Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் இன்று இனஅழிப்புப் பேரபாயத்துள் ஈழத்தமிழர்கள்

இன்று இனஅழிப்புப் பேரபாயத்துள் ஈழத்தமிழர்கள்

“இப்போது தலைவர்கள் இல்லை. நாட்டைச் சீனாவின் குடியேற்ற நாடாக மாற்றுவதன் மூலம் வெற்றிடம் நிரப்பப்பட வாய்ப்பு உள்ளது. இலங்கையில் கோவிட் தொற்று நோயை எதிர் கொள்வதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளில் இருந்து இலங்கையின் தலைமைத்துவப் பிரச்சினையை மதிப்பிட முடியும்.

மிகவும் ஆபத்தான விடயம் என்னவென்றால், நாட்டைப் பதினான்கு நாட்கள் முடக்குவது தொடர்பாக மருத்துவ சங்கங்கள் முன்வைத்த திட்டத்தை ஏற்க மறுத்ததன் மூலம் மனித உயிர்களை விடப் பொருளாதார இழப்புக் குறித்து அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

அரசாங்கம் தவறு செய்கிறது என்றால், பாராளுமன்ற ஆட்சி முறைமையில் அதனைத் தடுப்பதற்கான எதிர்க் கட்சிகளின் தலைமைகள் முக்கியம். ஆனால் இலங்கையில் எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைவற்ற வெறும் முணுமுணுப்புக் குரலாகவே உள்ளன.

இலங்கையின் நெருக்கடியை தலைவர்களின் பற்றாக் குறையின் நெருக்கடியாகவும் பார்க்க முடியும். முதிர்ச்சியடைந்த சனநாய ரீதியான தலைவர்கள் இல்லாததால் தான், ஒருநாடாக இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு நெருக்கடிக்குச் சென்று, இறுதியில் தோல்வியுற்ற அரசாக மாறியுள்ளது.

இந்தியாவைப் போன்று தனித்துவமான, கடுமையான சுதந்திரப் போராட்டத்தை மேற்கொண்டு இலங்கை சுதந்திரத்தைப் பெறவில்லை. அப்படிப் பெற்றிருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி, சனநாயக விழுமியங்களைப் பற்றிய புரிதலுடன் கூடிய மேம்பட்ட சமூகத்தின் தோற்றத்திற்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டு, முதிர்ச்சியடைந்த தலைவர்களின் தோற்றத்திற்கு வழி வகுத்திருக்கும். அவ்வாறு இருந்திருந்தால் சாதி, இனம் மற்றும் மதம் ஆகிய வேறுபாடுகளைப் புறக்கணித்து ஒரு ஐக்கிய தேசத்தைக் கட்டியெழுப்ப வலுவான அடித்தளம் அமைந்திருக்கும். அடிபணிதலைக் காண்பிப்பதன் மூலமும், எதார்த்த நிலைகளை ஏமாற்றும் வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும்  ஆக்ரோசமான விடுதலைப் போராட்டத்தைத் தொடங்காமல் பெறப்பட்ட சுதந்திரமாக இலங்கையின் சுதந்திரம் அமைந்தது.

1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு, அதுவரை இலங்கை அனுபவித்த நீதித்துறை மீளாய்வுச் சத்தியை இழக்க வைத்தது. அரசியலமைப்பின் சனநாயகத் தன்மையை முற்றிலுமாக மாற்றுவதற்கும், அரச ஆட்சியை பொதுச் சொத்தைப் பாரிய அளவில் கொள்ளையடிக்கும் நடவடிக்கையாக மாற்றுவதற்கும் ஒரு அரசியலமைப்பு 1978இல் இயற்றப்பட்டது. இதன் வழி மூடப்பட்ட பொருளாதார முறைமை திறந்த பொருளாதார முறைமைக்கு மாற்றப்பட்டது. சனநாயகத்தின் மீது சுமத்தப்பட்ட கடுமையான வரையறைகள் இறுதியில் நீடித்த வன்முறைப் போராட்டங்களால் நாட்டை இடைவிடாத இரத்தக் களரி நிலமாக மாற்றியது. ஜே. ஆர். ஜெயவர்த்தனாவால் இந்த அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் வந்த அத்தனை சனாதிபதிமாரும் இந்தக் கொள்கைகளையே தங்கள் ஆட்சியில் முன்னெடுத்துச் சென்று, அவற்றை மேலும் பலப்படுத்துவதற்குரிய புதிய அம்சங்களைச் சேர்த்துக் கொண்டனர். இந்த ஊழல் முறைமையில் ஒன்று எந்த சனாதிபதியுமே தனது தற்காலிக பாதுகாப்பில் உள்ள பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துவது கடுந்தண்டனைக்குரிய குற்றம் என்பதை வெளிப்படையாக உணரவில்லை. அடுத்தது இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சனாதிபதியின் ஒப்புதலுடன் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதை ஒவ்வொரு சனாதிபதியும் அனுமதித்தனர். ஆயினும் கடந்த 43 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் விசாரணை கோரி ஒரு பிரேரணை கூட வரவில்லை.

ஊழல் மற்றும் கொடூரத்தனமான ஆட்சி முறைமையை மாற்றி அமைப்பதற்கும் நாடு தோல்வியுறுவதைத் தடுப்பதற்கும் இறுதிச் சந்தர்ப்பமாக 2015 அரசாங்க மாற்றம் கருதப்பட்டது. ஆயினும் சனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிப்பதாகக் கூறிப் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தினர் அதனைச் செய்யத் தவறியதுமல்லாமல் சனாதிபதி ஆட்சி முறைமையைச் சட்டத்தின் ஆட்சிக்குள் கொண்டுவரவும் தவறினர். நல்லாட்சியிலும் அரச நிர்வாகத்தின் நிரந்தர அம்சமாக மாறியுள்ள ஆளும் கட்சியின் சனாதிபதி மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் வாய்ப்புகள் பாதுகாக்கப்பட்டதுடன், அது அவர்களின் முக்கிய அபிலாசையாகவும் இருந்தது.” இவை இலங்கையின் மூத்த அரசியல் ஆய்வாளர்  விக்டர் ஐவன், ‘பினான்சியல் டைம்’க்கு “தலைவர்கள் இல்லாதமை” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையினைத் தினக்குரல் நாளிதழ் தமிழாக்கம் செய்து வெளியிட்டதன் வழி அறியப்பட்ட தகவல்களாக உள்ளன. இக்கட்டுரை சிறீலங்கா தோல்வியுற்ற அரசாக உள்ளதைத் தெளிவாக்குகிறது.

தோல்வியுற்ற அரசாக உள்ள சிறீலங்கா, தான் தனது நாட்டை சீனக் குடியேற்ற நாடாக மாற்றுவதால் சிங்கள மக்களுக்கு இடை தோன்றக் கூடிய எதிர்ப்புக்களைத் திசை திருப்ப ஈழத்தமிழர்கள் மேலான இனவெறியை வளர்த்து, இனஅழிப்பை மையமாகக் கொண்ட அரச செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்னும் உத்தியைக் கையாள்கிறது. இதனால்  இனஅழிப்புப் பேரபாயத்துள் உள்ள ஈழத்தமிழ் மக்களின் வெளியக தன்னாட்சியை உலக நாடுகளும், அமைப்புக்களும் காலந்தாழ்த்தாது ஏற்பதன் மூலம் மட்டுமே ஈழத்தமிழர்கள் இனஅழிப்புக்கு உள்ளாவதைத் தடுக்க முடியும்.

Exit mobile version