Home ஆய்வுகள் சூழலழிவு கிளர்ச்சி – பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி)

சூழலழிவு கிளர்ச்சி – பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி)

Extinction Rebellion என்பது சூழல் அழிவை நிறுத்துவதற்காக இன்று உலகெங்கும் பரவி வரும் ஒரு கிளர்ச்சி நடவடிக்கை. இதையே சூழலழிவு கிளர்ச்சி என்று இவ்வாக்கம் குறிப்பிடுகிறது. பிரித்தானியாவில் இதன் நடவடிக்கைகள் உக்கிரமடைந்து வருகின்றன. ஈழத்தமிழர் இனவழிப்பு தீர்ப்பு வழங்கிய பிரேமன் தீர்பாயத்தில் தமிழர் தரப்பு வழக்கறிஞராக இருந்த பேராசிரியர் அன்டி ஹிகின்பொத்தம் (Dr Andy Higginbottom) சூழலழிவு கிளர்ச்சி பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

அவருடைய ஆக்கம் நீண்டது. பல புள்ளிவிபரங்களை ஆதரமாக கொண்டது. இவற்றை தவிர்த்து அவர் வெளியிட்டுள்ள கருத்தையும் எமது போராட்டத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்பையும் இணைக்கிறது இவ்வாக்கம்.andy1 சூழலழிவு கிளர்ச்சி - பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி)

சூழலழிவு கிளர்ச்சியாளர்கள் அண்மைய காலத்தில் முன்னெப்போதும் காணாதளவுக்கு பிரித்தானியாவில் வளர்ந்திருக்கிறார்கள். “அரசியலுக்கும் அப்பால்” என்ற சுலோகத்துடன் பத்து நாட்களுக்கு லண்டனின் நடுப்பகுதிகளை ஆக்கிரமித்து வன்முறையற்ற போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். “எமது அழிவை நோக்கி செல்லும் தற்கால பாதையில் அதிகாரவர்க்கமும் செல்வந்தர்களும்  பணம் ஈட்டுகிறார்கள். இத்தகைய அதிகாரத்ததை தரவுகளாலும் தர்க்கரீதியாகவும் மாற்ற முடியாது. இதில் குழப்பம் விளைவிப்பதாலேயே இதை மாற்ற முடியும்” என்று அதன் நிறுவனர் சொல்கிறார்.

இவர்களுடைய குழப்பம் செய்யும் உத்தி வெற்றிபெற்றிருக்கிறது. இனி என்ன என்ற கேள்வி இப்போது எம்முன்னே நிற்கிறது. சூழலழிவு கிளர்ச்சி பலதரப்பட்டோரை தன்னுள் கொண்டிருக்கிறது. தமது கிளர்ச்சியை பல்தேசிய கம்பனிகளிடம் கொண்டுசொல்ல மாட்டோம் என்று அதன் நிறுவனர் சொல்கிறார். அதே நேரம் இதில் பங்கு பற்றிய பலர் இப்பிரச்சனையின் அடித்தளமே முதலாளித்துவம் தான் என்கிறார்கள்.

ஷெல் கம்பனி சூழலழிவையே மறுப்பதால் சில சூழலழிவு கிளர்ச்சியாளர்கள் ஷெல் கம்பனியை குறிவைத்தார்கள். இருந்தாலும் பல்தேசிய கம்பனிகளை குறிவைக்கும் திட்டம் சூழலழிவு கிளர்ச்சியாளரகளிடம் இதுவரையில்லை.

ஷெல், BP போன்ற பல்தேசிய எண்ணெய் கம்பனிகளின் தலைமை பதவிகளில் உள்ளவர்கள், பிரித்தானியாவில் உள்ள உயர் அரச பதவிகளையும் அடிக்கடி நிரப்புவார்கள். இது நவதாராளவாத கொள்கைகளின் விளைவு என்று சில முற்போக்கு எழுத்தாளர்கள் எழுதுவார்கள்.

உண்மையில் பிரித்தானியாவின் இத்தகைய ஊழல், அதனது ஏகாதிபத்திய தேவைகளை பூர்த்தி செய்யவதற்காக பல நூற்றாண்டுகளாக தொடரும் ஒன்று. இதனால் இந்த ஊழல் சாதாரணமாக்கப்பட்டு விட்டது. ஏகாதிபத்திய ஊழலும் அதன் கூட்டாளியான இராணுவமும் பிரித்தானியாவின் கட்டமைப்புகளின் இயற்கை விதியாகவே மாறிவிட்டது. அதாவது பிரித்தானிய அரசு அண்மைக் காலத்தில் தான் பல்தேசிய கம்பனிகளால் கைப்பற்றப்படவில்லை. நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் கைப்பற்றப்படுகிறது.

இந்த பல்தேசிய கம்பனிகளின் ஏகாதிபத்திய போக்கிலிருந்து மக்களின் கவனத்தை திருப்புவதே பிரித்தானியாவின் பிரதான அரசியல் கட்சிகளின் வேலையாக நிலைபெற்று விட்டது.

பசுமை புரட்சியை நாடாளுமன்ற செயற்பாடுகளுக்குள் அடக்கி அதை பலமிழக்கச் செய்யும் செயற்பாடுகள் ஆரம்பித்து விட்டன. உலகிலேயே முதலாவதாக சூழலை மாசுபடுத்திய பிரித்தானியா இப்போது தானே சூழலை பாதுகாப்பதில் முன்னிற்பதாகவும் தானே முதன்முதலில் தனது கார்பன் உமிழ்வை சுழியமாக்க போவதாகவும்  மார்தட்டுகிறது. இது எத்துனை பொய்யானது என்பதை பார்ப்போம்.

பிரித்தானியாவுக்கு வெளியே பிரித்தானியா செய்துகொண்டிருக்கும் அழிவுகளை மறைத்தால் மட்டுமே இப்படியானதொரு கருத்தை அது பரப்பலாம். ஆனால் பிரித்தானியாவுக்கு உள்ளேயும் இது பொய்யானதுதான்.

2015-2017 வரையான காலத்தில், பல்தேசிய எண்ணெய் கம்பனிகளுக்கு அரசு கொடுக்கும் வரிச்சலூகைகள் அதனிடமிருந்து அரசு பெற்ற வரிகளைவிட அதிகம் என்று அண்மையில் வெளிவந்த ஒரு சூழல் பற்றிய அறிக்கை (Sea Change) சொல்கிறது. வடகடலில் மேலும் எண்ணெய் தேடுவதை ஊக்குவிப்பதற்காகவே இவ்வரிச்சலூகைகள் கொடுக்கப்படுகின்றன.

நிலக்கரி தடைசெய்யப்பட்டதால் குறைக்கப்பட்ட கர்பன் உமிழ்வை விட நிலத்தடியில் இருந்து எண்ணெய் எடுப்பதால் வரும் கர்பன் உமிழ்வு அதிகமானது என்று அதே அறிக்கை சொல்கிறது.

பிரித்தானிய அரசு தன்னை மாற்றி பசுமை கொள்கைகளை பின்பற்றுவதற்கு இதுவரையான சூழலழிவு கிளிர்ச்சி போதுமா? சூழலை பாதுகாப்பதற்காக மாற்றங்கள் உண்டாக்குவதற்கு தேவையான அரசியல் மாற்றங்கள் தான் என்ன?

சூழலழிவு கிளர்ச்சியின் நேரடி நடவடிக்கைகளுக்கும் அப்பால், அவர்கள் அரசியல் கட்சிகளை லாபி செய்வதை ஒரு திட்டமாக முன்வைக்கிறார்கள். இது வலதுசாரி கட்சிகளிடையே நிச்சயமாக பலன் தாராது. இதனால் சூழலழிவு கிளர்ச்சி ஜெரமி கோர்பனின் தொழிலாளர் கட்சியுடன் ஒரு பேசப்படாத கூட்டணியாக மாறும். ஒரு நாடாளமன்ற உறுப்பினராக மட்டுமே இருந்தபோது, இவரும் இவரோடுள்ள சிலரும் முற்போக்கான கொள்கைகைள பேசியது என்னவோ உண்மைதான்.

ஆனால் கட்சி தலைமை ஏற்ற பின்னர் அதிகாரம் தனது வழமையான சீர்கேடுகளை கொண்டுவந்து விட்டது. தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தவர்களில் ஜெரமி கோர்பன் மிகவும் முற்போக்கானவர்தான். இருந்தும் இவருடைய தொழிலாளர் கட்சி பிரித்தானிய பல்தேசிய கம்பனிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தவில்லை. சூழல் பற்றிய விவாதத்தின் போது இவருடைய கட்சியில் எவருமே கர்பன் உமிழ்வை அதிகமாக செய்யும் பல்தேசிய எண்ணெய் கம்பனிகளுக்கு எதிராக கருத்து சொல்லவில்லை. அப்படியான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் தொழிலாளர் கட்சியின் பசுமை புரட்சியும் எண்ணெய் கம்பனிகள் பூமியை பொரித்தெடுக்க விட்டுவிட்டு, “பிரித்தானிய வேலைகள் பிரித்தானியருக்கே” என்று தேசியம் பேசுவதோடு நின்றுவிடும்.

ஆக சூழலழிவு கிளர்ச்சியும், தொழிலாளர் கட்சியும் அவர்களின் நடவடிக்கையில் சிறிது மாறுபட்டாலும் ஒன்றையே சொல்கிறார்கள். சூழலழிவு கிளர்ச்சி பொதுசன போராட்டத்தை முன்வைத்தாலும் சோசலிச சிந்தனைக்கமைய  உற்பத்தி தனியுடமையாக இருப்பதை மாற்ற விளையவில்லை. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். ஆதலால் ஒற்றுமையை குலைக்கும் பல்தேசிய கம்பனிகளை அழிப்பதைப் பற்றி பேசக் கூடாது. பெரும் சவாலை எதிர்கொள்ளும் போது ஒற்றுமையை வலியுறுத்துவது தேவைதான். ஆனால் எதை தடுக்க விளைகிறோமோ அந்த குற்றத்தை செய்பவர்களுடன் ஒற்றுமை பேணுவதை என்னவென்று சொல்வது.

பல்தேசிய எண்ணெய் கம்பனிகளுடன் கூட்டாக இணைய எண்ணுவது எமது தந்திரோபாயதின் பெரிய தவறு. இது பிழையாக வழிநடத்தப்படவும், தோல்வியை தழுவவும் வழிவகுக்கும். பதிலாக சர்வதேச ஒற்றுமையை தேடி பிரித்தானிய ஏகாதிபத்திய கம்பனிகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். தேசிய ஒற்றுமை என்கிற கருத்தற்ற ஒற்றுமை இக்கம்பனிகளை தப்பவிடுவது மட்டுமல்லாமல் அவற்றை நாம் பாதுகாக்கவும் வழி செய்யும். இவ்வாறான ஒரு தேசிய ஒற்றுமை, எம்மை சூழல் அழிவிற்கு முகம் கொடுக்கும் உலகின் பெரும்பான்மை மக்களிடமிருந்து பிரிக்கும் போலியான தேசியம்.

அடிப்படையான மாற்றங்கள் எவ்வழியில்?

அடிப்படை மாற்றங்கள் என்று நாம் பேசும் போது அது பற்றிய தெளிவு எமக்கு தேவை. சூழலிய சோசலிச எழுத்துக்கள் ஒரு புதிய கற்பனா உலக ஒழுங்கை பேசுகிறது. இவ்வாறான ஒரு நோக்கு எமக்கு தேவை. நிலத்தடி எண்ணெய் மேல் எமது தங்குநிலையை அழிக்க வேண்டுமானால், மேற்குலகலகில் வாழும் நாம் எமது வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்ற வேண்டும். அதைவிடவும் முக்கியமாக, முதலாளித்துவம் எவ்வாறு நிதி மற்றும் தொழில்நுட்பம் ஊடாக சிறுசிறு மாற்றங்களை செய்து தப்பிக்க விளைகிறது என்பதை நாம் பகுத்தறிய வேண்டும்.

ஜோர்ஜ் மொம்பயற் சொல்வது போல-

எமக்குள்ள தெரிவு இவ்வளவு தான். முதலாளித்துவம் தொடர்வதற்காக பூமியில் உயிரினங்களை அழிப்பதா அல்லது உயிரினங்கள் தொடர்வதற்காக முதாளித்துவத்தை அழிப்பதா என்பதே.

லண்டன் நகரம்தான் உலகின் வளங்கள் உறிஞ்சும் முதலாளித்துவத்தின் மையம் என்பதை நாம் உணர வேண்டும். அப்போதுதான் பிரித்தானியாவின் முதவாளித்துவத்தை நிறுத்துவதன் அவசியம் உணரப்படும். சூழலழிவு கிளர்ச்சி உண்மையானதான இருக்க வேண்டும் என்றால், அழிவுகளை கொடுக்கும் முதலாளித்துவ எண்ணெய் கம்பனிகளின் சக்தியை ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏமாற்று கதையாடல்களை வெளியிட்டுக்கொண்டு இச்சக்திகளின் சூழலழிவுகள் தொடரும். இதனால்தான் பூமியை காப்பாற்றுவதற்கு பிரித்தானியாவின் முதலாளி வர்க்கத்தை தோற்கடிக்க வேண்டும்.

தொழிலாளர் கட்சி முன்மொழியும் திட்டமும் மோசமானதுதான். பிரித்தானியாவும் ஐ-அமெரிக்கா செல்லும் பாதையில் தான் போகிறது. சூழலழிவு போராட்டம் மையநீரோட்டத்துடன் ஒத்து போகுமாயிருந்தால், அடிப்படை மாற்றங்கள் உருவாவதற்கு தேவையான கருத்துக்கள் தொலைந்து போகும்.

வெறும் வார்த்தைகளுக்கு அப்பால் போவதாயிருந்தால் இக்கிளர்ச்சி முற்றிலும் புதுவகையான பொருளாதார உற்பத்தி முறைகளை கோர வேண்டும். ஐநாவின் சூழல் கூட்டங்களுக்கு பல்தேசிய எண்ணெய் கம்பனி தலைமைகளும் ஆதரவு வழங்குகின்றன. இயக்கம் வளர்வதற்கு இது துணைபோகும் என்பது சரிதான்.

ஆனால் சூழலழிவின் பெரும் குற்றவாளிகள் பல்தேசிய எண்ணெய் கம்பனிகளும் அவற்றிற்கு நிதிகொடுத்து உதவும் லண்டன் மாநகரமும் தான் என்பதில் நாம் கவனத்தை குவிமையப்படுத்த வேண்டும். பூமியை அழிக்கும் இவர்களின் கட்டமைப்புக்களை அழிப்பதில் நாம் குறியாக இருக்க வேண்டும். வளங்கள் உறிஞ்சும் முதலாளித்துவத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் பிரித்தானியாவில் வாழும் எமக்கு இதில் அதிக பொறுப்பும் ஏனையவர்களுக்கு இல்லாத இதை மாற்றுவதற்கான தெரிவுகளும்  உள்ளன.

எமது எதிரிகள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்வதோடு, எமது நண்பர்கள் யார் என்பதையும் தெரிந்து அவர்களுடன் கூட்டொருமை வளர்க்க வேண்டும். பிரித்தானிய சூழலழிவு கிளர்ச்சி போராட்டத்தில் பெர்தா கார்செரஸ் என்பவரின் பெயர் தாங்கிய பதாகைகள் உயர்த்தப்பட்டன.

ஹொண்டூரஸ் நாட்டை சேர்ந்த பெண்ணான பெர்தா கார்செரஸ் தனது மக்களின் வளங்கள் அகழ்வுகளால் அழிக்கப்படுவதற்கு எதிராக போராடியதால் கொலை செய்யப்பட்டார். சூழலழிவு போராட்டம் சர்வதேச மக்கள் கூட்டொருமை என்ற கருத்தை உள்வாங்க முடியும் என்பதை இந்த உதாரணம் காட்டுகிறது.

கொலம்பியா அகதிகள் லண்டனின் சூழலழிவு கிளர்ச்சியில் பங்கு பற்றி சமூக சூழல் ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவதைப்பற்றி பேசினார்கள். தங்கள் நாட்டிலும் பெர்தா கார்செரஸ் போன்று, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து போராடும், பெண்கள் தாக்கப்படுவதைப் பற்றியும் பேசினார்கள். வளரும் நாட்டு மக்களையும் இணைத்து சூழலழிவு கிளர்ச்சி சிந்திக்க வேண்டும். அவர்களின் வளங்கள் பல்தேசிய கம்பனிகளால் சுரண்டப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவதை எமது நோக்கமாக கொள்ளவேண்டும். இப்போதைய தேவை தொழிலாளர் கட்சியின் மெல்லிய பசுமை புரட்சி அல்ல. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு கடும்பச்சை புரட்சி.

சூழல் அழிவை சிறு சிறு செயற்பாடுகளால் தவிர்க்க முடியாது. வங்கிகளும், பல்தேசிய கம்பனிகளும் தாமாகவே அழிந்து போகப் போவதில்லை. தங்கள் சாவு நோக்கிய பாதையில், சிறு சிறு மாற்றங்கள் செய்தாலும், அவர்கள் அப்பாதையை, சாவை நோக்கிய பாதையை மாற்றப் போவதில்லை. பல்தேசிய எண்ணெய் கம்பனிகள் அழிக்கப்பட வேண்டும். இக்கம்பனிகளின் தலைமைச் செயலகங்கள் யாவும் லண்டனின் மையத்திலேயே இருக்கின்றன. இவர்கள்தான் பிரித்தானியாவை ஒரு நூற்றாண்டாக வழிநடத்துகிறார்கள். இத்கைய ஒரு புரட்சிதான் எமக்கு தேவை. உண்மையான சர்வதேச கூட்டொருமையுடன், பிரித்தானிய முதலாளித்துவத்தின் உலகின் வளங்களை சுரண்டும் கார்பரேட்டுகளுக்கு எதிரான புரட்சி. பூமியை காப்பதற்கு இவர்களின் அழிவு அவசியம்.

மொழியாக்கம் செய்தவரின் குறிப்பு-

சூழலழிவு கிளர்ச்சி பற்றிய பேராசியரின் விளக்கத்தை ஈழத்தமிழர் போராட்டத்துடன் சேர்த்து ஈழத்தமிழ்ர்களாகிய நாம் சிந்திக்கலாம். இரண்டையும் அடைவதற்கான வழியாக சர்வதேச கூட்டொருமையே வலியுறுத்தப்படுவதை பார்க்கிறோம். ஈழத்தமிழ் விடுதலையும் சரி, ஏனைய தேசிய இனங்களின் விடுதலையும் சரி உலகின் பொதுசன கவனத்தை அதிகம் ஈர்க்காத விடயம். ஆனால் சூழலழிவு அப்படியல்ல. எம்முடைய போராட்டத்தை இதனுடன் இணைப்பதால் இரண்டு போராட்டங்களும் வீரியம் அடையுமா? சிந்தித்து செயற்படுவோம்.

Exit mobile version