Home ஆய்வுகள் “ஒவ்வொரு தனிமனித முன்னேற்றம் தான் நம் சமூகத்தின் மொத்த முன்னேற்றமாக கணக்கிடப்படும்” – ...

“ஒவ்வொரு தனிமனித முன்னேற்றம் தான் நம் சமூகத்தின் மொத்த முன்னேற்றமாக கணக்கிடப்படும்” – சேகர் கோபி

ஒவ்வொரு தனிமனித முன்னேற்றம் தான் நம் சமூகத்தின் மொத்த முன்னேற்றமாக கணக்கிடப்படும் என  உற்பத்தி மற்றும் அது சார்ந்த பிற கைத்தொழில் அதற்கான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் முழங்காவில் பிரதேசத்தை சேர்ந்த – வளர்ந்துவரும் முயற்சியாளர்  சேகர் கோபி தெரிவித்துள்ளார்.

உலக புத்தாக்க தினத்தை முன்னிட்டு அவர்  இலக்கு மின்னிதழுக்காக வழங்கிய குறித்த  செவ்வியின்  முழுமையான வடிவத்தை இங்கே வழங்குவதில் நிறைவடைகிறோம்.

IMG 20210416 WA0019 “ஒவ்வொரு தனிமனித முன்னேற்றம் தான் நம் சமூகத்தின் மொத்த முன்னேற்றமாக கணக்கிடப்படும்” - சேகர் கோபி

கேள்வி : தங்களையும், தங்கள் நிறுவனத்தையும் பற்றிய சிறு அறிமுகம் தர முடியுமா?

பதில் : என்னுடைய பெயர் சேகர் கோபி; முழங்காவில் பிரதேசத்தில் வசித்து வருகிறேன்; தற்போது நான் இங்கே உணவு உற்பத்தி மற்றும் அது சார்ந்த பிற கைத்தொழில், அதற்கான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்ற விலை கூடிய இயந்திரங்களை எமது பிரதேசங்களில் கிடைக்கப் பெறுகின்ற பொருட்களைக் கொண்டு குறைந்த விலைக்கு என்னால் இங்கேயே தயாரித்துக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அத்துடன் வாடிக்கையாளர்களின் சில தேவைகளுக்கான இயந்திரங்களையும் சிறப்பாக வடிவமைத்து கொடுக்கிறேன்.

கேள்வி : உள்ளூரில் தங்கள் இயந்திர உற்பத்தி முயற்சிகள் தொடர்பாக விபரிக்க முடியுமா?

பதில் :  தற்பொழுது எனது நிறுவனத்தின் மூலம் வடக்கு-கிழக்கு மட்டுமல்லாமல், இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் வாடிக்கையாளரின் தேவைகளுக்கேற்ப கைத்தொழில் இயந்திரங்கள் அனைத்தையும் வடிவமைத்து உற்பத்தி செய்வதுடன், அவற்றை இயக்குவது தொடர்பான பயிற்சிகளையும் அவர்களது இடங்களிலேயே சென்று வழங்குகிறோம். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களை, பொருட்கள் பழுது பார்த்தல் போன்ற சேவைகளையும் செய்து கொண்டிருக்கின்றோம். உதாரணமாக அரிசி மாவு வறுக்கும் இயந்திரங்கள், அரிசி ஆலை இயந்திரங்கள், தேங்காய் எண்ணெய் ஆலைகளுக்கான இயந்திரங்கள், உலர வைக்கும் இயந்திரங்கள் போன்ற அறுவடைக்கு பிந்திய உணவு பதப்படுத்தல் மற்றும் இதர இயந்திரங்களை உற்பத்திகள், பழுதுபார்த்தல் ,பொருத்துதல் போன்ற சேவைகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி : வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சிக்கேற்ப செயற்கை நுண்ணறிவு (Artificial   intelligence) சார்ந்த தானியங்கி இயந்திரங்கள், உபகரணங்களை உள்ளூரில் தயாரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் பற்றி கூற முடியுமா?

பதில் :  நாம் எதிர்காலத்தில் தேவை ஏற்படும் இடத்தில் நுண்ணறிவு சார்ந்த தானியங்கி இயந்திர உபகரணங்களை உள்ளூரில் உற்பத்தி செய்ய முடியும். அவை எமது உள்ளூர் தேவைகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு விற்கக்கூடிய ஏற்றுமதி செய்யக் கூடியதையடுத்து  அவற்றை வடிவமைக்கவும் முடியும். ஏனெனில் உணவு உற்பத்தியின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும், தரத்தை பேணுவதற்கும் தானியங்கி இயந்திரங்களின் தேவை அதிகமாக காணப்படுகிறது.

கேள்வி : தங்களைப் போன்றோரின் முயற்சிக்கான வாய்ப்புகள், தடங்கல்கள் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் :  எமது பிரதேசத்தில் ஊழியர்களை வைத்து வேலை செய்வது என்பது மிகவும் சிரமமான விடயமாகவே இருக்கிறது. அத்துடன் உள்ளூர் உற்பத்திகள் எவ்வளவுதான் தரமாக இருந்தாலும் அவற்றை விடுத்து வெளிநாட்டு உற்பத்திகளை கொள்வனவு செய்வதில் மக்கள் காட்டுகின்ற ஆர்வமும், உள்ளூர் உற்பத்திகளுக்கு தடங்கலாகவே இருக்கின்றது. அத்துடன் எமது இயந்திரங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இயந்திரங்களை அதுபோன்றே பிரதி செய்து விற்பனை செய்ய முற்படுகின்ற சிலரிடம் நாம் அவதானமாக இருக்க வேண்டியிருக்கிறது .

கேள்வி : தங்களைப் போன்ற இளையோருக்கு சுய தொழில் விருத்தி, தொழில்நுட்ப மேம்பாடு என்பவை தொடர்பில் என்ன ஆலோசனை கூற விரும்புகிறீர்கள்?

பதில் : பொருளாதார ரீதியாக வளர்வது மட்டுமே எம்மை எப்பொழுதும் பேரம் பேசக்கூடிய சக்தியாக மாற்றும் அதற்கான ஒரே வழி கடுமையான உழைப்பு  மட்டுமே. எமது சமூகத்தில் பல்வேறுபட்ட தொழில்  செய்வதற்கான வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அவற்றை சரியான முறையில் அடையாளம் கண்டு பயன்படுத்திக்கொள்வது; நம்மையும் நம் இனத்தையும் வளர்ப்பதற்கான உந்து சக்தியாக அமையும். சுயதொழில் மூலம் மட்டுமே ஒரு தன்னிறைவான சமூகத்தை உருவாக்க முடியும் .

அவ்வாறான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு எமது இளைஞர்கள் அவர்களது பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களையும், வளங்களையும் பயன்படுத்தி சிறு கைத்தொழில்கள் ஆரம்பிப்பது மட்டுமே சிறந்த வழியாகும்.

அனேகமானவர்கள் ஒருவர் தொடங்குகின்ற அதே தொழிலை தொடங்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள். அது அவர்களுக்கு எப்பொழுதும் வெற்றியை கொடுப்பதில்லை. அவர்களுக்கு எந்த துறையில் திறமை உள்ளதோ, ஆர்வம் உள்ளதோ அவர்கள் சார்ந்த பிரதேசத்தில் அதற்குரிய கேள்வி உள்ளது. வாய்ப்புகள் மூலப்பொருட்கள் தாராளமாக எங்கு உள்ளதோ அவற்றை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும்.

அப்படி அவர்கள் தேர்வு செய்து ஒரு சுய தொழிலை ஆரம்பிக்கும் பொழுது, எப்பொழுதும் சிறப்பான முறையில் முன்னேற முடியும். ஒவ்வொரு தனிமனித முன்னேற்றம் தான் நம் சமூகத்தின் மொத்த முன்னேற்றமாக கணக்கிடப்படும்.

எனவே இளைஞர்கள் சுய தொழில் வாய்ப்புகளை சரியாக  இனங்கண்டு, சுயதொழில் மூலம் முன்னேறுவதனூடாகவே  நமது சமூகத்தையும், சமுதாயத்தையும் உயர்த்த முடியும் என்று நான் கருதுகிறேன்.

Exit mobile version