அத்துரலிய ரத்னதேரரை நெருங்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அத்துரலிய ரத்னதேரரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு உட்படுத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆயத்தங்களை திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இவர்கள் மீது குற்றம் சுமத்தியவர்களில் முதன்மையானவர் அத்துரலியே ரத்னதேரர் என்ற வகையில், தேரர் மீது விசாரணைகளை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இவர்கள் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றில் கொண்டு வரும் போது, இவர்கள் பற்றிய போதிய ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தேரர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அத்துரலியே ரத்னதேரர் இன்று காலை கண்டி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அத்துரலிய ரத்னதேரரும், அவருடன் அனுமதிக்கப்பட்ட ஏனையோரும் தற்போது, சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவரின் உடல்நிலை வழமைக்குத் திரும்பி வருவதன் காரணமாகவே இன்று காலை இவ்வாறு மாற்றப்பட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.