகவும் இருந்தது.

ஆனால் தற்போது கிடைத்திருக்கும் செய்தி எமக்குப் பேரிடையாக இருக்கிறது.

தமிழக விமான நிலையங்களைத் தவிர்த்து விட்டு கொச்சி, பெங்களூர், ஐதராபாத் உட்பட வேறு மாநில விமான நிலையங்களுக்கிடையில்தான் இச் சேவை நடைபெற உள்ளது.

இது இரு தமிழர் நிலங்களையும் என்றுமே ஒட்ட முடியாதவாறு பிரித்து வைத்துக் கையாளும் சிங்கள-இந்தியக் கூட்டுச் சதி.

இது இரு தமிழர் பொருண்மியத்தின் மீதான கூட்டுத் தாக்குதலும் கூட.

இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.

தமிழீழ நடைமுறை அரசு வெளி உதவி எதுவுமில்லாமல் வெற்றிகரமாக இயங்கியதென்றால் அதன் பின் புலத்தில் கண்ணுக்குத் தெரியாத தமிழ் பொருண்மிய வலையமைப்பு ஒன்று இயங்கியதுதான் காரணம்.

அதை விரிவாக விளக்க இங்கு இடம் காணாது.

புலத்திற்கும் தாயகத்திற்கும் இடையில் நிகழ்ந்த பணப்புழங்கலை மட்டும் சுருக்கமாக இங்கு விளக்க முயல்கிறேன்.

நாம் ஏறத்தாழ 25 வருடங்களாக “தமிழீழம்” என்ற ஒரு நிழல் அரசின் குடிமக்களாக இருந்தோம். இந்த நிழல் அரசின் ஆட்சியாளர்களான விடுதலைப் புலிகளை எதிர்த்தவர்கள் கூட விரும்பியோ விரும்பாமலோ இந்த அரசின் பங்காளிகளாகவே இருந்தார்கள்.

ஒரு அரசிற்குரிய (நிதி, நீதி, நிர்வாகம், காவல்துறை, இராணுவம் இன்ன பிற..) அனைத்து கட்டமைப்புக்களும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரை செயற்பட்டுக் கொண்டேயிருந்தன. இந்த நிழல் அரசின் அடிப்படையில் தான் புலத்தில் கூட தமிழர்களின் வாழ்வும் கட்டமைக்கப்பட்டிருந்தது.

PALALY INDIA கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் தமிழர்களை தொடர்ந்து வைத்திருக்கும் சிங்கள- இந்திய அரசுகளின் புது வியூகம்.இங்கு புலத்தில் புலிகளை எதிர்த்தவர்கள் கூட ஏதோ ஒரு வகையில் விரும்பியோ விரும்பாமலோ இந்த கட்டமைப்புக்குள் சிக்கியவர்களாகவே இருந்தார்கள்.

எனவே எமது பொருளாதாரம் சார்ந்த வாழ்வும் உழைப்பும் நிதி சேகரிப்பும் பங்கீடும் கடந்த மூன்று தசாப்தங்களாக சிறீலங்கா என்ற அரசாங்கத்தை மையப்படுத்தி இருக்கவில்லை. அதிலிருந்து விலத்தியே இதுவரை காலமும் இருந்து வந்தது. புலிகளே இதன் மையமாக இருந்தார்கள்.

அங்கீகரிக்கப்படாத ஒரு தேசம் என்ற வகையில் உலக சட்ட ஒழுங்குகளுக்குள் – வரையறைக்குள் உட்பட்டும் உட்படாமலும் இந்த பிணைப்பும் தொடர்பும் இருந்தது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் மூலம் ஒரு நாட்டிற்குரிய கட்டமைப்பு நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு அங்கீகாரத்துடன் இயங்கவில்லை என்பதைத் தவிர மற்றபடி அது ஒரு தனித் தேசம். நாம் அந்த தேசத்தை அடையாளப்படுத்தும் குடிமக்கள்.

எனவே எமது வாழ்வு அந்த தேச வரையறைக்குள் தான் கட்டமைக்கப்பட்டிருந்ததேயொழிய சிறீலங்கா என்ற தேசத்திற்குரிய எந்த வரையறையையும் கொண்டிருக்கவில்லை – குறிப்பாக பொருண்மியம்.

பணப்புழக்கம் அல்லது பணப் பங்கீடு என்பது பொருளாதாரத்தின் மிக முக்கியமான அம்சம். முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு பிறகு இச் சுழற்சி ஈழத்தமிழர்களிறகிடையே தடைப்பட்டிருக்கிறது.

இதை வெளியாக உணரமுடியாது.

புலிகள் – புலிகளின் நிழல் அரசு – தாயக மக்கள் – புலம் பெயர் மக்கள் என்ற இந்த வலைப் பின்னல் போராட்ட ஆதரவு சார்ந்தும் குடும்ப உறவுகள் சார்ந்தும் ஒரு பொருளாதார – பணப்புழக்கம் அல்லது பணப் பங்கீட்டை கொண்டிருந்தது. தற்போது அது தகர்ந்திருக்கிறது.

எமது மக்கள் இன்று வரை சந்திக்கும் நெருக்கடிக்கு இதுதான் காரணம்.

போதாதற்கு புலத்து உழைப்பு முழுவதும் சிங்கள அரசிற்கு பெரும் அந்நிய செலாவணி வருமானத்தை ஈட்டிக் கொடுத்து வருகிறது. எவ்வளவு பெரிய துயரம் இது.

(இது குறித்த மேலதிக விபரம் அறிய விரும்புவோர் கீழுள்ள இணைப்பில் தமிழீழ நடைமுறை அரசு / புலம் சார்ந்த பொருண்மியம் குறித்த எனது நேர்காணல் ஒன்று உள்ளது . பார்க்கவும்: http://www.eelamenews.com/?p=117485)

இந்த விமான பாதையினூடாக ஓரளவு தமிழர்களுக்குள் மட்டும் சுழற்சி ஏற்படும் தமிழர் பொருண்மிய வலயம் உருவாகும் என்ற நம் சிந்தனையின் மீது மண்ணள்ளிப் போட்டுள்ளது இன அழிப்பு அரச கூட்டணி.

நீண்ட காலமாக தலை மன்னாருக்கும்-இராமேஸ்வரத்திற்கும் இடையிலான கப்பற் சேவையை இழுத்தடிப்பதற்குக் காரணமும் இதுதான்.

இரு நிலத்திற்கும் இடையிலான அரசியல்-பண்பாட்டு-பொருண்மிய உறவுகள் இன்னும் வலுப்பெற்று விடும் என்ற அச்சம்தான் இரு அரசுகளும் அதை இழுத்தடிக்கின்றன.

தற்போது விமானங்களை பாதை மாற்றுவதற்கும் இதுதான் காரணம்.

எம்மை அழித்தொழிக்க எத்தகைய நுட்பமான சிந்தனைகளை அவர்கள் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

நாமோ ஒரு பக்கம் இணக்க அரசியலும் மறு பக்கம் தமிழ் தேச சிந்தனைகளை கேலியும் – கிண்டலுமாகக் கடந்து கொண்டிருக்கிறோம்.

பரணி கிருஸ்ணரஜனி
Exit mobile version