Home செய்திகள் திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகள்

திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகள்

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் உட்பட அங்கு தடுப்பில் உள்ளவர்கள் தங்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று(09) ஆரம்பித்துள்ளனர். 

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் தாங்கள் இந்த சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த அரசாங்கத்தில் தங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு சரியான நீதியை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Capture 6 திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகள்

  • தமிழக முதல்வருக்கு எங்களது கோரிக்கை! சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத் தமிழரை சித்திரவதை செய்வது ஏன்?
  • இந்தக் கொடிய கொரோனா காலத்தில் எங்கள் குடும்பத்தினர் வெளியில் உள்ளனர். கருணை அடிப்படையில் எங்களை எங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழவிடுங்கள்.
  • நீதி வேண்டும். நீதி வேண்டும். தமிழக அரசே நீதி வேண்டும். சிறு சிறு குற்ற வழக்கு. தீர்வு இன்றி தண்டனைக் காலத்திற்கும் மேலாக சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளோம்.

போன்ற பதாகைகளை வைத்து, தமிழக அரசிடம் தங்களுக்கான நீதியை வேண்டி இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள மகேந்திரன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், தான் 8 வருடங்களாக இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் பிறந்தவர்களும் இந்த முகாமில் உள்ளதாகவும், சென்ற அரசாங்கத்தில் தங்களுக்கான நீதி கிடைக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் அது கிடைக்கும் என்று நம்புகின்றோம். எங்களுக்கு உடனடியாக விடுதலை வேண்டும். நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நாம் பெரும் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். முகாம்களில் எங்கள் உறவுகளுடன் வாழ கருணை காட்டுங்கள். நடவடிக்கை எடுங்கள். இல்லையெனில், எங்களை கொன்று எங்கள் உடல்களை எங்கள் உறவினர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். இந்த உண்ணாவிரதம் தொடரும். உண்ணாவிரதத்தில் இழப்புகளை சந்திக்காமல் எங்களுக்கு நல்லதொரு தீர்வினைத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

மேலும் ஒரு கைதி கருத்துத் தெரிவிக்கையில், தமிழக முதல்வருக்கு எங்கள் இரண்டாவது கோரிக்கை. சென்ற வாரம் ஒரு கோரிக்கையை வைத்திருந்தோம்.  மீண்டும் அதே கோரிக்கையை வைத்து எங்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். எங்களை தயவு செய்து விடுதலை செய்யுமாறு மிகத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம் என வீடியோ பதிவு செய்து சமூகவலைத் தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version