Home ஆய்வுகள் ஈழத்தில் பறை இசை

ஈழத்தில் பறை இசை

“விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க பிறந்த பறை
கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை”

என்னும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல. ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளுடன் இணைந்த வரிகள். இன்றைய கால கட்டங்களிலே வழக்கொழிந்து காணப்படும் பறை இசை என்பது, பழங்காலத் தமிழர் வாழ்வியலில் அளப்பரிய பங்காற்றியது என்பது இன்று மறுக்கப்பட்டு வருகின்ற உண்மையாகும். போருக்கு எழுமாறு வீரர்களை அணிதிரட்ட, வெற்றி தோல்விகளை அறிவிக்க, காடுகளில் விலங்குகளை விரட்ட, மன்னரின் செய்திகளை மக்களுக்கு தெரிவிக்க, வயல் வேலைகளின் போது ஊக்கமளிக்க, பெருகி வரும் புனலை அடைக்கவும் பயன்படுத்தப்பட்டது மட்டுமன்றி, இயற்கை வழிபாடு, விழாக்கள், கூத்துக்கள், இறப்பு நிகழ்வுகள் என்பவற்றிலும் பறை இசையானது இரண்டறக் கலந்து காணப்பட்டது என்பதே உண்மை.

இத்தகைய பெருமை வாய்ந்த பறை இசை என்பது சமூகத்தில் ஏற்பட்ட பல மாற்றங்கள் காரணமாக வழக்கொழிந்து போய்க்கொண்டு இருக்கின்றது. இன்று பறை இசையும், பறை இசைக்கும் மக்களின் வாழ்க்கை நிலையும் கேள்விக் குறியாகவே காணப்படுகின்றது. சமூக வகுப்பு நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பறை இசைக்குள் மக்களில் பெரும்பான்மையானோர் தமது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டு அடையாளத்தை மாற்றிக் கொண்டு செல்கின்ற போதும், பறை இசையை உயிராகக் கருதி பறை இசை ஊடாகவே தமது வாழ்க்கையை நடாத்தி வருகின்ற மக்கள் எமது ஈழத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

ஈழத்தமிழர்களின் அடையாளமாகக் கொள்ளப்படும் பறை இசை என்பது காலப் போக்கில் சாதிய வேறுபாடுகளின் அடிப்படையில் தொழில் நிலையை குறிக்கும் சொற்களாக பறை எனவும், பறை மேளத்தை வாசிப்பவர்கள் பறையர் எனவும் மாற்றம் பெற்றது. தொல்காப்பியம் (தெய்வம் உணாவே மாமரம் புட்பறை…. பொருள்- 20), குறுந்தொகை (பறைபடப் பணிலம் ஆர்ப்ப…. ஒளவையார் பாடல்- 15) பரிபாடல் (உழவர் களிதூங்க….(மையோடக் கோவனார்-வையை (7)-16-19), பதிற்றுப் பத்து (வணங்கிய சாயல்……பாடல்-70-20-27), கலித்தொகை (மறையின் தன் யாழ் கேட்ட…நல்லந்துவனார்- நெய்தற்கலி- 26-10-16), நற்றிணை (வைகல் தோறும் இன்பமும் இளமையும்பாடல் -46), நான்மணிக்கடிகை (பறைபட வாழா அசு ணமா….பாடல்-04), திருக்குறள் (அனிச்ப்பூக் கால் களையாள்….குறள்-1115) என பலவும் பறையின் பெருமையை கூறிக்கொண்டு தான் இருக்கின்றன. இது மட்டும் இன்றி ஜந்திணைகளிலும் குறிஞ்சிப் பறை, முல்லைப் பறை, மருதப் பறை, நெய்தல் பறை, பாலைப் பறை என பறை முழங்கிய வரலாறும் உண்டு.

இத்தகைய சிறப்புக்களை உடைய பறை இசையானது, அரிப் பறை, ஆறெறிப் பறை, உவகைப் பறை, சாப்பறை, சாக்காட்டுப் பறை, வெட்டியான் பறை, நெய்தற் பறை, பம்பை, மீன்கோட் பறை, மருதநிலப் பறை, கல்ல வடம், குரவைப் பறை, தடறு, குறும் பறை, கொடுகொட்டி, கோட பறை, தமுக்கு, நிசாளம், சூசிகம், தக்கை, தடாரி, பறைத்தப்பட்டை, தலைப் பறை, படலை, பண்டார மேளம், பன்றிப் பறை, முரசம், பூசற்றண்ணுமை, முருகியம், வெறியாட்டுப் பறை, வீராணம், பஞ்ச மாசத்தம் என்றவாறாக வகைப்படுத்தப்பட்டு நோக்கப்படுகின்றன.

இதன்படி ஆதி திராவிட தமிழர்களின் கலையாகப் பார்க்கப்பட்ட பறை ஆட்டமும், பறை இசைப்பவர்களும் மேலாதிக்க சக்திகளின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் என முத்திரை குத்தப்பட்டனர். இதன்வழி அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், கால ஓட்டத்தில் சாவு மேளம் அடிப்பவர்களாகவும், குறிப்பிட்ட சில நிகழ்வுகளிலே பறை இசையை வாசிப்பவர்களாகவும் பார்க்கப்பட்டதுடன், பறை இசை என்பது சாதியக் குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டது. இன்று சிறு தெய்வ வழிபாட்டு ஆலயங்களிலும், இறப்பு வீடுகளிலுமே பறை இசையினையும், பறை இசைப்பவர்களினையும் காணக்கூடியதாக உள்ளது.

ஈழத்தை பொறுத்தவரையிலும் இன்று பறையர் சமூகம் என்பது சமூகத்தவர்களினால் தமக்கு இணையாக ஏற்கப்படாதவர்களாகவும், உரிய அங்கீகாரம் இன்றியும் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பறையர் சமூகத்தினரின் பிழைப்பூதிய தொழில் முயற்சியாகவும் தமது குலத் தொழிலாகவும் பறை இசை பார்க்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை என ஈழத்தின் பல பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு பறைக்கான சமூக அங்கீகாரம் என்பது இன்றும் கிடைக்கப் பெற்றதாகத் தெரியவில்லை. பறை இசையை சாதிக்குரியதாகவும், இறப்பு சடங்குகள் சம்மந்தப்பட்டதாகவும் சுருக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. பறை இசையை இசைப்பதற்கான போதியளவு வருமானமும் அவர்களுக்கு கிடைக்கப்பெறாத நிலமைகள் காணப்படுகின்றன. பறை இசை குறித்தும், தமக்கான வருமானம் குறித்தும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலே எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதிலும், இவர்களுக்கான உரிய அங்கீகாரம் இன்னும் எட்டப்படவில்லை.

ஈழத்தில் பறை இசைக்கும் பறை இசைக் கலைஞர்களுக்கும், முதன்மை வழங்குகின்ற மட்டக்களப்பில் கோளாவில், களுதாவளை, புன்னைக் குளம், ஆரையம்பதி, கல்முனை, வெல்லாவளி, பிலாலி வேம்பு ஆகிய பகுதிகளிலே சிறப்பாக பறை இசையானது பேணப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மட்டக்களப்பில் பறை இசைக்கும், பறையர் சமூகத்திற்கும் நீண்ட பாரம்பரியம் உண்டு. இங்கு சாதி ரீதியில் பறையர் சமூகத்தினை அடக்குமுறைக்கு உட்படுத்துகின்ற செயற்பாடும் இடம் பெறுகின்றது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருவிழா முடிந்ததும் இடம்பெறும் நிகழ்வில் ஒவ்வொரு சாதியினரும் தமது தலை முறைகளைக் கூறி குல விருதுகளை பெறுகின்றனர். இதன்படி பறையர்கள் தமது தலைமுறையைக் கூறி சின்னப்பறை எனும் குல விருதை பெற்றுக் கொள்கின்றனர். இந்த வகையில் பறை மேளக் கூத்தின் ஆற்றுகையாளர்களான பறையர் சமுதாய மக்களிடையே தாழ்வு மனப்பாங்கு, சாதி அடிப்படையில் கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல், சமூக அபிவிருத்தி மாற்றங்களுக்கு ஏற்ப இன்றைய இளைஞர்கள் சிலர் பறை இசை வாசிப்பது தமது அந்தஸ்து குறைவதாக எண்ணுதல், பறை சமூகத்தவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கும் இடங்களில் பிற மாணவர்களால் ஒதுக்கப்படும் நிலை என்பன இன்று பறை இசை மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டு செல்வதற்கான காரணங்களாகக் காணப்படுகின்றன.

parai ஈழத்தில் பறை இசை

இதன் விளைவுகள் இன்று பறை இசையை மட்டும் இன்றி பறை இசைச் சமூகத்தையும் பாதித்துள்ளது. ஈழ மக்களின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட பறை இசை, இன்று கிராமியக் கோவில்களிலும், இறப்பு சடங்குகளின் போது மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. பறை இசையை வாசிக்கும் சமூகத்தில் இருந்து மேல் நிலைக்கு வருகின்றவர்கள் தமது அடையாளத்தை மறைக்கின்ற நிலையில் ஒரு சிறு பகுதியினரே பறை இசைக்கு முக்கியத்துவம் வழங்கி பேணி வருகின்றனர்.

இதேவேளை எவ்வளவு நவீன வாத்தியங்களின் வருகை ஏற்பட்டிருந்தாலும், கிராமிய ஆலயங்களில் பறை இசைக்கு தெய்வங்கள் உரு ஏறி ஆடுகின்ற தன்மையும், மரண வீடுகளில் பறையின் முக்கியத்துவமுமே பறை இசையையும் பறை இசைச் சமூகத்தையும் பூரணமாக அழிந்துவிடாமல் பாதுகாத்து வைத்திருக்கின்றன. எவ்வளவு தான் கலைகள் வேறு வாத்தியக் கருவிகளின் ஊடாக அரங்கேற்றப்பட்டாலும், பறை இசை மூலமான அரங்கேற்றம் என்பதே கலைகளின் அரங்கேற்றத்திற்கு பூரணத்துவத்தை வழங்கும். இதன்படி 2010ஆம் ஆண்டு மட்டக்களப்பு பிரதேச செயலகத்தினால் மக்கள் கலை இலக்கிய விழாவில் பறை மேளக் கூத்து ஆடப்பட்டது.

தற்காலங்களில் ட்றம்ப் போன்ற வாத்திய வகைகள் பறை வாத்தியத்திற்கு பதிலாக மரண வீடுகளில் பாவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பறை மேளத்தின் ஓசையை அவற்றில் காணமுடிவதில்லை. ஆகம வழிமுறைகளின்படி பூசைகள் இடம்பெறும் கோவில்களில் பறை இசையை காண முடியாது போனாலும், பன்றித் தலைச்சி, புளியம்பொக்கணை, பொறிக்கடவை, புதூர், வற்றாப்பளை போன்ற கோவில்கள் ஆகம வழிப்படி இயங்கினாலும் பொங்கலின் போது பறை மேளம் இசைக்கப்படுவதனைக் காணலாம். செல்வச்சந்நிதியில் வெளிப்பிரகாரத்திலும் பறை இசை வாசிக்கப்படுவதுண்டு. முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திலும் பறை இசையின் பங்கு அளப்பரியது.

இந்த வகையில் பறை மேளம் என்பது வழக்கொழிந்து போயினும், ஈழத்தில் கிராமிய வழிபாடு என்று வருகின்ற போது பறை மேளத்திற்கு பெரும் பங்குண்டு. ஈழ மக்களின் கலாசார அடையாளம் என்ற வகையில் பறை இசையை பேணிப் பாதுகாப்பது என்பது முக்கியமானது. இந்த வகையிலே பறை மேளம் இசைப்பவர்கள் பாண்டித்தியம் பெற்றவர்களின் உதவியுடன் அதனை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை போன்ற இடங்களில் அடுத்த தலை முறையினருக்கு பறை இசையை கற்றுக் கொடுக்கும் விதத்தில் பயிற்சி வகுப்புக்கள் இடம் பெறுகின்றன.

மேலும் பறை இசை சமூகத்தில் இருந்து வரும் இளைஞர்கள் தமது அடையாளத்தை விட்டுக் கொடுக்காது அதனை முன்னேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதன் ஊடாக ஈழத்தின் அடையாளத்தை பேணிப் பாதுகாக்க முடியும்.

ஆரம்பத்தில் ஏனைய இசைகளை விட முன்னுரிமை வழங்கப்பட்ட பறை இசையும் பறை இசைக் கலைஞர்களும் வகுப்பு பிரிப்பினைத் தொடர்ந்தே தொழில் அடிப்படையில் பறையர் என்ற அடைப்பிற்குள் கொண்டுவரப்பட்டனர். காலப் போக்கில் பறை இசையும் பறை இசைக் கலைஞர்களையும் புறக்கணித்து வரும் சமூகத்தில் சில சமய வழிபாடுகளிலும் இறப்பு சடங்குகளிலும் விரும்பியோ விரும்பாமலோ பறை இசையை ஆதரிக்க வேண்டிய தேவைப்பாட்டில் காணப்படுகின்றனர். கோவில்களில் தெய்வ பூசை, கோவில் வழுந்து ஏற்றல், படையல் செய்தல், கலையாடுதல், காவடியாட்டம் என நீண்டு கொண்டு செல்கிறது பறை இசைக்கான முதன்மை நிலை.

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் புறப்பட்டு அளம்பில் கடலுக்கு சென்று அங்கு கடல் நீரை பானையில் எடுத்து ஏழு நாட்கள் விளக்கெரிக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் இடம்பெறும். இதன் போது ஒவ்வொரு வேளையும் அரிப்பறை இசைக்கப்படுவது வழமை. அதே போன்று மடைப் பண்டம் என்பதும் கிராமியக் கோவில்களில் முதன்மை பெறுகின்றது. மடைப் பண்டம் எடுக்கும் போது அதற்கு பூசாரி உரு ஏறி ஆடுவதும், பக்தர்கள் சுவாமி காவுபவர்கள் என அனைவரும் உருக்கோலம் கொண்டு பார்ப்பவர்களையும் முழுமையாக பக்தி நிலைக்குள் கொண்டு வருவதில் இப் பறை இசைக்கு அளப்பரிய பங்குண்டு. இதனை விட வவுனியா கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் பறைமேள இசையுடன் தெய்வங்கள் ஊர்வலமாக வருவதனைப் பார்ப்பதற்கு செல்லும் பக்தர்கள் பறைமேள இசையுடன் இரண்டறக் கலந்து விடுகின்றனர்.

தொழில் அடிப்படையில் கீழ் நிலையில் பார்க்கப்பட்டாலும், இன்று சமய வழிபாடுகளும், இறப்பு சடங்குகளிலும் பறை இசையை தட்டிக் கழிக்க முடிவதில்லை. பறை இசையை முழுமையாக அழிந்து போய்விடாது பாதுகாப்பதில் சமய சடங்குகளுக்கே முக்கிய பங்குண்டு.

பறை இசையினையும், பறை இசைக் கலைஞர்களின் முக்கியத்துவத்தினையும் மறந்து சமூகத்தில் சாதிய அடிப்படையில் முத்திரை குத்தப்படுவதாலேயோ என்னவோ அவர்கள் தம்மை சமூகத்தில் அடையாளப்படுத்திக் கொள்ள முன் வருவது இல்லை. ஆனால் நம் சமுதாயம் ஒன்றை மறந்து விட்டது. வழக்கொழிந்து போவது தனித்து பறை இசை சமூகம் மட்டும் அல்ல; காலாகாலமாக நம் பண்பாட்டினை பாதுகாத்து வைத்திருக்கும் அடையாளமும் இணைந்து தான் என்பது. இன்றும் பறை இசையில் பலவித தாள மெட்டுக்களை கேட்பவர் மனதைக் கவரும் வகையில் இசைக்கக் கூடிய பறை இசைக் கலைஞர்களும் அவர்களின் திறன்களும் எத்த னையோ கூலி வேலைகளிற்கு பின்னும் உயர் நிறுவனங்களிலும், கல்விக் கூடங்களிலும் ஏற்றத் தாழ்வு எனும் சுவர் கொண்டு மறைக்கப்பட்டு காணப்படுகின்றது.

பறை இசைக் கருவி எமது பண்பாட்டின் அடையாளம் என்பது சமூகத்தவர்களுக்கு புரிய வருமா? அல்லது தொழில் அடிப்படையில்மேலும் மேலும் கீழ் நோக்கித் தள்ளப்பட்டு தமிழர் பாரம் பரிய இசை அடையாளம் இன்றி போகுமா? என்பது கேள்விக் குறியாகவே காணப்படுகின்றது. பண்பாட்டின் அடையாளம் என்ற வகையில் பறை இசையை பேணிப் பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரின் கடமை.

வேலம்புராசன். விதுஜா

யாழ் பல்கலைக்கழகம்

சமூகவியல் துறை

Exit mobile version